இளையர் அறிவியல் களஞ்சியம்/அசெட்டிலின்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அசெட்டிலின் : இது ஒரு கரிமச் சேர்மமாகும். நிறைவுறா ஹைட்ரோ கார்பனாகும். இவ்வாயு 1890K வெப்ப நிலையில் நீர்மமாகிறது. நீர்ம நிலை அசெட்டிலின் மிகவும் தீவிரமாக வெடிக்கும் தன்மை வாய்ந்தது. கால்சியம் கார்பைடுடன் நீரைச் சேர்த்து அசெட்டிலின் வாயு தயாரிக்கப்படுகிறது. தூய நிலையில் இவ்வாயுவுக்கு மணமோ நிறமோ இல்லை. ஆயினும், அசுத்தம் கலந்த நிலையில் ஒரு வகை நெடி தரும் மணம் இதற்கு உண்டு. சுண்ணாம்பையும் கல்கரியையும் கலந்து மின்னுலையில் சுட்டு கால்சியம் கார்பைடு தயாரிக்கப்படுகிறது.

இதை ஆக்சிஜன் வாயுவுடன் தகுந்த விகிதத்தில் கலந்து எரித்தால் 88000-க்கு மேல் வெப்பம் பெற முடியும். வெப்பந்தரும் வெள்ளிய ஒளியையும் பெற இயலும். இவ்வாறு பெறப்படும் ஒளி ஆக்சி-அசெட்டிலின் சுடராகும். இதைக் கொண்டு ஊது குழல் மூலம் செலுத்தி கடின உலோகத் தகடுகளை வெட்டவும் உலோகத்துண்டுகளை இணைக்கவும் முடியும். ஐந்து அடி கனமுள்ள இரும்புத் துண்டுகளைக்கூட வெண்ணெயை வெட்டுவதுபோல் வெட்டியெடுக்க முடியும்.

அசெட்டிலின் வாயுவிற்கு வெடிக்கும் தன்மை உண்டு. எனவே, தேவைப்படும்போது மட்டும் கால்சியம் கார்பைடுடன் நீர் கலந்து அசெட்டிலின் வாயு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து அசெட்டால்டிஹைடு, அசெட்டிக் அமிலம், எத்தில் ஆல்கஹால், மோட்டார் எரிபொருள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இவைகளைக் கொண்டு செயற்கை பட்டு, ரப்பர் தரை விரிப்புகள், நீரால் பாதிக்கப்படாத துணிகள், நீரிடையே செல்லும் தந்திக் கம்பிகளுக்கான பிளாஸ்டிக் மேலுறைகள் உருவாக்கப்படுகின்றன.

அசெட்டிலின் வாயுவை ஹைட்ரோ-குளோரிக் அமிலத்துடன் கலந்து பலவகை பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. 'பாலிலினைல்' (P.v.C.) என அழைக்கப்படும் பொருள் பிளாஸ்டிக் மின் கம்பிகளுக்கு மேலுறையாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறை போன்றவை தயாரிக்கப்படுகிறது. அசெட்டிலினை ஹைட்ரஜனுடன் சேர்த்து 'எத்திலீன்' வாயு தயாரிக்கப்படுகிறது. இதைக் கொண்டு 'பாலிதின் பிளாஸ்டிக்’ வகைகள் உருவாக்கப்படுகின்றன. அசெட்டிலினிலிருந்து செயற்கை ரப்பர் தயாரிக்கப்படுகிறது.

அசெட்டிலின் வாயுவை 1859ஆம் ஆண்டில் பெர்தலோ என்ற ஃபிரெஞ்சு நாட்டு அறிவியல் ஆய்வாளர் கண்டறிந்தார்.