இலக்கியங்கண்ட காவலர்/கோப்பெருஞ் சோழன்

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
7
கோப்பெருஞ் சோழன்

காவிரிக்குக் கரையமைத்த கரிகாற் பெருவளத் தான் காலத்திற்குப் பிறகு, சோழ நாடு இரு கூறுபட்டு, இரு கிளையினரால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்று, புகார் நகரைத் தலைநகராகக் கொண்ட கடற்கரை நாடு, மற்றொன்று, உறையூரைத் தலை நகராகக் கொண்ட உள்நாடு, கரிகாலனுக்குப் பிறகு உறையூரும், உறையூர்ச் சோழருமே சிறந்து விளங்கினர். உறையூராண்ட சோழ அரசர்களுள், கோப்பெருஞ் சோழன் ஒருவன்.

நண்பர் உலகிற்கு நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கியவன் கோப்பெருஞ் சோழன். உயர்ந்த நண்பர்கட்கு உள்ளம் ஒத்தல் ஒன்றே போதும்; அவர்கள் ஒரே நாட்டில், ஒரே ஊரில் பிறந்து ஒன்று கூடி வாழ்ந்து, என்றும் பிரியாது பழகுதல் வேண்டுவதின்று. இந்த உண்மையினை உலகறியக் காட்டிய சிறப்பு கோப்பெருஞ் சோழனுக்கே உரித்து. ஒருவரோடொருவர் நட்புக் கொண்டு வாழ்வதற்கு, இருவரும் ஓர் ஊரினராதலும், ஒருவரையொருவர் பலகால் கண்டு பழகுதலும் வேண்டுவதின்று; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டால் அதுவே போதும் என்ற அரிய கருத்தினைக் கொண்ட

     “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
      நட்பாம் கிழமை தரும்”

என்ற திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், “இவ்விரண்டுமின்றிக் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின், அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்,” என விளக்கவுரை எழுதிக், கோப்பெருஞ் சோழனின் நட்பின் பெருமையினை நாடறியச் செய்துள்ளமை அறிக.

கோப்பெருஞ் சோழன், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார், புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார் போன்ற புலவர் பெருமக்கள் போற்ற, உறையூர்க்கண் இருந்து உலகாண்டிருந்தான். அப்போது பாண்டிய நாட்டில், பிசிர் என்னும் ஊரில், ஆந்தையார் என்ற பெயருடைய புலவர் வாழ்ந்திருந்தார். அவர் வாழ்ந்த பாண்டிய நாடு, அறமல்லன அற்று, அறம் விளங்கும் நாடு ஆதலாலும், அவர் ஊர், ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் பலர் வாழும் சிறப்புடையது ஆதலாலும், அவர் வீடு, மனைமாட்சியிற் சிறந்த மனையாளையும், அறிவன அறிந்த மக்களையும், குறிப்பறிந்து கடனாற்றும் ஏவலர்களையும் பெற்றுள்ளமையாலும், கவலையற்ற பெருவாழ்வு கொண்டிருந்த காரணத்தால், ஆண்டு பல ஆகியும், அவர் நரை திரை பெறா நல்லுடல் பெற்றிருந்தார். இத்தகைய பெருவாழ்வு பெற்றிருந்த பிசிராந்தையார்பால், கோப்பெருஞ் சோழன் பேரன்பு கொண்டான். அவரைத் தன் ஆருயிர் நண்பராகக் கொண்டு போற்றினான். “நண்பருட் சிறந்த நண்பர் பிசிராந்தையார்!’ என்று பாராட்டினான். "பிறர் பழிசுறாப் பெருங்குணக் குன்று பிசிராந்தையார்! இன்சொல் வழங்கும் இயல்புடையார்! என் உயிரையும்; உள்ளத்தையும் ஒருங்கே பிணித்த உயர்ந்த நட்புடையார்! ஒரு பொய் கூறின், உலகுள்ளளவும் நிற்கும் உறுபுகழ் வரும் எனக் கூறுவார் உளராயினும் அப்பெரும் புகழ் கருதியும் சிறு பொய்யும் கூறாச் சிறப்புடையார் ! நின் பெயர் யாது?’ என வினவுவார்க்கு என் பெயர் கோப்பெருஞ்சோழன் என என் பெயரைத் தம் பெயராக் கொள்ளும் தனியன்புடையார்! அவர், என் சோணாட்டின் பகை நாடாய பாண்டிய நாட்டில், மிகமிகச் சேய்மைக் கண்ணதாய பிசிர் எனும் ஊரில் வாழ்பவரே எனினும், அவரே என் உயிர் நண்பர்! உண்மை நண்பர்!" எனப் பிசிராந்தையார் புகழ் பாடும் பெருங்குணமுடையனாய் வாழ்ந்திருந்தான்.

