இலக்கியங்கண்ட காவலர்/கணைக்கால் இரும்பொறை

விக்கிமூலம் இலிருந்து
6
கணைக்கால் இரும்பொறை

மிழரசர் மூவருள் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுவோர் சேர வேந்தராவர். மூவேந் தரைக் குறிப்பிடுங்கால், சேர, சோழ, பாண்டியர் எனச் சேரரை முதற்கண் வைத்து வழங்குவது தொன்று தொட்ட வழக்கமாதல் அறிக. சங்க காலச் சேரவேந்தர் இருபிரிவினராவர். ஒரு கிளையினர், தம் இயற்பெயரை அடுத்துச் சேரல், ஆதன், குட்டுவன் என்ற சிறப்புப் பெயர்களுள் யாதேனும் ஒன்றினை மேற்கொள்வர். மற்றொரு கிளையினைச் சார்ந்தார் ஒவ்வொருவரும் அச்சிறப்புப் பெயர்களோடு, "இரும்பொறை" என்ற பிறிதொரு சிறப்புப் பெயரையும் தவறாது மேற்கொள்வர். சேர அரசர் இரு கிளையினராகப் பிரிந்து வாழ்வதைப் போன்றே, அவர் ஆண்ட நாடும், இரண்டாகப் பிரிந்தே கிடந்தது. முன்னவர், வஞ்சிமா நகரம் எனப் பெயர் பூண்ட உள்நாட்டு ஊராகிய கருவூரைத் தலைநகராகக் கொண்டு உலகாண்டு வந்தனர். இரும்பொறை மரபினர், தொண்டி, மாந்தை, தறவு முதலாம் பேரூர்களைக் கொண்ட கடற்கரை நாட்டைத் தொண்டியிலிருந்து ஆண்டு வந்தனர். அவ்வாறு ஆண்ட அரசர்களுள், கணைக்கால் இரும்பொறை என்பானும் ஒருவன். அவன் கணையன் - எனவும் அழைக்கப் பெறுவன்.

கணைக்கால் இரும்பொறை பழகுதற்கினிய பண்புடையவன். நல்லோரை நண்பனாக்கிக் கொள்ளும் நல்லியல்புடையவன். தன் தலைநகராம் தொண்டியில் வாழ்ந்து வந்த பொய்கையார் என்பார், பெரும் புலமையும், பொருட் செல்வமும் வாய்க்கப் பெற்றவராதல் அறிந்து அவரைத் தன் ஆருயிர் நண்பராக மேற்கொண்டான்.

கணைக்கால் இரும்பொறை பேராண்மை மிக்கவன். வேலேந்திப் போரிட வல்ல பெரிய படையுடையவன். படைவலியோடு, சிறந்த உடல் வலியும் உடையவன். ஒருநாள், அவன் படையைச் சேர்ந்த யானை ஒன்று, மதங்கொண்டு, பாசறை எங்கும் திரிந்து, அங்குள்ளார்க்கும், அவர் உடைமைக்கும் ஊறு பல விளைக்கத் தொடங்கிற்று. அதனை அடக்கி ஒரு நிலைக்குக் கொணர்தல், அவன் வீரரால் இயலாது போயிற்று; அவரெல்லாம் அஞ்சி, ஒருபால் ஒடுங்கினர். அஃது அறிந்த கணைக்கால் இரும்பொறை, ஆங்கு விரைந்து சென்று, யானையின் மதம் அடங்கப் பற்றிப் பிணித்தான். அதன் பின்னரே, ஆங்குள்ளோர் அச்சம் ஒழிந்து உறங்கினர்.

