இளையர் அறிவியல் களஞ்சியம்/அசுவுணி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அசுவுணி : நம் விட்டுத்தோட்டத்தில் உள்ள செடி கொடிகளில் இலை, இலைகுருத்து, மொக்கு, கிளை இவைகளில் சின்னஞ்சிறு பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இப் பூச்சிகள் அசுவுணி (Aphids) அல்லது செடிப் பேன்கள் (Plant lice) ஆகும். இவற்றின்

இறக்கையுள்ள பெண் அசுவுணி

உடல் சிறியதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். இவை பச்சை, பழுப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இவற்றில் 8800-க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன.

இவை செடி, கொடிகளில் தங்கி அவற்றின் சாற்றை உறிஞ்சி உண்டு வாழ்கின்றன. இப் பூச்சிகள் காய்கறிகள், பருத்தி, சோளம், கரும்பு, புகையிலை, ஆமணக்கு, பயறு போன்ற பயிர்களையே பெரிதும் தாக்கிப் பாழாக்குகின்றன. இவற்றால் சாறு உறிஞ்சப்பட்ட செடி கொடிகள் வலுவிழந்துவிடுகின்றன. இவைகள் வெளிறிப்போய் சுருண்டு விடுகின்றன. அசுவுணிகள் மூலம் செடிகளில் நோயைப் பரப்பும் பூச்சிகள் நல்ல செடிகளுக்குப் பரவக் காரணமாகின்றன.

அசுவுணிப் பூச்சிகள் ஆறுகால்களையும் பருத்த உடலையும் மிகச்சிறிய தலையையும் கொண்டுள்ளன. இதன் தலையில் இரு கண்களும் இரு உணர்வு கொம்புகளும் உள்ளன சில வகை அசுவுணிகளுக்கு முன்பின்னாக இரண்டு இணை இறக்கைகள் உள்ளன. முன் இறக்கைகளைவிட பின் இறக்கைகள் சிறியவையாகும். சிலவகை அசுவுணிகளுக்கு இறக்கைகள் ஏதும் இருப்பதில்லை. இவற்றின் மலத்துளை வழியே ஒருவகை இனிய நீர் சுரக்கும். அதை உண்ண எறும்புகள் இவற்றை நாடி வரும். இவை அகவுணிகளுக்குப் பாதுகாப்பாபாகவும் பல செடிகொடிகளுக்குப் பரவவும் உதவுகின்றன.

இவை கூர்மையான வாயுறுப்புக்கள் மூலம் சாற்றை உறிஞ்சுகின்றன. குளிர்காலத்தில் இவற்றின் குஞ்சுகள் வெளிவருகின்றன.

செடி கொடிகளுக்கு மிகுந்த சேதத்தை உண்டாக்கும் அசுவுணிப் பூச்சிகளை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. சிலந்திபோன்ற பூச்சிகள் அசுவுணிகளை உண்டு அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.