கோப்பெருஞ் சோழனைப் போன்றே, பிசிராந்தையாரும் அவன் புகழ் பாடுவதையே தம் தொழிலாகக் கொண்டிருந்தார். எங்கும் எப்போதும் "கோப்பெருஞ்சோழன்! கோப்பெருஞ்சோழன்!" என அவன் புகழே கூறிக் கொண்டிருந்தார். “என் நண்பன், உறையூரிலிருந்து உலகாளும் உரவோன், கோப்பெருஞ் சோழன் எனும் பெயருடைய கோவேந்தன். புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார் போலும் புலவர் சூழ வாழும் பெரியோன்!” என்றெல்லாம் கூறிப் பெருமை கொள்வார். ஒரு நாள் மாலைக் காலத்தே, தம் மனையகத்தே இருந்து வெளியைப் பார்த்திருந்த போது, தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் அன்னப் பறவைகளைக் கண்டு, “குமரியாற்று மீன் உண்டு இமயம் நோக்கிச் செல்லும் அன்னப் பறவைகாள்! செல்லும் வழியில், இடையே சோழநாடு என்ற நாடொன்றுளது; அதன் தலைநகர் உறையூர்க் கண், என் உயிர் நண்பன் கோப்பெருஞ் சோழன் உளன்; அவ்வூர்ச் சென்று, அங்குள்ள அரசன் கோயிலுள், எவரையும் கேளாதே புகுந்து, அரசனைக் கண்டு, யாம் ஆந்தையாரை அறிவோம்; அவர்பால் மாறா அன்புடையேம்! என்று கூறின், அவன்தும் மனைவியர் அணியத்தக்க அழகிய அணி பல அணிவித்து அனுப்புவன். அத்துணை அன்புடையானைக் கண்டு செல்வீரோ?” என்று கூறிய கூற்று, பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழன்பால் கொண்டிருந்த நட்பின் பெருமையினை நாடறியச் செய்வது காண்க.

இவ்வாறு புலவர் போற்ற, நட்பின் பெருமை யினை நாவாரப் புகழ்ந்து கொண்டிருந்த கோப்பெருஞ் சோழன் வாழ்வில், குறையொன்று நிகழ்ந்தது. “தந்தையர் ஒப்பர் மக்கள்” என்ற முதுமொழியைப் பொய்யாக்கும் மக்கள் இருவர் பிறந்தனர். பிறந்த மக்கள், பழியுடை மக்களாயினர்; தகாவொழுக்க முடையராயினர். தந்தை இருக்கும்போதே, தாம் நாடாளத் துணிந்தனர். மக்கள் மாண்பிலராதல் கண்ட கோப்பெருஞ் சோழன், அவர்பால் அரசுரிமையை அளிக்க அஞ்சினான்; அவர் ஆட்சியில், நாட்டு மக்கள் அல்லல் பல அடைவர்; நாட்டு மக்கள் நலியத் தன் மக்கள் தனியரசு செலுத்துவதை வேந்தன் உள்ளம் வெறுத்தது. அதனால் மக்கள் விருப்பத்தினை மதிக்க மறுத்தான்; அவன் செயல் கண்டு சினந்த அவன் மக்கள், அவன்மீது படையெடுத்து வந்தனர்; படையொடு வந்தார் தன் வயிற்றில் பிறந்தாரே யாயினும், பிழையொழுக்கம் உடையராதலின், அவரை வென்று அடக்கல் அறநெறியேயாகும் எனக் கொண்ட கோப்பெருஞ்சோழன், எதிர்த்தாரை அழித்தொழிக்கத் தானும் படை திரட்டுவானாயினன்.

