உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சிய வரலாறு/போர்வாள்

விக்கிமூலம் இலிருந்து

போர்வாள்


திருச்சியிலே! அதற்கு அடுத்தகிழமை நாம் கூடினோம். அங்கே ராஜகோலாகலர்கள் இல்லை! மிட்டாமிராசுகளும், ஜெமீன் ஜரிகைக் குல்லாய்களும் இல்லை! மாநாட்டுப்பந்தலிலே, வந்திருந்த தாய்மார்களின் தங்கக் கட்டிகள் தூங்குவதற்கு ஏணைகள் கட்டிவிடப்பட்டன! கொலுவீற்றிருக்கும் ராஜா கொடுத்த 2000-த்துக்காக, அவருடைய கோணல் சேட்டையைச்சகித்துக் கொண்டிருந்தனர் காங்கிரசில்- இங்கோ, அழுகிற குழந்தையை முத்தமிட்டுச் சத்தம் வெளிவராதபடி தடுத்த தாய்மார்களைக் கண்டோம்; பெருமையும் பூரிப்பும் கொண்டோம். நாட்டுப்பற்றுக்கு நாயகர் என்று கூறிடுவோர், அங்கு ஓட்டுவேட்டைக்கான ஓங்காரச் சத்தமிட்டனர்- இங்கோ, நலிந்து கிடக்கும் இனத்துக்கு நல்லதோர் மூலிகை தேடிடும் நற்காரியத்தில் ஈடுபட்டோம். அங்கு அரசாளவழிகண்டனர்! அங்குப் பதவி தேடிடும் பண்பின்ர் கூடினர்- இங்கு இனத்தின் இழிவுதுடைக்க எத்தகைய கஷ்டநஷ்டமும் ஏற்கத் தயார் என்று உறுதிகூறிய வீரர் கூடினர். அங்கு, வெள்ளை ஆடை அணிந்தவரின் விழா- இங்குத் துயர்கொண்ட திருஇடத்தின் இழிவைக்குறிக்க இனிக்கருப்பு உடைதரித்து, விடுதலைப்போர் துவக்குவோம் என்று சூள் உரைத்த வாலிபர்களின் அணிவகுப்பு. அங்கு அறுவடை- இங்கு உழவு! அங்குப் பேரம்- இங்கு வீரம்! அங்குக் காங்கிரசு- இங்குத் திராவிடர்கழகம்! செல்வம் கொழிக்கும் பம்பாய் நகரிலே, தாஜ் ஹோட்டல் என்ன! ராயல் ரெஸ்டாரண்ட் என்ன! ரம்மியமான பல விடுதிகள் என்ன! இவ்வளவு வசதிகள்! செல்வவான்களுக்கு்த் தேவையான சுவைகள்!- இங்கோ வெட்ட வெளியிலே, ஒரு கொட்டகை! கொட்டகைக்கும் நகருக்கும் இடையே இரண்டுமைல் தொலைவு! மாநாட்டார், சாப்பாடு போட இல்லை! தங்கப்போதுமான விடுதிகள் இல்லை! மழைத்தொல்லையோ தொலையவில்லை! இடியும் மின்னலும், அதிகாரவர்க்கத்தின் அமுலும் அமோகம்! மாநாட்டுக்கு மகாராஜாக்களும், பட்டமகிஷிகளும் இல்லை! அலங்கார புருஷரும் அவரை அடக்கியாளும் மெழுகுபொம்மைகளும் இல்லை! ஒரே ஒருமோட்டார்! இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது; அதுவும் வாடகை வண்டி!

பதவிபெறப் பாதை வகுத்தனரா? இல்லை! இருக்கும்பதவியை விட்டுவிடு, இல்லையேல் விலகிநில் என்று கூறினர்! தேர்தல் முஸ்தீப்புகள் உண்டா? இல்லை! தீண்டினால் திருநீலகண்டம்!! மாஜி மந்திரிகள் உண்டா? தென்படவில்லை! மிட்டா மிராசுகள் உண்டா? இல்லை! காருண்ய மிகுந்த' சர்க்காருக்குக் காவடி தூக்குவோர் உண்டா? இல்லை! வேறு யார் இருந்தனர்? வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! அவர்கள் கூடிப்பேசி வகுத்த வழி என்ன? "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பதும் தெரிந்தோம்" என்று கூறினர். ‘கொலைவாளினை எடடா! ‘மிகு கொடியோர் செயல் அறவே’ என்று பாடினர். "திராவிடத்திருநாட்டினிலே ஆரிய அரசா? அதற்குப் பார்ப்பன முரசா?" என்று கேட்டனர். சர்க்கார்சனாதனத்துக்கு இடந்தரும் போக்கைச் சாடினர்; பெரியாரே, இப்பெரும் படைக்குகந்த தலைவர் என்று தேர்ந்தெடுத்தனர். களம் காட்டுக என்று முழக்கமிட்டனர், கடும் பத்தியத்துக்கெல்லாம் தயார் என்று உறுதிமொழி பூண்டுவிட்டனர்; போயுள்ளனர். தத்தமது பட்டிதொட்டிகளிலும், திராவிடரின் விடுதலைப் படையிலே நாங்கள் பெயரைப் பொறித்து விட்டோம்! எந்தச் சமயத்திலே அழைப்பு வருமோ அறியோம். வந்தால், வாளா யிரோம். அது மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலையாக இருக்கக்கூடும். எதுவாக இருக்குமோ தெரியாது ஆனால் எதற்கும் நாங்கள் தயார் என்று உறுதி கூறிவிட்டோம் " என்று உரைத்திடுவர். திருச்சி, தீரர்களின் அணிவகுப்பைக் காட்டிவிட்டது! இரயில்வே வசதிக் குறைவு. கால நிலைக் கோளாறுகள் இவ்வளவையும் பொருட்படுத்தாமல், அங்கு கூடிய ஏறக்குறைய நாற்பது ஆயிரம் மக்களும், நமது நாட்டு விடுதலைக்கான படை; அதனைத் தடுக்கும் தடை இருக்க முடியாது.