கணைக்கால் இரும்பொறையின் காலத்தில், சேர நாட்டை அடுத்த ஒர் இடத்தே, மூவன் எனும் பெயருடைய வீரன் ஒருவன் இருந்தான். அவனும் இரும்பொறையும் ஏனோ பகைத்துக் கொண்டனர். கணைக்கால் இரும்பொறை அவனை வென்று கைப்பற்றினான். அவன் ஆண்மை அடங்குமாறு அவன் பற்களைப் பிடுங்கினான். அவனை வென்ற தன் ஆற்றற் சிறப்பினைப் பின்னுள்ளோரும் அறிந்து போற்றுமாறு, அப்பற்களைத் தன் தொண்டி நகர்க் கோட்டையின் வாயிற் கதவில் அழுத்தி வைத்தான். கணைக்காலிரும்பொறையின் இவ்விரு பேராண்மை களையும், அவன் நண்பரும், அவன் அவைக்களப் புலவருமாய பொய்கையார், தாம் பாடிய பாட் டொன்றில் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், அக்காலை சோணாடாண்டிருந்த செங்கணான் என்பான், கணைக்காலிரும்பொறை யோடு பகை கொண்டான். தமிழ்நாடு, பண்டு பெற்றிருந்த பெருமை இழந்து, சிறுமையுற்றதற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும், தமிழரசர் மூவரும், தம்மிடையே ஒற்றுமை கொண்டு உலகாள்வதற்கு மாறாகப் பகை கொண்டு, ஒருவரை யொருவர் அழித்து வந்தமையே தலையாய காரணமாம் சேர, சோழ பாண்டியராய அம்மூவேந்தர் குடிகளுள், ஒரு குடியில் வந்த ஓர் அரசன், தன் அறிவு, ஆண்மை, கொடை, குணம் இவற்றால் சிறந்துவிடுவானாயின், ஏனைய இரு பேரரசர்களும் அவன்பால் பொறாமை கொண்டு, தம் நாடுகட்கு இடையிடை இருந்து அரசோச்சி வந்த பல சிற்றரசர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு, ஒன்று கூடிச் சென்று, போரிட்டு அச்சிறந்தானை அழிப்பதும், ஆற்றல் மிக்க அரசன், தன்போலும் வேந்தர்கள், தன் ஆண்மையை அறிந்து மதித்தற் பொருட்டு வென்று அடக்குவதும், இவ்வாறு, ஒரு குடியிற் பிறந்த ஓர் அரசன், ஏனைய குடிகளைச் சார்ந்த அரசர்களை அழிப்பதோடு அமைதி கொள்ளாது, ஒரு குடியிற் பிறந்தவர்களே, தம்முள் பகைகொண்டு போரிடுவதும், ஒரு வயிற்றில் பிறந்தவர்களே பகை கொண்டு போரிட்டு ஒருவரையொருவர் அழிப்பதும், மகன் தந்தைமீதே படை கொண்டு போவதும் அக்கால நிகழ்ச்சிகளாம்.

அக்கால வழக்கத்திற் சிறிதும் தவறாதார் போலவே சேரமான் கணைக்கால் இரும்பொறையும், செங்கணானும் பகை கொண்டனர். கணைக்கால் இரும்பொறைக்குக் கழுமலம் என்ற இடத்தில் காவல் மிக்க கோட்டை ஒன்றிருந்தது. யானைப் படை மிக்க அக்கோட்டையினை, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலாம் படைத் தலைவர்கள் காத்து நின்றனர். கணைக்கால் இரும்பொறையின் வெற்றிச் சிறப்பிற் கெல்லாம் கழுமலக் கோட்டையே காரணமாம் என்பது உணர்ந்த செங்கணான், பெரும் படையோடு சென்று, அக்கோட்டையைத் தாக்கினான். சோழர் படைக்குப் பழையன் என்பான் தலைமை தாங்கிச் சென்றான். ஆண்மையில், ஆற்றலில் மிக்கோனாய அவன், அரும்போர் ஆற்றி, அக் கோட்டையைக் காத்து நின்ற படைத் தலைவர்களைப் பாழ்செய்தான்.

சேரர் படையின் சிறந்த யானைப்படை பெரும் அழிவுக்குள்ளாயிற்று. கழுமலம் எங்கும் பிணமலை களே காட்சியளித்தன. ஒரு குளத்தின் கரையின் கீழ் அக்குளத்திற்கு நீர் வருவான் வேண்டி அமைத்த நீர்த் தூம்பின் வழியே புது வெள்ளம் புகுந்து பாய்ந்து ஒடுவதே போல், வீரரால் வெட்டுண்டு வீழ்ந்த யானையொன்றின் உடலின் கீழ்க் கிடந்த, இருபுறமும் போர்த்திருந்த தோல் கிழிந்து போன முரசின் ஊடே வீரர்களின் உடலினின்றும் ஒழுகிய செந்நீர் ஒடும் காட்சி ஒருபால்.