குடிமக்கள் நலம் குறித்துக் கோப்பெருஞ் சோழன் கொண்ட முடிவு நன்றே யாயினும், ‘கோப்பெருஞ் சோழன், பெற்றெடுத்த மக்களையே பகைவராகக் கொண்டான்!’ என்ற குன்றாப் பழி வந்து நிற்குமே என அஞ்சினர். அவன் அவைக்களப் புலவராய புல்லாற்றுார் எயிற்றியனார், அவனை அப்பழியி னின்றும் காத்தல் தம் தலையாய கடனாம் எனக் கொண்டார்; உடனே, கோப்பெருஞ் சோழன்பால் விரைந்து சென்றார். “வேந்தே! உன்னோடு பகை கொண்டு, போரிட வந்து நிற்கும் அவர்கள் நீ பிறந்த சோழர் குலப் பகைவராய பாண்டியர் குடியில் வந்தவரோ, சேரர் குடியில் வந்தவரோ அல்லர். உன்னைப் போலவே, அவர்களும் சோழர் குடியிற் பிறந்தவர்களே. அவர்களைப் பகைத்து நிற்கும் நீ, அவர்கள் குலப் பகைவராய பாண்டியனோ, சேரனோ, அல்லை; நீயும் சோழர் குலத்து வந்தவனே! ஒரு குலத்தில் பிறந்தவர்களே பகைத்துப் போரிடல் பழிக்கத் தக்கதன்றோ? மேலும் அவரோ நின் மக்கள். நீயோ அவரைப் பெற்றெடுத்தோன். நீ தேடி வைக்கும் செல்வத்தினை ஆளப் பிறந்தவர்கள் அவர்கள்; அவர்கட்கு ஆட்சிச் செல்வத்தினைத் தேடிவைக்கும் கடமையுடையாய் நீ இருந்து ஈடிலாப் புகழ் பெற்று வாழ்ந்த நீ இறந்த பின்னர் இவ்வரசினை அடைதற் குரியார் அவரேயன்றோ? இவற்றை எண்ணிப் பாராது பெற்ற மக்கள் மீதே போர் கொண்டு எழுதல் அறிவுடைமையாகுமோ? களத்தில் நீ பெற்ற இக் காளையர் இருவரும் இறக்க, நீ வெற்றி பெறுகின்றனை என்றே கொள்வோம். அவ்வாறாயின், நினக்குப் பின்னர், இந்நாட்டாட்சியினை எவர்பால் அளிப்பாய்! நினக்குப் பின், இந்நாடு, ஆள்வோரைப் பெறாமல் அழிய விடுதல் அறமாமோ? அதற்கோ இத்துணைப் பாடு? மேலும் களம் புகுந்தார் இருவரும் வெற்றி கோடல் காணக்கூடாத காட்சியாம். ஆக இரு திறத்தாரும் வெற்றி கோடல் இயலாது. நின்னோடு பகை கொண்டு வந்திருப்பார் இருவராயும் இளைஞராயும் இருக்க, நீ தனிமையும் முதுமையும் உடையையாதலின் ஒரு வேளை, அவர் வெற்றி பெற, நீ தோற்று நிற்பையாயின், அது நினக்குப் பெரும் பழியாமன்றோ? இவற்றை யெல்லாம் எண்ணிப் பாராது போர் கொண்டு எழுதல் அறிவுடைமை ய்ாகாது. மேலும், அடைந்தாரைக் காக்கும் அருளும், பிழைத்தாரைத் தெளிவிக்கும் அறிவும் உடைய பெரியோனாய நீ, வானுலகோர் வாழ்த்தி வரவேற்க விண்ணுலகம் செல்ல வேண்டுமேயன்றி, மக்களைப் பகைத்து மாண்டான் எனப் பிறர் பழிக்க இறத்தல் கூடாது. ஆகவே, போர் ஒழித்துப் பேரறம் புரிய இன்னே எழுக!” என அவன் உள்ளம் கொள்ளும் அறவுரையினை அழகாக எடுத்துக் கூறினார்.

புலவர் கூறிய பொன்னுரை கேட்ட கோப் பெருஞ்சோழன், போர் புரியும் எண்ணத்தைக் கை விட்டான். ஆயினும், மக்கள்தம் மாண்பிலாச் செயலால் மனம் வருந்தினான்; பெற்றவனைப் பகைக்கும் மக்களைப் பெற்றவன் என்ற பழிச்சொல் கேட்டு நாணினான்; அவன் உள்ளம் மானம் இழந்து வாழ மறுத்தது. தனக்கு நேர்ந்த அப்பழிச் சொல் தன் பகையரசர் காதுகளில் சென்று புகு முன்னரே, உயிர்விடத் துணிந்தான்.