கட்சியின் குறிக்கோள் கெட்டுவிட்டது என்று மேதாவிகளிலே ஒருவரான சிலப்பதிகார உரையாசிரியர் சர். சண்முகனார் முழக்கமிட்ட பிறகு, ஞாயிறு நோக்கி நாத்தழும்பேற நிந்தித்தபிறகு, கிழமைதோறும் இந்தக் கிழத்தை நாங்கள் கவிழ்த்துவிட்டோம் என்று வளையுள் நெளியும் சுனை விழுங்கிகள் சொல்லம்புகளை விட்டபிறகு, ஜல்லடம் கட்டிய வீரரும், புகலிடம் தேடிடும் வீணரும், கனலைக் கக்கிய பிறகு, சர்களும், திவான்பகதூர்களும் விருந்துண்டு, விருது புகன்று, வீர ரசம் பருகி, விடமாட்டோம் என்று ஆவேசம் பேசிய பிறகு, கட்சியிலே பிளவு என்று கலகப் பிரியர்கள் பேசிய பிறகு, காட்டுக் கூச்சலிடுவோர் தானே மிச்சம், கண்ணியமானவர்கள் எங்கே என்று கனத்த குரலினர் கூறிய பிறகு, கட்சி கரைந்து விட்டது என்று கேலி பேசிய பிறகு, இந்தக் காட்சி--மக்கள் பலப்பல ஆயிரவர் கூடிய காட்சி-பட்டம் பதவி, தேர்தல் முதலிய பசையும் ருசியும் இல்லை என்று தெரிந்தும் கூடிய கோலம், சிறையும் பிறவும் கிடைக்கும் என்று தெரிந்தும் கூடிய கூட்டம், சர்வாதிகாரம் செய்கிறார், யாரையும் சட்டை செய்ய மறுக்கிறார் என்று பெரியாரைப்பற்றிக் கூறப்படுவது தெரிந்தும் கூடிய கூட்டம். அமைப்பு இல்லை, ஆங்கில - தமிழ் தினசரிகள் இல்லை, ஆந்திர கர்நாடகம் போகவில்லை; பணம் பெறும் பிரசாரகர்கள் இல்லை - இவை கட்சியிலுள்ள குறைபாடுகள் என்று சிலர் கூறினது தெரிந்தும் கூடிய இந்தக் கூட்டம், தவறான வழியிலே சென்றுகொண்டிருக்கும் ஒரு சிலருக்குக் கண்ணையும் கருத்தையும் திறந்திடும் காட்சி என்போம் ! சேலத்திற்குப் பிறகு, கட்சியிலே பிளவு, பெரியாரின் பலம் ஒடுங்கி விட்டது, பிளவு பலமாகி விட்டது என்று, கொட்டை எழுத்திலே அச்சிட்டு விட்டு, பெரியாரின் செல்வாக்கு அதனால் பட்டுப் போய்விட்டதாகக் கருதிக்கொண்டனர் சிலர்! அவர்களின் சிந்தனைக்கு ஒரு சிக்கலான வேலை, இந்தத் திருச்சி மாநாட்டுக் காட்சி! ஏன் கூடினர் இவ்வளவு மக்கள், எவ்வளவோ வசதிக் குறைவு இருந்தும்? கட்சியிலே பிளவு என்பது இந்த விளைவையா தரும், பிளவு என்பது உண்மையாக இருக்குமானால்? ஒரு சிலர் வழக்கமாகக் காணப்படுபவர், வருவதற்கு ஆருடம் பார்த்து, ஆள் அம்பு அனுப்பி, தங்கியிருக்கப் பங்களாவும், தர்பாருக்கேற்ற "தாசர்" கூட்டமும், தலையிலே பாகையும், தடியிலே தங்கப்பூணும் கொண்ட சீமான்கள் அங்கு இல்லை? ஆனால் சீறிப் போரிடும் சிங்கங்கள் இருந்தன !! இதனை நண்பர் வேதாச்சலம், 'இராமநாதபுரம் ராஜா தலைவராகவும், தனவணிகர் குலதிலகர் பெத்தாச்சி செட்டியார் வரவேற்புக் கழகத் தலைவராகவும் இருந்து, ஜஸ்டிஸ் மாநாட்டை இதே திருச்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தினர், இன்று நான் வரவேற்புத் தலைவனாய் இருக்கிறேன். சாமான்யன் ! பெரியார் தலைவராக இருக்கிருர். அவர் ராஜா அல்ல ! என்று கூறினார். கோடி உள்ளங்களின் எதிரொலி அவருடைய வாசகம்! ஆம்! ராஜாக்களும், ஜெமீன்தாரர்களும், இன்றைய திராவிடர் கழகம் நேற்று 'ஜஸ்டிஸ் கட்சி' என்று அழைக்கப்பட்ட காலத்திலே, அக்கட்சியைத் தமக்குக் கொலுமண்டபமாகவே கொண்டனர்! இன்று அது மக்கள் மன்றமாகி விட்டது!