இலட்சிய வரலாறு/இலட்சிய விளக்கம்
இலட்சிய விளக்கம்
திராவிட நாடு திராவிடருக்கே
இது ஒரு கட்சியின் முழக்கமல்ல; ஒரு இனத்தின் இருதயகீதம்! மூலாதார உண்மை. எங்கும் எந்தவகையான மக்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட உண்மை. இந்தக் கருத்தை, நாம் கூறுகிறோம் என்ற காரணத்தால், எதிர்க்கத்தான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அலட்சியப்படுத்துபவர்கள், நமக்கல்ல நாட்டுக்குக் கேடு செய்கிறார்கள், தங்கள் இனத்துக்குத் துரோகம் செய்கிறார்கள்.
சின்னஞ்சிறு நாடுகள், இயற்கைவளமற்ற நாடுகள், இரவல் பொருளில் வாழ்வு நடத்தவேண்டிய நாடுகள்கூடத் தனி அரசுரிமை பெற்றுவிட்டன. இங்கோ, இலக்கியச்செறிவை இருஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்று வாழ்ந்துவந்த நாடு. இன்று மற்ற நாட்டுடன் பிணைக்கப்பட்டு, பிடி ஆளாகிக்கிடக்கிறது. தங்கள் வாழ்நாளில் தாய்நாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்தெறிவதை, பெரும்பணி என்று கருதும் வீர்ர்களுக்கு அழைப்பு விடுகிறோம்; திராவிடநாடு திராவிடருக்கே என்பதை மூலை முடுக்கிலுள்ளோரும் அறியச் செய்யுங்கள்- அணிவகுப்பில் சேருங்கள் என்று கூறுகிறோம்.
நமது கொள்கையின் மாசற்ற தன்மையை, திட்டத்தின் அவசியத்தை, இலட்சியத்தின் மேன்மையை, அனைவரும் அறியும்படி, விளக்க, இந்த ஜூலை 1-ஆம்தேதி, திராவிடப் பிரிவினை தினமாகக் கொண்டாடத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. திராவிடநாடு திராவிடருக்கு என்ற திட்டததை, நாம் அர்த்தமற்றுத் தீட்டிக் கொள்ளவில்லை- தக்க- மறுக்க முடியாத காரணங்கள் உள்ளன.
கண்டனம் செய்வோர், கேலி செய்வோர், அலட்சியமாகக் கருதுபவர், அசட்டை செய்பவர், யாராயினும் சரியே- திராவிடநாடு திராவிடருக்கே என்பதற்காக நாம் கூறும் காரணங்களைக் கொஞ்சம் ஆர அமர இருந்து யோசித்துப் பார்த்துவிட்டு ஒருமுடிவு்க்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம். பன்முறை கூறியிருக்கிறோம், இக்காரணங்களை இம்முறை இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்திலே நாட்டு மக்களுக்கு மீ்ண்டும் ஓர்முறை, அதே காரணங்களைக்கூறுகிறோம்:
1. இந்தியா என்பது ஒருகண்டம். எனவே, அது பலநாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பாக் கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பா முழுவதும் ஒருகுடைக்கீழ் இருக்கவேண்டுமென யாரும் கூறவில்லை. இந்தியாவும் ஒரே குடையின்கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.
2. இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித்தனி ஆட்சி கொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்துவந்தது. பிரிட்டிஷார் தமது ஆட்சி சரியாக நடக்கச் சௌகரியம் தேடிக்கொள்ளவே இந்தியாவை ஒரேநாடு என்று கருதினர்; மற்றவரையும் கருதும்படி செய்தனர்.
3. மதம், மொழி, கலை, மனோநிலை, ஒருகுடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்றுப் பந்தத்துவம்- இவைகள்தாம் இன இயல்புகள். இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உள்ளன. அவைகளை மூன்று பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம்: திராவிடர், முஸ்லீம், ஆரியர் என்று. இந்த மூன்று இனங்களில், திராவிடரும் முஸ்லீமும் இன இயல்புகளில் அதிகமான வித்தியாசம் இல்லாதவர்கள். ஆரிய இன இயல்புகளுக்கும் மற்ற இரு இன இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது; பகைமை பெரிதும் உண்டு. இந்தத் தனித்தனி இயல்புகள் இருப்பதால், இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்த இனத்துக்கென இடமும் ஆட்சியும் கிடைக்கும். இல்லையேல் எந்த இனம் தந்திரத்தாலும், சூது சூழ்ச்சியாலும், தனனலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுவாபத்திலும் கைதேர்ந்து இருக்கிறதோ, அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழவேண்டி நேரிடும்.