தன் அவைப் புலவர்களை அழைத்தான்; தன் அகத்தெழுந்த கருத்தினைத் தெரிவித்தான்; வடக்கிருந்து உயிர்விடத் துணிந்ததை வகுத்துரைத்தான். அரசன் கொண்டது அறநெறியே யாயினும், அவன் போலும், சிறந்த அரசனை இழக்க அவர் விரும்பினாரல்லர். புலவர், தன் கருத்திற்கு இசையாராதல் அறிந்த அரசன், அரிய ஒர் அறவுரையினை அவர்க்கு அளித்தான். "அன்பும் அறிவும் உடைய புலவர் பெருமக்களே! யானை வேட்டை மேற்கொண்டு சென்றவன், தான் சென்றவினையைத் தப்பாது முடித்து, யானையோடு வருதலும், யார்க்கும் எளிதாய சிறிய பறவை வேட்டை மேற்கொண்டு சென்றவன், அதில் தோற்றுப் பறவை பெறமாட்டாமல் வறிதே வருதலும் உலகில் உண்டு. ஆகவே எண்ணும் எண்ணமெல்லாம் மிக உயர்ந்த எண்ணமாகக் கொண்ட பெரியோர்க்கு ஆகும் காலம் உண்டாயின், அவர் எண்ணியன எல்லாம் எளிதே கைவரப்பெறுதல் உண்டாம். அத்தகையர், விண்ணுல கடைந்து எண்ணிலா இன்பம் அடைதலும், அவ்விண்ணுலகத்தினும் மேலாம் வீட்டுலகம் அடைந்து, பிறவாப் பெருநிலை அடைதலும் எய்துவர். ஒருவேளை அத்தகைய பேரின்ப நிலையினைப் பெறுதல் இயலாது போயின், உலகுள்ளளவும் அழியாது நிற்கும் உயர்ந்த புகழ் பெறுதல் உறுதி. ஆகவே அறிவுடையார், நல்வினையினை எண்ணியபோதே, எண்ணியாங்கே, விரைந்து செய்வர். அத்தகைய நல்லறிவு நன்கு வாய்க்கப் பெறாதாரே, நல்வினை செய்ய வேண்டுமோ? செய்யும் வினையெல்லாம் நல்லவினையாகவே இருத்தல் வேண்டுமோ? ஒரு சில நல்வினை மட்டும் செய்தால் போதாவோ? செய்யும் நல்வினை, செய்ய நினைத்த, இப்,ோதே செய்து முடித்தல் வேண்டுமோ? சின்னாள் கழித்துச் செய்தல் கூடாதோ?’ என்றெல்லாம் ஐயங் கொண்டு, அவற்றில் தெளிவு பெற மாட்டாது அழிவர். யான், அவர் போலும், தெளிவிலா அறிவுடையேனல்லேன். நல்லதன் நலனும், தீயதன் தீமையும் தெளிய உணர்ந்த யான், வடக்கிருந்து உயிர்விட்டு, வாரா நெறியடையும் நல்வினையினை இன்றே புரியத் துணிந்தேன். ஆகவே புலவர்காள்! அதற்கு ஆவன புரிவீராக!” என அறவுரை கூறி வேண்டி நின்றான்.

அரசன் அறிவித்த அறவுரையினைப் புலவர்களும் அறிவர். ஆதலின், வடக்கிருக்கத் துணிந்த வேந்தனைத் தடை செய்யாது, அவனோடு தாமும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தனர். ஆனால், அவருள் பொத்தியார்தம் அருமை மனைவியார், அக் காலை மகப்பெறும் நிலையில் உள்ளார் என அறிந்த அரசன், அந்நிலையில் அவர் அவளுக்குத் துணையாக இருப்பதை விடுத்து, வடக்கிருந்து உயிர் விடுதல் அறமாகாது என உணர்ந்து, அவரை மட்டும், அது கழிந்து வந்து வடக்கிருக்குமாறு வேண்டிக் கொண்டான். உடனே அவர் நீங்கவுள்ள அனைவர்க்கும், காவிரியாற்றின் இடையே, ஆற்றிடைக் குறையொன்றில், வடக்கிருத்தற்காம் இடம் வகுப்பாராயினர்.