நாளை, அந்த மக்கள் மன்றத்தின் மாவீரர்களின் எதிர்ப்பினால் "மஞ்சள் கருப்பாச்சுதே! எங்கள் மனக்கோட்டை தூளாச்சுதே!" என்று பாடி அழப்போகின்றனர்' இன்று ஓடி ஆடி அடாணா பாடும் கட்சியினர். மா நாட்டிலே, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,எங்களால் தாங்கக்கூடியவை அல்ல என்று சோகித்துக் கூறிக் கை பிசையும் "கனங்கள்" வாழ்ந்த இந்தக் கட்சியிலே, திருச்சி மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 'போதுமான அளவு தீவிரமாக இல்லை, போர் வாடை அடித்தது. முரசும் கேட்டது. ஆனால், களம் செல் என்று கட்டளை காணோமே! ஏன்?' என்று பெருமூச்சு விட்டபடி, தோளைக் குலுக்கிடும் வீரர்கள் ஆயிரம் ஆயிரம் இருந்தனர்!

மூன்றடுக்கு மாடி வீடு, நமது கட்சியின் மூலபுருஷர்கள் என்று கூறப்படுவோரின் முகாம் ! இந்தி எதிர்ப்புப் போர் மும்முரம்! அந்தச் சமயத்திலே கூடியபோது இந்தப் போரை ஐஸ்டிஸ் கட்சி எடுத்து நடத்த வேண்டும் என்று அந்தப் போரிலே ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர். கூறினது தான் தாமதம், குளிர்ச்சி மறைந்தது; கொதிப்பு கூத்தாடிற்று. கூடினது இதற்கா என்ற கேள்வி பிறந்தது. எங்களால் முடியாது என்று பேசப்பட்டது! யாரால்? சிறைச்சாலைக்குச் சென்று 'சீரழிய?" வாலிபர்களை அனுப்பிவிட்டு செல்வத்தின் துணையினால் சட்டசபை சென்று சிங்கார வாழ்வு நடாத்தும், சீமான்களால் ! அன்றே "சேலம்" ஏற்பட்டிருக்க வேண்டும்! பெரியார் மெல்லவும் முடியாது. விழுங்கவும் முடியாது கஷ்டப்பட்டார் ! இது ஒட்டாச் சரக்கு என்பது அன்றே தெரிந்தது! தாட்சணியம் என்ற பசையால் ஒட்ட வைத்தார்! அதுவும் ஓட்டு வேலைக்காகவே தவிர, திராவிடத்தின் மானத்தை மாய்க்கும் ஆரிய எதேச்சாதிகாரத்துக்கு வேட்டு வைக்க அல்ல! சேலம் மாநாட்டிலே, "சேலம் நடந்ததே" அது நெடுநாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய சம்பவம். கொஞ்சம் காலங் கழித்தே நடந்தது! நடந்த பிறகு, உள்ளபடியே அதனாய் நமக்கு நஷ்டமோ என்று சிலருக்கு நம்மவரிலேயே சிலருக்குக்கூடச் சந்தேகமும், சஞ்சலமும் இருந்தது! அந்தச் சந்தேகத்தைத் திருச்சி துடைத்து விட்டது ! இனி நமது பாதை தெளிவாகி விட்டது; பயணத்தைத் துவக்க வேண்டியதுதான் பாக்கி ! அதுவும் விரைவிலே! நிச்சயம் துவக்கப்படும்!!

