இலங்கையில் ஒரு வாரம்/5
5
யாழ்ப்பாணத்தில் இடறி விழுந்தால் ....... இது என்ன? இடறி விழுவதற்கு யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டுமா? உள்ளூரிலேயே இடறி விழக் கூடாதா ?.... விழலாம், ஐயா, விழலாம்! உள்ளூரிலே நன்றாக இடறி விழலாம். ஆனால் உள்ளூரிலே இடறி விழுந்தால் எங்கேயாவது நடுச்சாலையில் விழுந்து தொலைப்போம். அல்லது ஒரு டிராம் வண்டி அல்லது மோட்டார் வண்டி அல்லது ஒரு ரயில் வண்டி மீது விழுந்து தொலைப்போம். வண்டிகள் வீணில் சேதம் அடையும்; போக்குவரத்து தடைப்படும்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இடறி விழுந்தால் ஒரு உபாத்தியாயர் அல்லது ஒரு கல்விமான் மீது தான் விழுவோம். அப்படி விழுவதினால் அவர்களுக்குச் சேதம் ஏதேனும் ஏற்பட்டால் யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆயிரம், பதினாயிரம் பேரில் ஒருவர் இருவர் குறைந்து போனால் என்ன பிரமாத நஷ்டம்? ஒருவேளை நாம் இடறி விழும்போது பக்கத்தில் ஒரு ஆசிரியர் அல்லது கல்விமான் இல்லாமற் போனாலும், நாம் தரையில் விழுந்துவிட முடியாது. யாழ்ப்பாண நகரத்துக்குள் ஒரு சாலையிலோ, ஒரு வீதிலோ தரையில் விழுந்து வைக்கலாம் என்ற ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. ஏனெனில் அப்படி நீங்கள் இடறிக் கீழேவிழப் போகிறீகள் என்பதற்கு அறிகுறி காணப்பட்டவுடன் ஒரு சுகாதார அதிகாரி ஓட்டமாய் ஓடி வந்து நீங்கள் தரையில் விழாமல் தாங்கி எடுத்துக் கொண்டுபோய் உங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பார்!
குப்பைத் தொட்டியில் போடும் உரிமை பத்திரிகாசிரியர்களுக்குத்தான் உண்டு என்று அதுகாறும் எண்ணி யிருந்தேன். யாழ்ப்பாணத்துச் சுகாதார அதிகாரிகளுக்கும் அந்த உரிமை உண்டு என்று தெரிந்தது. பத்திரிகாசிரியர்கள் கதை கட்டுரைகளை மட்டும்தான் குப்பைத் தொட்டியில் போடுவார்கள். யாழ்ப்பாணத்துச் சுகாதார அதிகாரிகளோ அந்தக் கதை கட்டுரைகளை எழுதியவர்களைக்கூடக் குப்பைத் தொட்டியில் தூக்கிப்போட்டு விடுவார்கள்!
இது எப்படி எனக்குத் தெரிந்தது என்றால், யாழ்ப்பாணத்தில் நானும் ஸ்ரீ தூரனும் தங்கியிருந்த இரண்டு தினங்களில், ஒரு நாள் மாலை போலீஸ் அதிகாரியைப் போல் உடுப்புத் தரித்த ஒருவர் வந்தார். “ஐயா! இந்த ஊர் ஆலயத்தில் திருவிழா நடைபெறுகிறது, நீங்கள் ஐந்து நிமிடம் வந்து சமுகம் தர வேண்டும்!” என்றார். என் காதுகளை நான் நம்பவில்லை. எப்போதுமே என் காதுகளின் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கைதான். அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “எங்கே வரவேண்டும் என்கிறீர்கள்?” என்றேன். “ஆலயத்துக்கு வரவேண்டும். விழா நடக்கிறது” என்றார்.
ஒருவேளை யாழ்ப்பாணத்தில் ஆலயம் என்பதற்குப் போலீஸ் ஸ்டேஷன் அல்லது சிறைச்சாலை என்ற பொருள் இருக்குமோ என்று யோசித்தேன். எல்லாவற்றுக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்று துணிந்து புறப்பட்டேன். கோயிலைச் சுற்றியுள்ள ராஜவீதிகளில் ஒன்றுக்கு வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினோம். என் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்தேன்; அப்போது ஒரு காகிதம் கீழே விழுந்தது. உடனே அந்தப் போலீஸ் உடுப்பு தரித்த சுகாதார உத்தியோகஸ்தர் அந்தக் காகிதத்தைப் பொறுக்கி எடுத்து வீதி ஓரத்தில் வைத்திருந்த குப்பைத் தொட்டியில் கொண்டுபோய்ப் போட்டார். பிறகு நான் வேண்டுமென்றே கைக்குட்டையைக் கீழே போட்டேன். அதையும் பொறுக்கிக் கொண்டுபோய்த் தொட்டியில் போட்டார்.
“பெரியசாமி! ஜாக்கிரதை! தப்பித்தவறித் தரையில் விழுந்து விடவேண்டாம். விழுந்தால் நம்மையும் கொண்டு போய்த் தொட்டியில் போட்டுவிடப் போகிறார்!” என்று எச்சரித்தேன்.
“பார்த்தீர்களா? நம் ஊரில் கோயில் உற்சவம் என்றால் சுற்றுப் பக்கங்களில் எவ்வளவு குப்பையும் கூளமுமாயிருக்கும்? இந்த வீதிகளில் ஒரு குப்பை கூளங்கூட இல்லையே?” என்றார் தூரன்.“இந்த ஊரில் குப்பை கூளத்துக்கு மெத்த கிராக்கி போல் தோன்றுகிறது. கறுப்பு மார்கெட்காரர்கள் அமுக்கி விட்டார்களோ, என்னமோ?” என்றேன்.