அந்நிலையில், ஆங்கு இடம் அமைக்கும் பணி மேற்கொண்டிருந்தார்.பால், கோப்பெருஞ் சோழன் சென்று, இடம் அமைக்குங்கால், தனக்கு அமைக்கும் இடத்தை அடுத்துத் தன் ஆருயிர் நண்பராய பிசிராந்தையார்க்கும் இடம் அமைக்குமாறு வேண்டினன். ஆங்கிருந்த புலவர்கள் அது கேட்டு, “வேந்தே ! ஆந்தையார், உன் புகழும், பெயரும் அறிந்தவரேயன்றி, உன்னைக் கண்டு பழகியவர் அல்லர். மேலும், நீ அவரை நண்பராகக் கொண்டதும், அவர் நின்னை நண்பராகக் கொண்டதும், எத்தனையோ ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதுவரை ஒரு முறையேனும் உன்னைக் காண வந்தாரல்லர். மேலும் அவர் உள்ள இடமோ பாண்டிய நாட்டில், நனிமிகச் சேய்மைக்கண்ணது. இந்நிலையில் நின்னிலை அறிந்து இப்போது வருவதோ, வந்து வடக்கிருந்து உயிர் விடுவதோ இயலுவதன்று. ஆகவே, அவர்க்கென ஒர் இடம் வகுத்தல் வேண்டுவதில்லை,” என்றனர்.

புலவர் கூறுவன கேட்ட கோப்பெருஞ் சோழன், “அறிவுடைப் பெருமக்களே! பிசிராந்தையார் மிகச் சேய்மைக்கண் உள்ளார் என்பது உண்மையே. என்றாலும் அவர் வருவர். இன்று வரை ஒருமுறையும் வந்திலர் என்பதும் உண்மையே. என்றாலும் இப்போது வருவர். துன்பம் நேர்ந்த காலத்து வாராது இருந்தனர் என்ற பழிச்சொல் கேட்க அவர் செவி நாணும். யான் அரசனாய் ஆண்டிருந்த அக்காலை வாராத அவர், அரசிழந்து, உயிர் துறக்கத் துணிந்து நிற்கும் இன்று வாராதிரார்; உறுதியாக வருவர்; ஆகவே, வருவாரா, வரினும் இப்போது வருவாரா என்ற ஐயம் உங்கட்கு வேண்டாம். அவர்க்கும் ஒர் இடம் அமைத்து வையுங்கள்,” என்றான். கோப்பெருஞ்சோழன் கூறியவாறே, ஆந்தையார்க்கும் ஒர் இடம் அமைத்து விட்டு, அனைவரும் வடக்கிருந்து நோற்கத் தொடங்கினர்.

தன் ஆருயிர் நண்பன் கோப்பெருஞ் சோழனுக்கு உற்றது அறிந்தார் ஆந்தையார் உறையூருக்கு ஒடோடி வந்தார். ஆனால் அந்தோ! அவர் வருவதற்கு முன்னரே அரசன் வடக்கிருந்து நோற்றலை மேற்கொண்டது அறிந்து வருந்தினார். வருந்தி என்ன பயன்! தாமும் அவனோடு வடக்கிருக்கத்துணிந்தார். அரசன் கருத்தும் அஃதே ஆதல் அறிந்து மகிழ்ந்தார். அவன் ஒதுக்கிய இடத்தே இருந்து உயிர்விட்டார். “வருவார்” என்று கூறிய வேந்தன் சொல் வன்மையினையும், அவன் சொல் பழுதாகாவண்ணம் வந்து வடக்கிருந்த புலவர் பேரன்பினையும் வியந்து வியந்து பாராட்டினர் மக்கள்.

கோப்பெருஞ் சோழன் தந்தை யாரோ? பிசிராந்தையார் தந்தை யாரோ? அவன் தாய் யாரோ? அவர் தாய் யாரோ? அவன் பிறந்த - இடமோ சோழ நாடு; அவர் பிறந்த இடமோ பாண்டிய நாடு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவர் அல்லர்; ஒருவரோ டொருவர் பழகினாரல்லர்; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டன; அவ்வளவே. இந்நிலையில் இருவர் உயிரும் ஒன்று கலக்கும் உயரிய நண்பராகிவிட்டனர். இதுவன்றோ உண்மை நட்பு! இவ்வாறு உயர்ந்த உண்மை நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய வேந்தன் உரைத்த விழுமிய அறத்தின் வழிச்சென்று வாழ்வு பெறுவோமாக!