திருச்சி மாநாட்டிலே, நமக்கு ஏற்பட்ட உருவான பலன் இதுதான்! நமக்கு பழைய கூட்டுறவுக்காரர்கள் விலகியதால் நமக்கு நஷ்டம் இல்லை! அந்தப் "பழைய கூட்டாளிகளைக் கொண்டு அமைக்கப்படும் தேர்தல் காளான் நமது பாதையைத் தடைப்படுத்தக்கூடியதல்ல! நமது பாதை தெளிவாக்கப்பட்டு விட்டது" என்பது, திருச்சி மாநாடு நமக்களித்துள்ள பாடம்! இனித் தயங்கவோ, திரும்பிப் பார்க்கவோ, தழதழத்த குரலுக்கோ, தாட்சணியத் தொல்லைக்கோ இடமில்லை; அவசியமும் கிடையாது, போர்ப் பாதையிலே வந்து நிற்கின்றோம்! பார்க்கின்றோம்! அஞ்சா நெஞ்சினரும், ஆர்வத்தால் தம்மை மறந்தவரும், ஆற்றல் மிக்கவருமான தோழர்கள் உள்ளனர், கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலே! அவர்கள் 'போர்வாள்!' காண்பவர்கள் கண்டு ரசிப்பவர்கள்! நடுநிசி வரை, நாட்டுக்காக வீட்டை மறந்து, வெட்ட வெளியிலே கொட்டு மழை வருமோ என்ற நினைப்புமின்றி, ஆணும் பெண்ணும், குழந்தையும் கிழவருமாகக் கூடியிருந்தனர். ஏன்? 'நாங்கள் போய்விட்டோம். இனி இவர்கள் நாதியற்றவர்கள் " என்று நையாண்டி செய்தார்களே.சில சீமான்களும் அவர்களின் "பில்லைச் சேவகர்களும்" அது பொய், என்பதை நிரூபித்துக் காட்ட! இந்த மக்கள் கூட்டம், நமது பக்கம் இருக்கும்போது, உரிமைப் போரைத் துவக்காமலிருக்க முடியாது. அந்தப் போர், துவக்கப்பட்டே தீரும்! காலம் வெகு தூரத்திலில்லை!!

காங்கிரசார் மிகப் பலம் பொருந்திய மெஜாரிட்டியினராக. வந்தபோது பானகல் அரசர் சொன்னார், "இதுவரை மெஜாரிட்டி கட்சி ஆண்ட காட்சியையே நீங்கள் கண்டிருக்கிறீர்கள்தான், ஓர் விசித்திரக் காட்சியை இனி ஏற்படுத்திக் காட்டுகிறேன் பாரீர்! சிறுபான்மையாக (மைனாரிட்டியாக) உள்ள கட்சி, பெரும்பான்மையினராக உள்ள கட்சியை ஆட்டி வைத்து, அரசாளும் காட்சியை இனிக் காண்பீர்கள்" என்று! செய்தும் காட்டினார். பானகலின் பேச்சுக் கேட்டு, ஆடும் பதுமைகளாயினர், பாராளும்உரிமை பெற்றதாகக் கூறிப் பரங்கியரை மிரட்டிய காங்கிரசார். இன்று பெரியார் " இதுவரையிலே தேர்தலிலே நின்று வெற்றிபெற்ற கட்சியின் வீரச் செயல்களையும், அக்கட்சியைச் சட்டசபையிலே அமர்ந்திருந்து எதிர்க்கும் கட்சியின் வீரச்செயலையுமே கண்டிருக்கிறீர்கள். இனி ஓர் அதிசயத்தைக் காணப் போகிறீர்கள். அஃது என்ன? திராவிடர் கட்சி தேர்தலிலே போவதில்லை. ஆனால், தேர்தலிலே நின்று வெற்றிபெற்று, நிற்கப் குதூகலத்துடன் அரசாள வரும் கட்சியின்கொட்டம் அடங்குமளவு, சட்டசபைக்கு வெளியே இருந்து உள்ளே இருந்துசெய்வதைவிட உக்கிரமான, உருவான எதிர்ப்புக் கட்சியாக இருக்கும். இந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறேன் பாரீர்" என்று கூறுகிறார். திருச்சி மாநாட்டைக் கண்ட எவருக்கும், இது நடைபெற முடியாதது என்ற எண்ணம் வராது! இவ்வளவு வீரர்கள் இருக்க, தீரத்துக்குக் குறைவு எது?. பெரியார் பெரும்படை சட்டசபை புகாவிட்டால் என்ன? நாடு முழுதும் சட்டசபையாக்கிக் காட்டுவோம்! நாடாள வருபவர், மக்கள் மன்றத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவர்! இது நிச்சயம்! "ஆள்வது நானா, இந்த இராமசாமி நாயக்கரா?" என்று ஆச்சாரியார் கேட்டார், ஆணவத்துடன். "ஒரு இராமசாமிக்காகப் பயந்து இந்தியை எடுத்து விடுவதா " என்று கோபித்துக் கூறினார். ஆனால் பாபம், புற்றிலிருந்து