இளையர் அறிவியல் களஞ்சியம்/அணு சக்தி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அணு சக்தி : அணு குண்டு வீச்சால் அழிந்த ஜப்பானிய நகரங்களையும் மக்களையும் கண்டு உலக மக்கள் வருந்தினர். அணு சக்தியை அழிவு வேலைக்குப் பயன்படுத்தாது ஆக்கப்பணிகளுக்குப் பயன்படுத்துவதைப் பற்றி விஞ்ஞானிகள் முனைப்பாகச் சிந்திக்கலாயினர். அதன் விளைவாகப் பல புதிய ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தன. அணு சக்தியை ஆக்க வழிக்குப் பயன்படுத்தும் முயற்சி தொடங்கலாயிற்று.

அணுக்கருவைப் பிளப்பதன் மூலமும் பல அணுக்கருக்களைப் பிணைப்பதன் வாயிலாகவும் வெளிப்படும் அபரிமிதமான வெப்ப ஆற்றலைக் கொண்டு பெருமளவில் நீராவி தயாரிக்கலாம். அந்நீராவியின் துணை கொண்டு எந்திரங்களை இயக்கலாம். அணு உலையில் உருவாக்கப்படும் நீராவியைக் கொண்டு டர்பன்களைச் சுழலச் செய்து மின் உற்பத்தி செய்யலாம். அணு சக்தியைக் கொண்டு கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கலாம்.

இன்று அணு சக்தியை தொழில் துறை வளர்ச்சிக்கும் விவசாய உணவுப் பொருள் பெருக்கத்துக்கும் மருத்துவத்துறை பயன்பாட்டுக்கும் பெருமளவில் பயன்படுத்தி பலனடையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முயற்சிகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன.

அணு சக்தியை ஆக்கப்பணிகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தும் சிந்தனை உலகில் வலுத்துவருகிறது. அதற்கான ஆய்வு முயற்சிகள் பலவும் உலக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தகைய அணு ஆய்வு மையங்களில் புகழ்பெற்ற ஒன்று இந்தியாவில் பம்பாய் நகருக்கு அருகில் அமைந்துள்ள பாபா அணு ஆய்வு மையமாகும்.