ஆடு மாடுகளின் கால்பட்டு ஒடிந்து, கீழ் மேலாய் வீழ்ந்து கிடக்கும் காளான்கள் போல் குதிரைகளின் காலால் தாக்குண்டு, காம்பொடிந்து, தலைகீழாய்க் கவிழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகள் ஒருபால்.

வெண்திங்களைக் கரும்பாம்பு தீண்டி நிற்பது போல் காம்பற்று வீழ்ந்து கிடக்கும் வேந்தர்களின் வெண் கொற்றக் குடையின் கீழ், வீரர்கள் வெட்டி வீழ்த்திய யானையின் கை வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

சிவந்து தோன்றும் அந்தி வானின் இடை யிடையே, கருமுகிற் கூட்டங்கள் காணப்படுவன போல், செந்நீர் வெள்ளத்தால் சிவந்து தோன்றும் அப் போர்க்களத்தின் இடையிடையே யானையின் உடல்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

பேய்க்காற்று வீசிய பனங்காட்டில், பனங்காய்கள் சிதறிக் கிடப்பனபோல், போர்க்களமெங்கும் வீரர் களின் வெட்டுண்ட தலைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

ஐந்தலை நாகத்தைத் தன் வாய் அலகுகட் கிடையே பற்றிப் பறக்கும் கருடனைப்போல், ஐந்து விரல்களும் அறுபடாதிருக்க, அறுந்து வீழ்ந்த வீரர் தம் கைகளைக் கவ்விக்கொண்டு, பருந்துகள் பறக்கும் காட்சி ஒருபால்.

இவ்வாறு களம் காட்சி தர, தன் படையையும், படைத் தலைவரையும் பழையன் பாழ் செய்வது அறிந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை கடுஞ்சினங் கொண்டு, களம் புகுந்து, பெரும் போராற்றிப் பழையனைக் கொன்றான். தன் படைத் தலைவன் பட்டான்; அவனை மாளப் பண்ணினான் கணையன் என்பது கேட்டுச் செங்கணான் விரைந்து களம் புகுந்தான்; கடும் போராற்றினான்; கணைக்கால் இரும்பொறை களைத்திருக்கும் சமயம் நோக்கிக் கைப்பற்றிக் கொண்டு போய்க் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தான்.

சிறை வைக்கப் பெற்ற சேரன் கணைக்கால் இரும்பொறை, ஒருநாள் சிறைக் காவலரை விளித்துத் தண்ணிர் தருமாறு பணித்தான். அவர்கள், அவனும் ஒரு கைதியே என்ற எண்ணம் உடையவர். ஏனைக் கைதிகள்பால் நடந்து கொள்வதே போல், அவன் கேட்ட அப்போதே தண்ணிர் கொண்டு வந்து தராது, காலம் கடந்து சென்று தந்தனர். தரும்போதும், அவன் ஒர் அரசன் என்ற எண்ணம் அற்றுப் பணிவின்றித் தந்து சென்றனர். சிறைக் காவலர் தம் செயல் கண்டு சேரன் வருந்தினான். அவர் செய்த இழிவு, அவன் உள்ளத்தை உறுத்திற்று. தந்த நீரை உண்ணாது ஒருபால் ஒதுக்கி விட்டான்; அவன் உள்ளம் ஆழ்ந்த சிந்தனையுள் ஆழ்ந்து விட்டது.

“வென்று விழுப்புகழ் பெறாது, பகைவனால் பற்றப்பட்டு, அவன் சிறையகத்து வாழ்வது இழிவாம். அந்நிலையில் பகைவன் பின் சென்று, பணிந்து, பல்லைக் காட்டி வாழ்வது அதனினும் இழிவாம். அந்நிலையுற்ற அக்கணமே, உலக வாழ்வை வெறுத்து, உயிர் துறந்து விடுதல் உயர்ந்தோர் போற்றும் உரனுடையார்க்கே உண்டாம். தம் நிலை தளரும் காலம் வந்துற்றக்கால், மானத்தை இழந்து, உயிர் வாழ எண்ணாது, உயிரை விட்டு, மானத்தைக் காப்பர் மாண்புடையார். ஆனால், அந்தோ! என் நிலை யாது: போரில் தோற்றேன்; உயிர் போயிற்றிலது. பகைவனால் பற்றப்பட்டேன்; என் உயிர் பிரிந்திலது. சிறையில் வாழ்கிறேன்; சிந்தை நொந்தேனல்லேன்; உயிர் துறக்கத் துண்iந்தேனல்லேன். உண்ணாமை மேற்கொண்டே னல்லேன். மாறாகப் பகைவர் தாமே தராதிருக்கவும், உண்ணும் நீரை யானே இரந்து வேண்டினேன். அவர் அரசன் என்ற மதிப்புத்தானுமின்றி, இகழ்ந்தளித்த தண்ணிர் இதோ! இதை உண்டு உயிர் வாழ்வதோ உயர்வு ?” என்றெல்லாம் எண்ணி, இறுதியில் உண்ணாது உயிர் துறப்பதே நன்று என அவன் துணிந்தான்.