4. இந்தியா ஒரே நாடு என்று கூறி வருவதால், ஆரிய ஆதிக்கம் வளருகிறது. ஆரிய ஆட்சியின் காரணமாக மற்ற இனநலன்கள் தவிடு பொடியாயின.
5. முரண்பாடுள்ள இயல்புகளைக்கொண்ட இனங்களைச் சூழ்ச்சியால் பிணைத்துக் கட்டுவதால், கலவரமும், மனக்கிலேசமும், தொல்லையுமே வளர்ந்தன. எனவே, எதிர்காலத்தி்ல் தொல்லைகள் வளர்ந்து இந்தியா இரத்தக்காடாகாதிருக்கவேண்டுமானால், இப்போதே சமரசமாக, இனவாரியாக இந்தியாவைப் பிரிக்கவேண்டும்.
6. இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதிதுமல்ல, கேட்டறியாததுமல்ல. ஏற்கனவே, இந்தியாவில், பிரிட்டிஷ் இந்தியா, சுதேச இந்தியா, பிரெஞ்சு இந்தியா, டச்சு இந்தியா எனப் பல இந்தியாக்கள் உள்ளன. இதுபோல் முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக்கேட்பது தவறல்ல.
7. சுதேச சமஸ்தானங்கள் மட்டும் 574 உள்ளன. அவைகளில் தனித்தனி ஆட்சி, தனித்தனி முறை. அதுபோல், மூன்று பெரும்பகுதிகள் தனித்தனி ஆட்சிமுறையுடன் தத்தமது இன இயல்புகளை வளர்த்துக்கொள்ள வழிதேடிக் கொள்வது, தடுக்கமுடியாத உரிமை.
8. ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்ட துருக்கி, வல்லரசுகளில் தலைசிறந்ததாக ஆனதுபோல, இன வாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு வட்டாரமும், தனிக்கீர்த்தியுடன் விளங்கும்.9. தனித்தனி வட்டாரமானால், இராணுவ பலத்தை அவரவர் இயல்புகளுக்கு ஏற்றபடி, வளர்க்க ஏது உண்டாகும்.
10. அசோகர், கனிஷ்கர்,க்ஹர்சர், சமுத்திரகுப்தர், அக்பர் முதலிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும், இந்தியா ஒரேநாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிடநாடு எனத் தனிநாடு இருந்தது.
11. தனித்தனி வட்டாரம் பிரிந்தால், அங்கங்குள்ள வசதிகளுக்கேற்றபடி பொருளாததார விருத்திசெய்துகொள்ளவும், ஒரு வட்டாரம் மற்ற இடங்களைச் சுரண்டும் கொடுமையை ஒழிக்கவும் முடியும்.
12. அந்தந்த இனத்துக்கென தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான், அந்தந்த இனமும், மற்றவைகளிடம் சம உரிமை, சமஅந்தஸ்து பெறமுடியும்.
13. இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித்தான் ஆரியர்கள், இமயம் முதல் குமரிவரை உள்ள இடத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டு, அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான்களாய், மதத்தில் குருமார்களாய், சமுதாயத்தில் பூதேவர்களாய், பொருளாதாரத்தில் பாடுபடாது உல்லாச வாழ்வு வாழக்கூடியவர்களாய் இருக்கவும், மற்ற இனத்தவர் தாசர்களாய், பாட்டாளிகளாய் உழைத்து உருவின்றிச் சிதைபவர்களாய் வாடவும் நிலைமை ஏற்பட்டது. இந்தக்கொடுமை நீங்க, வர்க்கத்துக்கொரு வட்டாரத்தைப் பிரிப்பதுதான் சிறந்தவழி!