ஈசல் போல் கிளம்புகின்றனரே! இந்தச் சனியனுக்கு இவ்வளவு தொல்லை இருக்குமென்று தெரிந்திருந்தால் இந்தியைப் புகுத்தியே இருக்கமாட்டேனே " என்று அதே ஆச்சாரியார் அலறினார்! எதைக்கண்டு? நமது கட்சி அங்கத்தினர்கள் சட்டசபையிலே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் இருந்தனரா ? இல்லை! வேறு எதைக்கண்டு அந்த வேதியருக்குச் சோகம் பிறந்தது? நாட்டிலே, மூண்டுவிட்ட எதிர்ப்பைக் கண்டு ! பல ஆயிரக்கணக்காளகட்சி அங்கத்தினர்கள் முறைப்படி சேர்க்கப்படாமல், கட்சியின் கிளைகள் ஏற்படாமல், கல்லூரிகளிலே நமது குரல் கேளாமல் இருந்த நாளிலே இது சாத்தியமாயிற்று என்றால், கட்சி அங்கத்தினர்கள் குவிந்து, கிளைகள் ஆங்காங்கு தழைத்து, கல்லூரிகளிலே தளபதிகள் தயாரிக்கப்படும் இந்நாளிலே, தாலமுத்துவும் நடராசனும் பிணமாயினர் என்ற செய்தி இரத்தத்திலே சூடேற்றி வீட்டிருக்கும் இந்நாளிலே, புரட்சிக் கவிஞரின் புதுக்கருத்துக்கள் நமது புண்ணை ஆற்றிப் புதியதோர் வீரத்தை ஊட்டும் இந்நாட்களிலே, நடிகமணிகள் திராவிட நாட்டு விடுதலைக்காகக் கலையை வேலை வாங்கும் இந்நாட்களிலே, கம்பனைக் காப்பாற்றக் கலா ரசிகர்கள் ஓட்டை ஒடிசல் நீக்கப் பாடுபடும் இந்த நாளிலே, கொச்சியும் திருவிதாங்கூரும். மைசூரும் ஆந்திரமும் மாகாண மாநாட்டுக்குப் பிரதி நிதிகள் அனுப்பி யிருந்தன என்று "இந்து" பத்திரிகை எழுதித் தீர வேண்டி நேரிட்ட இந்த நாளிலே, திருநாமம் தரிப்பதை மறவாத திருவாளர் வீடுகளிலேயும், "பார்ப்பனத் தீட்டு" கூடாது, என்ற திடசித்தம் ஏற்பட்ட இந்த நாளிலே, தீப்பொறி பறக்கும் தீர்மானங்கள் இல்லையே என்று கோபித்துக் கூறும் தீரர்கள் திரண்டுவிட்ட இந்நாளிலே, காந்தியின் சம்பந்தியார் காங்கிரசிலே கள்ளத்தனமாக நுழைந்தார் என்று காமராஜர்கள் கூறக்கூடிய இந்நாளிலே, நாம், ஏன், சட்டசபைகளிலே நுழையாமலேயும். அந்தச் சபையில் நுழைந்துகொள்பவரை நமது இஷ்டப்படி நாட்டை ஆளச் செய்ய முடியாது என்று கேட்கிறோம் ? அந்த நாளிலே அவ்வளவு முடிந்ததே! இந்த நாளிலே !! எண்ணும்போதே களிப்பும் நம்பிக்கையும் கலந்து வருகிறது, கனிச் சாறும் கன்னல் சாறும் கலந்திருப்பது போல!

நாடாள, யாரேனும் வரட்டும், நாம் நாட்டு மக்களுக்கு, நமது பலத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறோம், அவர்களை "நல்ல பிள்ளைகளாக " நடந்துகொள்ளச் செய்வோம், நிச்சயமாக நம்மால் அது முடியும்!!

வேவல் தமது படைகளைப் பர்மாப் போர்களத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தார். போர்த் தந்திரம் தெரியாதவர்கள் கேலி செய்தனர்! பிறகு? அந்தமான் தீவுகளைக் கை விட்டனர். நையாண்டி செய்தனர், போர்முறை அறியாதார். இன்று? படை பலத்தைச் சிதற வைப்பதும், தாக்குதலுக்கு ஒரு சமயம் உண்டு என்பதை அறியாமல் தாக்குவதும் படைத்தலைவருக்கு இருக்குமானால், படை தப்பாது; வெற்றியும் கிட்டாது. காங்கிரஸ் டோஜோ, மலேயாவையும் ஜாவாவையும், பிலிப்பைனையும் பொல் துறைமுகத்தையும் பிடித்துக்கொள்ளட்டுமே, பயம் ஏன்? டோக்கியோவைத் தாக்குவோம், சமயமறிந்து அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, வெற்றிக் கொலுமண்டபம்,சரணாகதிச் சாஸனம் கையொப்ப மிடவேண்டிய இடங்களாக மாறுகிறது; கவலை ஏன் ? ஆனால், ரஷ்யப் படை, நாஜிப் படையுடன் கஷ்ட நஷ்டம் பாராது கடும் போரிட்டதாலே தான், மேற்கு