இளையர் அறிவியல் களஞ்சியம்/அகில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அகில் : சந்தனம் போன்று மணம் தரும் மரங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் அகில் மரம். இது நீண்டு பருத்து வளரும். 20 மீட்டர் முதல் 25 மீட்டர் உயரம்வரை வளரும். இம் மரத்தின் சுற்றளவு 2 முதல் 8 மீட்டர்வரை இருக்கும். இதன் இலைகள் எந்நாளும் பச்சை நிற வண்ணமுடையதாகத் தோற்றமளிக்கும். அவை மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இலைகளின் முனை கூர்மைத் தோற்றமுடையனவாக இருக்கும். அகில் மரப் பூக்கள் வெண்மை நிறமுள்ளதாகும். அவை குடைப் பூங்கொத்துபோல் தோற்றமளிக்கும். அகில் மரக் கனிகள் மேன்மைமிக்கதாக இருக்கும். அதன் வடிவம் தலைகீழ் முட்டை போன்றிருக்கும்.

அகில் மரம் பல்வேறு பயன்பாடுள்ள பொருளாக அமைந்துள்ளது. பிற மரங்களில் வெளிப் புறத்தில் பிசின் வடிவதுபோல் இதில் வடிவதில்லை. எனினும், முதிர்ச்சி பெற்ற அகில் மரத்தின் உட்பகுதியில் கருநிறக் கட்டிகள் உருவாகியிருக்கும். இக்கட்டிகள் எண்ணெய்ப் பசை நிறைந்ததாகும். எண்ணெய்ப் பிசின் போன்ற இக்கருமைப் பொருளே 'அகில்' என அழைக்கப்படுகிறது. கிளைகள் கிளைத்துள்ள பகுதிகளில் இக்கருமைப் பொருள் உருவாகிறது. இஃது உருவாவதற்கு அடிப்படைக் காரணம் இம்மரங்களில் உருவாகிப் பற்றிப் படர்ந்து வளர்ந்து வரும் ஒருவிதக் காளான் ஆகும்.இக்காளானும் அதைத்தொடர்ந்து உருவாகும் கருமைக் கட்டிகளும் உள்ள மரம் பார்ப்பதற்கு நோயாளி மரம் போன்று தோற்ற மளிக்கும். காளான் பற்றியுள்ள மரத்துண்டை வெட்டியெடுத்து நல்ல அகில் மரத்தில் முளையடித்து வைத்தால் எளிதில் இரண்டாம் மரத்தைக் காளான் பற்றிக்கொண்டு வளர்ந்து படரும். அதன்மூலம் அகிலும் உருவாகும்.

அகில் கட்டிகள் மிகுந்த மணமுள்ளவை. இவற்றைச் சேகரிக்க முதிர்ந்த மரத்தை வெட்டிச் சிறுசிறு துண்டுகளாக்குவர். அகில் மரத்தின் சிறுசிறு துண்டுகளும் குச்சிகளும் மணப் பொருளாகக் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றை நெருப்பில் இட்டால் சாம்பிராணி புகைபோன்று மணமிக்க புகை வெளிவரும். இவை சந்தனத்தைப் போல் இதமான மணம் தந்து மகிழ்விக்கும், இந்தியா, எகிப்து,அரேபியா ஆகிய நாடுகளில் பண்டுதொட்டே மணப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அகில் எண்ணெய் சிலவகை நோய்களுக்கு மருந்தாகவும் பயன் படுகிறது.

அகில மரக்கிளை

அகில் மரத்துண்டுகளை சிறுசிறு பகுதிகளாக நறுக்கி கொதி நீரில் போட்டுக் கொதிக்க வைத்தால் அதிலிருந்து நறுமண எண்ணெய்ப் பொருள் வெளிவரும். இவை பிரித்தெடுக்கப்பட்டு, 'அகர்-அத்தர்’ எனும் நறுமண எண்ணெய்ப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகில் மரக்கட்டைகள் வெண்மை நிறமுடையவை. இவை கனமற்றவையாதலால் அவற்றைக் கொண்டு நகைப்பெட்டிகள் செய்யப்படுகின்றன. அகில் மரப்பட்டைகள் புத்தகங்களுக்கு உறையிடப் பயன்படுத்தப்படுகின்றன. அகில் மரத்தூளை துணிகள் மீதும் தோற்பொருட்களின் மீதும் தூவினால் அவைகளைப் பூச்சிகள் அண்டாது. அகில் மரப் பட்டைகள் நார்த்தன்மை மிக்கவைகளாதலால் அவை காகிதத் தயாரிப்புக்கும் பயன்பட்டு வருகின்றன. ஊதுவத்திகள், அகர்வத்தி ஆகியவை அகிலிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

அகில் பிசின் அதிகமுள்ள மரம், சாதாரண அகில் மரத்தைவிடக் கனமுள்ளதாக இருக்கும்.

அகில் மரம் அஸ்ஸாமில் அதிக அளவில் விளைகிறது. அதிக அளவில் அகில் விளையும் நாடுகளில் பர்மாவும் ஒன்று.