மானத்தின் மாண்புணர்ந்த அவன் உள்ளத்தி னின்றும் பிறந்தது ஓர் அறவுரை இறக்கத் துணிந்த அவன், தான் அனுபவித்தறிந்த அவ்வறவுரையினை, உலக மக்கள் அனைவரும் அறிந்து பயன் கொள்ளுதல் வேண்டும் என எண்ணினான். உடனே, அவ்வறவுரை யினை அழகிய ஒரு செய்யுளாக்கினான்; ஆக்கிய அச் செய்யுளை ஓர் ஏட்டில் எழுதினான். எழுதிய ஏட்டைத் தன்னருகே வைத்தான்; உடல் சோர்ந்து வீழ்ந்தான்; உறங்கி விட்டான்.

“போர்க்களம் புகுந்து போரிட்டு, வாள்வடுப் பெற்றவரே, வானுலகம் சென்று மேனிலையுறுவர். இறந்து பிறந்த குழந்தையும், உருவற்றுப் பிறந்த ஊன்தடியும் அவ்வாறு வாள் வடுப்பெறும் வாய்ப்புப் பெறுவதில்லை. ஆதலின், வானிலை பெறும் வாய்ப்பு அவற்றிற்குக் கிட்டுவதில்லை. ஆனால், அவற்றையும் வானுலகம் அனுப்புதல் வேண்டும் என எண்ணும் அன்புள்ளம் உடையராய ஆன்றோர்கள் அவற்றைத் தருப்பைப் புல்மீது கிடத்தி, வெற்றிப் புகழ் பெற்ற வீரர் சென்றவாறே, இவையும் வானுலகம் செல்க!” என வாழ்த்தி, வாளால் வெட்டிப் புதைப்பர். இஃது அரசர் பண்பு. அத்தகைய அரசர் பிறந்த குடியிலே பிறந்து, சங்கிலியால் பிணிக்கப் பெற்று இழுத்துச் செல்லப்படும் நாய்களே போல், பகைவரான் பற்றப்பட்டு, அவர் சிறையகத்தே யான் வாழ்ந்தேன். அவர் அளிக்கும் உணவினை உண்ணேன் என மறுத்து உயிர் விடுவதற்கு மாறாக, வயிற்றுப் பசி தீர, வாய் திறந்து இரந்து கேட்டு, அவர் இகழ்ந்தளித்த நீரை உண்ணும் இழிவுடையே னாய் என் போலும் இழிபிறப்பாளர் பிறவாராக!” இவ்வாறு அவன் ஏட்டில் எழுதி வைத்தான்.

சேரமான் கனைக்கால் இரும்பொறை செங்கணானால் சிறை வைக்கப் பெற்றுளான் என்ற செய்தி கேட்டார் பொய்கையார். உடனே விரைந்து சென்று, செங்கணானைக் கண்டார்; கழுமலப் போர்க்களத்தே, செங்கணான் செய்த போர்ப் பெருமையினைப் பாராட்டிக் களவழி நாற்பது என்ற நூலைப் பாடினார். பாடல் கேட்டு மகிழ்ந்த செங்கணான், புலவர் வேண்டியவாறே, சேரனைச் சிறை வீடு செய்து சிறப்பித்தான்.

     “மானம் இழந்தபின் வாழாமை முன்னினிதே!”

     “ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
      கெட்டான் எனப்படுதல் நன்று”

என்ற ஆன்றோர் மொழிக்குச் சான்றாய் நின்று, மானத்தின் மாண்புரைக்கும் அறம் உரைத்த அரசன் வாழ்க! .