அரசாங்கத்திலும் சரி, கிழக்கு அரசாங்கத்திலும் சரி, நேசநாட்டினரால் பிறகு வெற்றி காண முடிந்தது என்று கூறுவர்! உண்மை! அதுபோலத்தான், இன்றைய தேர்தல் போராட்டத்திலே, முஸ்லீம் லீக், ரஷ்யப் படையாக இருக்கிறது !! அதிலே சந்தேகம் ஏது? காங்கிரசுக்கு, முஸ்லீம் லீக், இந்தியாவின் ஏகபோக மிராசு பாத்யதை இல்லை என்பதை நிரூபித்துவிடப் போகிறது! ஆகவே இந்தத் தேர்தலிலே நாம் கலந்து கொள்ளாதது, கேடுள்ளதுமல்ல, காங்கிரசுக்கு இதன் பலனாக சர்வ வல்லமை ஏற்பட்டுவிடப் போவதுமில்லை. நமது போர்க்கருவிகள் பழுதுபட்டுக் கிடக்கின்றன! அவைகளைச் சரி செய்து கொள்வோம்; பிறகு பாய்வோம்! ஜப்பான் தாக்கிப் பிடித்த ஒவ்வொரு நாட்டையும், திரும்பித் தாக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமின்றி, தலைமேல் ஒரு பலமான தாக்குதல், அதன் பயனாக பிடிபட்ட இடங்கள் யாவும் சரணாகதி என்றானதுபோல இன்று ஒதுங்கி நிற்கும் நம்மால், ஓடிவரும் காங்கிரசை ஒடுக்கி விட முடியும் ! அந்தக் கட்சி ஆளச் சந்தர்ப்பம் தருவோம், அதன் மமதை மாள! இந்தப் போர்முறைச் சூட்சுமத்தைச் சிலர் தெரிந்துகொள்ளாததற்குக் காரணம், "தேர்தல் தரகர்கள்" தேடிக் கண்டுபிடித்துத் தரும் தேய்ந்துபோன ஆர்வம்! அஃதன்றி வேறில்லை! திருச்சி மாநாட்டிலே நாம் தெளிவாக்கி விட்டோம் இதனையும்.

மற்றுமோர், முக்கியமான முடிவு கண்டோம்; அதாவது. சமுதாய இழிவுகளைத் துடைக்கப் போரிடும் ஒரு விடுதலைப் படையை அமைத்துள்ளோம். "கருப்புச் சட்டை' அணிந்திருக்க வேண்டும் என்று பெரியார் கூறினார். ஏன், என்றும் விளக்கினார். திராவிட மக்கள் அடைந்துள்ள இழி நிலையால் ஏற்பட்ட துக்கத்தின் அறிகுறி அந்த உடை என்றார். நாம், நாடிழந்து, அரசு இழந்து, நம்மில் பாமரர் அறிவிழந்து,மொழிவளமும் கலை உயர்வும் இழந்து, செல்வம் இழந்து, சீர் இழந்து நாலாம் ஜாதியாய், ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம். நம்மை ஒரு. சிறு கூட்டத்தார் கொடுமைப் படுத்துவது, ஏக்கத்தைத் தரு கிறது. அதனினும் அதிகமான துக்கம், நம்மவரில் பலரும் அந்தக் கொடுமையை உணராமல் இருக்கும் நிலைமையால் ஏற்படுகிறது. இந்தப் பெருந் துக்கத்தைக் காட்டும் குறியாகவே கருப்பு உடை அணியச் சொல்கிறார் தலைவர். ஏற்கனவே உள்ள ஏளன மொழிகளுடன் நமது எதிரிகள் இனி கருப்புச் சட்டைக்காரன், கள்ளன் போன்ற உடை அணிந்தோன் என்று புதுவசவுகளைச் சேர்த்துக் கொள்வர்; அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டும். கருப்புச் சட்டை பாசிச அடையாளம் என்று பேசுவர் ஏட்டிலே சமதர்மம் காண்போர், பேசட்டும்; நமது துக்கத்தை நாட்டுக்குத் தெரிவிக்கட்டும் நமது உடை ! இந்த விடுதலைப் படை சமுதாய இழிவுகளைப் போக்கும் போரிலே முன்னணி நிற்கும் ! இதற்குத் திருச்சி மாநாடு தந்துள்ள ஆர்வத்தைக் கொடுமையான நிலைமையைத் தமது கோணல் புத்தியைக் கொண்டு நீடிக்கச் செய்பவர் உணர்வது நல்லது. சமுதாய இழிவு எது, அதனை ஒழிப்பது எப்படி, எந்த முறையிலே என்பதிலே, திருச்சி மாநாட்டிலே காணப்பட்ட எழுச்சி, கட்சி அடைந்துள்ள புதுக் கட்டத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