“இல்லை ஐயா! திருவிழாவை முன்னிட்டு வீதி களைச் சுத்தம் செய்து வைத்திருக்கிறோம்!” என்றார் அதிகாரி.
“ஓகோ! அப்படியா?”
“வீதிகள் தூய்மையாக இருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா ?”
“பிடித்திருக்கிறது! ஆனாலும் ஒரு குறை. வீதி களை யெல்லாம் சுத்தம் செய்து வைத்திருந்தால் மட்டும் போதுமா? ஏன் நெடுகிலும் ரத்தினக் கம்பளம் விரித்திருக்கக் கூடாது?” என்றேன்.
“ரத்தினக் கம்பளம் விரித்தால் தரை அழுக்காகி விடும், ஐயா!” என்றார் அந்தச் சுகாதார அதிகாரி.
நாலு வீதிகளையும் சுற்றிப் பார்த்த பிறகு ஆலயத்துக்குள் செல்ல நண்பர் பெரியசாமித் தூரன் விரும்பினார். நான் கண்டிப்பாக மறுத்து விட்டேன்.
“நித்தியமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய்
[நீங்காச்
என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். கடவுள் சுத்த வடிவமாக இருக்கிறார் எனில், அந்த நாலு வீதிகளிலும் அவர் கட்டாயம் இருக்கத்தான் வேண்டும். கடவுளைத் தரிசிக்க ஆலயத்துக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?
மேலும், ஒரு கட்டுரை எழுதும்போது எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போவது உசிதம் அல்ல. ஆகையால் இடறி விழுகிற கட்டத்துக்கே திரும்பி வந்து சேரவேண்டிதுதான். யாழ்ப்பாணத்தில் எங்கே பார்த்தாலும், இடறி விழும் இடமெல்லாம், ஆசிரியர்கள் அல்லது கல்விமான்களாகவே இருப்பார்கள். நகர மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு பிரமுகரைக் குறிப்பிட்டு, “இவர் இன்னார். பெரிய கல்விமான் (ஸ்காலர்)” என்று ஆசிரியர் பேரின்பநாயம் அறிமுகம் செய்வித்தார்.
“கல்விமான்கள் இருக்கட்டும், ஐயா! கல்விமான்களைத்தான் இந்த ஊரில் எங்கே திரும்பினாலும் பார்க்கிறோமே ! கல்விமான் இல்லாத ஒருவரைக் காட்டுங்கள்!” என்று கேட்டேன்.
அந்த நண்பரால் காட்ட முடியவில்லை. என் ஆகாசக் கோட்டை. தகர்ந்தது. கல்விமான் அல்லாத ஒருவரைக் கண்டுபிடித்தால், அவரைக் கொண்டு “கல்விமான் அல்லாதார் சங்கம்” ஒன்று ஏற்படுத்தி, அவர்களுக்குத் தனிப்பட்ட உரிமைகளும் சட்டசபை ஸ்தானங்களும் உத்தியோகங்களும் வேண்டுமென ஓர் இயக்கத்தையே ஆரம்பித்து வைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அது சாத்தியமாகவில்லை!
மறுபடியும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் வருவோம். யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூட ஆசிரியர்களும் அதிகம்; பள்ளிக்கூடங்களும் ஏராளம்.
“யாழ்ப்பாணத்தின் மாபெருங் கைத்தொழில் என்ன?” என்று கொழும்பில் உள்ளவர்கள் ஒரு கேள்வி போட்டுக் கொள்வார்களாம். “பள்ளிக்கூடந்தான்!” என்று பதிலும் சொல்வார்களாம். இப்படி அவர்கள் சொல்வதற்குத் தகுந்தாற்போல் ஆசிரியர் ஸ்ரீ ஹாண்டி பேரின்பநாயகம் கையில் ஒரு தடி வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
பத்து வருஷத்துக்கு முன்னால் ஸ்ரீ பேரின்ப நாயகத்தை நான் பார்த்த போது அவர் கையில் பிரம்பு இல்லை; இப்போது இருந்தது. அப்போது அவர் பள்ளிக்கூட ஆசிரியர் அல்ல. ஆனால் இப்போது ஹிந்து ‘கோலேஜ்’ தலைமை ஆசிரியர்.
“ஆகவே இந்தக் கைக் தடியினால் உங்கள் பள்ளிக் கூடத்தில் தொழில் நடத்துவீர்களோ? பிள்ளைகளை அடித்து வெளுத்து விடுவீர்களோ?” என்றேன்.
“அதெல்லாம் இங்கே நாங்கள் பிள்ளைகளை அடிக்கிற வழக்கம் இல்லை !!” என்றார் ஸ்ரீ பேரின்ப நாயகம்.
“அப்படியானால் பெற்றோர்களைத்தான் அடிப்பீர்களோ?” என்று பீதியுடன் கேட்டேன்.
“பெற்றோர்களையும் நாங்கள் அடிக்க மாட்டோம்.........”
“பின்னே, உங்கள் கையில் தடி இருப்பது எதற்காக?”
“காலில் கொஞ்சம் நீர் கட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால் சிறிது சாய்ந்து நடக்க வேண்டியிருக்கிறது. நடப்பதற்கு உதவியாக இந்தத் தடியை வைத்துக் கொண்டிருக்கிறேன்.”
“நீங்கள் சாய்ந்து நடப்பதும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது!” என்றேன்.
அந்தக் குறிப்பை அறிந்து ஸ்ரீ ஹாண்டி பேரின்பநாயகம் நானும், ஸ்ரீ பெரியசாமித் தூரனும் ஊருக்குப் புறப்படுகையில் தலைக்கு ஒரு அழகிய கைத்தடி பரிசாகக் கொடுத்தார்.