இளையர் அறிவியல் களஞ்சியம்/அணு குண்டு

விக்கிமூலம் இலிருந்து

அணு குண்டு : ஒரு தனிமத்தின் அணுக் கருவைப் பிளக்கும்போது பேராற்றல் வெளிப்படுகிறது. இதுவே 'அணுக்கரு ஆற்றல்’ எனக் கூறப்படுகிறது.

அணு உலையில் 'அணுக்கருப் பிளப்பு’ கட்டுப்பாட்டுடன் படிப்படியாக நிகழ்த்தப்படுகிறது. ஆனால் அணுகுண்டில் அணுக் கருப்பிளப்பு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாது

ஒரேயடியாக நிகழ்கிறது. இவ்வாறு ஒரே மூச்சில் வெளிப்படும் அளப்பரிய ஆற்றல் ஒரு சில விநாடிகளில் விரைந்து பரவுகிறது. இதுவே, ‘அணு வெடிப்பு’ என்பதாகும்.

இவ்வாறு வெடித்து வெளிக்கிளம்பும் அணுக்கரு ஆற்றல் கடும் வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் எங்கும் பரவியுள்ள காற்று அளவிலா வெப்பத்தை அடைகிறது. தகிக்கும் வெப்பக் காற்றுப் படலம் தீக்கோளம் போல் தோற்றமளிக்கும். தீப்பிழம்பாக, புகை மண்டலமாக மேலெழுந்து பரவும். அப்போது எழும்பும் தூசுகளையும் புகைப்படலங்களையும் உடன் இழுத்து உயரச் செல்லும். அணு குண்டு வெடிக்கும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் காற்றின் மூலக்கூறுகள் ஊதா நிறத்தைப் பெறும். மேல்நோக்கி எழும் தீக் கோளம் பக்கவாட்டில் விரிந்து பரவும். இஃது பார்ப்பதற்கு நாய்க்குடை போல் தோற்றம் தரும்.

அணு சக்தியால் இயங்கும் படைக்கலன்கள் பலவுண்டு. அவற்றுள் பெரும் தீங்கை விளை

அணு குண்டு

விப்பது அணுகுண்டேயாகும். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானிலுள்ள நாகசாகி, ஹிரோஷிமா எனுமிடங்களில் அணுகுண்டுகள்

அணுகுண்டு வெடிப்பு

போடப்பட்டன. அவற்றால் அவ்விரண்டு நகரங்களும் முற்றாக அழிந்தன. ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். அவ்விரு நகரங்களை அடுத்துள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களும் நீண்ட காலம் அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகி அவதியுற்றனர். இன்றும்கூட அதன் பாதிப்புகள் இருக்கவேசெய்கின்றன. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள அணுகுண்டுகள் முத்தியவற்றை விட பன்மடங்கு நாசத்தையும் உயிர்ச்சேதத்தையும் உண்டாக்க வல்லனவாகும்.