முன்பெல்லாம், சமுதாய சீர்திருத்தத்துக்காகவே இந்தக் கட்சி இருக்கிறது என்று டாக்டர் நாயர் போன்றவர்கள் முழக்கமிட்டு வந்துங்கூட, முற்போக்கான, கொஞ்சம் தீவிரமான கருத்துள்ள தீர்மானம் மா நாட்டிலே வந்தால் ஒரு நடுக்கம் ஏற்படும். எடுத்துக் காட்டாக, ஆதிதிராவிட மக்களை ஆலயங்களிலே அனுமதிக்க வேண்டும் என்று பேசப்பட்டால், அரகரா சிவ சிவா என்று அலறுபவரும், ராம ராமா என்று அழுபவரும், இதைக் கூறிவிட்டு ஓட்டுக்குப் போனால் கிடைக்காதே என்று யூகமுரைத்தவரும், இவ்வளவு புரட்சிகரமாகப் போகக் கூடாது என்று எச்சரிக்கை செய்பவரும், நம்மிடம் இருந்தனர். திருச்சியிலே ஓர் தலைகீழ் மாற்றம் ஆதிதிராவிடர்களுக்குச் சகல கோயில்களிலும் பிரவேசிக்க அனுமதி தரவேண்டும் என்று தீர்மானம் ! இதற்கு, வைதீக எதிர்ப்பு, சனாதனச் சலசலப்பு, பழைமை விரும்பியின் பயம், இவை இல்லை! ஆனால் வேறு என்ன இருந்தது ? "ஆதித்திராவிடருக்கு ஆலயப் பிரவேசம், ஒரு நன்மையும் செய்யாது ! நாம் இதுவரை அங்கே சென்று கெட்டது போதும், பழங்குடி மக்களையும் அங்கு அனுப்பிப் பாழ் செய்யாதீர்! ஆலயங்களிலே என்ன இருக்கிறது? அது ஆரியக் கோட்டை ! கள்ளர் குகை! சனாதனச் சேரி! வைதீக வளை ! நாமோ, அத்தகைய வைதீக பிடிப்பிலிருந்து மக்களை மீட்கும் பணியிலே ஈடுபட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட நாம், ஆதித்திராவிடரை ஏன், ஆலயத்துக்குப் போகச் செய்து, அவர்களுள் வாழ்வையும் அறிவையும் பாழாக்குவது?" என்று பல தோழர்கள், ஆர்வமும் ஆவேசமும் கலந்தது மட்டுமல்ல; உண்மையாகவே, கோயில் நுழைவு கேடு தரும் என்று உணர்ந்து பேசினர். 'கோயிலிலே ஆதித்திராவிடரை நுழைய விடுவது, மதத்துக்குக் கேடு, ஆசாரத்துக்கு ஆபத்து. மஹா பாபம் ! ' என்று பேசி வந்த காலம் மலை ஏறி, "ஆதித் திராவிடரை, ஏனய்யா அந்தக் கள்ளர் குகைக்கே போகச் செய்கிறீர்? ஆலயப் பிரவேசம் என்ற தண்டனையை ஏன் குற்றமற்ற அந்த மக்களுக்குத் தருகிறீர்கள்? " என்று பேசப்படும் காலம் தோன்றிவிட்டது ! ஆலயம்! இங்கே ஆதித்திராவிடர் நுழையக் கூடாது என்ற பலகை முன்பு! இப்போது "இது ஆலயம்! ஆதித்திராவிடத் தோழர்களே, உள்ளே போகாதீர்கள்! ஆரியன் அறிவையும் பொருளையும் அபகரிக்க உள்ளே பதுங்கிக்கொண்டிருக்கிறான்" என்று பலகை தயாரிக்கின்றனர், நமது தோழர்கள் ! கடைசியில், ஆலயப் பிரவேச கேட்பது, உரிமைப் போரின் ஒரு பகுதியே தவிர, ஆரிய மார்க்கத்திலே அவர்களைத் தள்ளுவதற்கு அல்ல என்று விளக்கம் தரப்பட்ட பிறகே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! அந்த அளவு சுயமரியாதை ஆர்வமும், தீவிர நோக்கமும் பொங்குகிறது ! இந்தக் கொந்தளப்பிலே, எப்படி ராவ்பகதூர்கள் தங்க முடியும் ? தீய்ந்து போவர் ! "கோயில்கள் எல்லாம் ஏழை விடுதிகளாகும் ! வாசகசாலைகளாகும், காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள அழகிய இடங்களாகும்" என்றார், சுயமரியாதை மாநாட்டுத் திறப்பாளர், தோழர் நீலமேகம். அந்த வாசகத்தைக் கேட்டு, மாநாட்டினர் கொட்டிய கரகோஷம், ஆரியக் கோட்டைகளை அதிரச் செய்யக்கூடியதாக இருந்தது! அத்துணை ஆர்வம்! அவ்வளவு எழுச்சி ! தலைவர்களின் வீர உரைகள் ஒவ்வொன்றும் தனித் தனியே எடுத்து விளக்கப்பட வேண்டியவை. எனினும், எல்லோருடைய உரையினும் ஒரு மூல தத்துவம் பொதிந்து இருந்தது. அதனைச் சுயமரியாதை மாநாட்டுத் தலைவர் டி. சண்முகம், திராவிட மாநாட்டுத் திறப்பாளர் தோழர் அர்ஜுனனும் விளக்கமாகக் கூறினர். அதாவது, திராவிட நாடு திராவிடருக்கே என்பதாகும்! தோழர் அர்ஜுனன் அவர்களுடைய