14. ஒரு இனத்திடம் மற்றொரு இனத்துக்கு நம்பிக்கை இல்லை. ஒரு இனத்து ஆட்சியின் கீழ் மற்றொரு இனம் இருப்பது என்று சொன்னாலே அச்சம் உண்டாகிவிட்டது. அச்சமும் அவநம்பிக்கையும் பெற்றெடுக்கும் குழந்தையே பயங்கரப்புரட்சி. இந்தப் பயங்கரப்புரட்சியைத் தடுக்கவே, இப்போது பிரியவேண்டும் என்கின்றோம்.15. இந்தியா பிரியாது இருந்தால் இதுவரை, ராணுவப் பொருளாதார அறிவுப் பலம் வளர்ந்ததாகவோ, இந்திய இனம் என்ற புதுச் சமுதாயம் அமைந்ததாகவோ கூற எந்த ஆதாரமும் இல்லை. ஒரு இனத்தின் குரல்வளையை மற்றொரு இனம் அழித்து நெரித்து்க் கொல்லாது போனதற்குக் காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏககாலத்தில் அடக்கிவைத்திருந்தததால்தான். எனவே, பிரிட்டிஷ் பிடிபோய்விட்டால், இந்தியா இரணகளமாகும். இதற்கு ஐரோப்பாவில் அடிக்கடி நடக்கும் போர் ஒரு உதாரணம். எனவே, இத்தகைய இன்னல்கள் உண்டாகாதிருக்க இனவாரியாக இடம் பிரித்து விடுவதே, ஆபத்தைத் தடுக்கும் வழி.
எனவே, இனவாரியாக இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித்துத் தனிச் சிறப்புடன் விளங்கவும், ஆரிய ஆதி்க்கம் அடங்கவும் பொருளாதாரச்சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும், சாந்தம் சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவேதான் இந்தியா இனவாரியாகப்பிரியவேண்டும் என்று, இந்தியாவை இனப்போர்க்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் கூறுகின்றனர். இதை மறுப்பவர்கள், சரிதத்தை மறந்தவர்களாக இருக்கவேண்டும் இல்லையேல் சரிதத்தை மக்கள் தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணங்கொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரே இனஇயல்பு அதாவது ஆரிய ஆதிக்கம், மற்றவைகளை மிதித்துத் துவைத்து அழி்க்கவேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதைபோல, இந்தியாவைச் செய்துவிட்டுத் தாங்கள் எப்படியேனும் வழிசெய்து கொள்ளவேண்டும் என்ற கேடுகால யோசனையும் கொண்டவர்களே, இந்தப்பிரிவினைத் திட்டத்தை எதிர்ப்பர்.
இன்னோரன்ன காரணங்களையும், ஆரிய ஆதி்க்கம் வளர்ந்த விதம், அதனால் பிற இயல்புகள் அழிந்த கொடுமை, இனி ஆரியத்தை அடக்கித் தீரவேண்டியதன் அவசியம் ஆகியவைகளை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினோம். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதங்கள் ஏலாதனவென்று விளக்கினோம். காரணங்களை அவர்கள் கதைகளால் வீழ்த்தவும், ஆதாரங்களை வெறும் அளப்பினால் அடக்கவும், சரித்திரத்தைச் சவடாலால் சாய்க்கவும், உறுதியை உறுமிக்கெடுக்கவும் நமது எதிரிகள் முனைந்து நிற்பதைப் பொருட்படுத்தாது நம்கடனை நாம் செய்தல் வேண்டும் என்று கூறினோம்.
இஸ்லாமியர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தங்களின் தலைவரின் திட்டத்தின்படி பணிபுரிந்து வெற்றிபெற்றுவிட்டனர். வடக்கே இனஅரசு -பாகிஸ்தான்- ஏற்பட்டுவிட்டது.
அவர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போராடி வெற்றிபெற்றார்களோ, அந்த இலட்சியத்தை, அவர்கள் முழக்கமாகக் கொள்ளாததற்கு முன்பு நாம்கொண்டோம்; அவர்கள் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றாததற்கு முன்பு நாம் திராவிடநாடு திராவிடருக்கே என்று தீர்மானம் செய்தோம். நாடெங்கும், இந்த இலட்சிய்த்தை விளக்கிப் பிரசாரம் செய்தோம்... செய்தும் வருகிறோம்.
பாகிஸ்தான் தேவை என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களைவிட, அதிகமான, சிலாக்கியமான காரணங்கள், திராவிடத்தனி அரசு தேவை என்பதற்கு உள்ளன. ஆனால், திராவிடப் பெருங்குடி மக்கள், இதனை இன்னும் உணர்ந்ததாகக் காணோம்.