அரிய உரையிலே. வடநாடு பொருளாதாரத் துறையிலே பெற்றுள்ள ஆபத்து நிறைந்த ஆதிக்கத்தை விளக்கி யிருந்தார். அந்த ஆதிக்கத்தை அறுபடச் செய்யப் பெரும் படை திரட்டி நடத்தக் கூடியவர் பெரியார் என்பதைத் தோழர் சண்முகம் அழகுறத் தமது பேருரையிலே எடுத்துக் காட்டினார். திருச்சி மாநாடுகள் விழிப்புற்ற எழுச்சியற்ற திராவிடத்தின் உருவைக் காட்டிற்று? பெரியாரின் செல்வாக்குச் சிறப்புத் தரும் சித்திரங்களாகவும், உறுதியுடன் உழைக்கும் தலைவரை, ஒருபோதும் வாலிப உலகு மறவாது, பின் பற்றத் தயங்காது என்பதை விளக்கும் காட்சிகளாகவும் இருந்தன. மறக்கொணாத காட்சிகள் ! மதியுடையோருக்கு, திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை உணரச் செய்யக்கூடிய காட்சிகள்! திருச்சி, தன் கடமையை மிகமிகப் போற்றக்கூடிய விதத்திலே நிறைவேற்றி விட்டது. நம்மாலே முடியுமா" என்று கொஞ்சம் பயந்த குரலிலே பேசியே பழக்கப்பட்ட நண்பர் வேதாச்சலம் அவர்களின் விடாமுயற்சியின் பயனாக ஏற்பட்ட வெற்றி, அந்த மாநாடுகள்! அவருக்குப் பக்க பலமாக இருந்தனர், பொன்மலை, திருச்சி, தஞ்சை முதலிய பல பகுதிகளிலே உள்ள பெரியார் தொண்டர் படையினர். மாநாட்டு வெற்றிக்கான பங்கு செலுத்த ஒவ்வொரு வட்டாரமும் ஆர்வத்துடன் முன்வந்து. அற்புதமான வெற்றியை உண்டாக்கிற்று. திருச்சி மாநாடு கூடும்போது பெரியாருக்கு வயது 67. மா நாடு முடிந்த பிறகு அவருக்கு வயது 45. அவ்வளவு "வாலிப முறுக்கு " ஏற்பட்டு விட்டது. இளைஞர்களின் எழுச்சிக் குரலைக் கேட்டதன் பயனாக !! மாநாட்டுக்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலே, இடையிடையே நேரிட்ட தொல்லைகளும், திடீர் ஆபத்துக்களும் பல. அவை யாவும், கரும்புக்குள்ள கணுப்போலாயின ! திருச்சித் தோழர்களை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்! வெற்றிகரமாக அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திய பெருமையை அடைந்த திருச்சி, திராவிட நாடு திராவிடருக்கு ஆக்கப்படுவதற்கான முயற்சி முகாமாகி, பயிற்சிக் கூடமாகி, பாசறையாகி. திராவிடத்துக்கு வழி காட்டும் என்று நம்புகிறோம். மாநாடு வெற்றிகரமாக நடந்தேறப் பல்வகையானும் உதவி புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, வாழ்க திராவிடம் என்று இதனை முடிக்கிறோம். திருச்சி மாநாடு உண்மையிலேயே, திராவிடருக்கு போர்வாள் தந்திருக்கிறது! ஏந்திய வாளை அஞ்சாநெஞ்சுடன் வீசத் திராவிடத் தீரர் கூடினர். தலைவர் தந்த போர்வாளை முத்தமிட்டுக் கரத்திலே பிடித்துள்ளனர் ! முன்பெல்லாம்ஜஸ்டிஸ் மாநாடுகள். உத்தியோகத்துக்கு மனுப் போடும் பேனா முனைகளைத் தந்தது வாலிபர்களிடம் ! திருச்சியிலே வாலிபர் கரத்திலே தரப்பட்டது போர்வாள்!! திராவிடத்திலே படர்ந்துள்ள ஆரியக் கள்ளியை வெட்டி வீழ்த்த, வைதிக மென்ற பெயரால் வளைந்து நெளியும் வஞ்சனையைக் கூறு கூறாக்க, மக்களின் மனதிலே குவிந்து கிடக்கும் மடைமை எனும் நச்சுக் கொடியை அறுத் தெறிய, ஜாதி பேதமெனும் முட்புதரை அழிக்க,வீரரைத் தழுவி வீணராக்கும் பழைமை எனும் கொடுமையைக் கொல்ல, திராவிடத்தை மீட்கப் போர்வாளைத் திருச்சியில் தீரத் திராவிடர் கரத்திலே தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=இலட்சிய_வரலாறு/போர்வாள்&oldid=1639455" இலிருந்து மீள்விக்கப்பட்டது