உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/அம்மை குத்தல்

விக்கிமூலம் இலிருந்து

அம்மை குத்தல் : அம்மை நோய் வராமல் தடுப்பதற்காகவும் பரவாமலிருப்பதற்காகவும் முன் பாதுகாப்பாக அம்மை குத்தப்படுகிறது. இதை 'வாக்சினேசன்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

குழந்தைகளுக்கு இருவகைகளில் அம்மைப் பால் குத்தப்படுகிறது. பழைய முறையில் மேல்கை அல்லது முன்கையில் சுடுநீரால் சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில், ஒரு துளி

அம்மை குத்தல்

நீர்ம அம்மைப்பாலை வைத்து அம்மை ஊசியால் திருகுவார்கள். புதிய முறையில் முன் கையின் தோலில் ஊசியால் கீறி உலர் அம்மைப்பாலை தொட்டு வைப்பர். இச்சிறு அளவு அம்மைப்பாலே அம்மைநோய் எதிர்ப்பாற்றலை உடலில் ஏற்படுத்தி விடும்.

அம்மை குத்திய இருபத்திநான்கு மணி நேரத்தில் குத்தப்பட்ட இடம் சிவந்து வீங்கி விடும்; அவ்விடத்தில் கொப்புளம் தோன்றும். இஃது முத்துப்போல் இருக்கும். பத்து நாட்களுக்குப் பின் இக்கொப்புளம் உடைந்து விடும் அல்லது அமுங்கிவிடும். சில நாட்களில் கொப்புளப் பக்குகள் உதிர்ந்துவிடும். கொப்புளம் இருந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டிருக்கும். குத்தப்பட்ட அம்மைப்பால் உடலில் அம்மை நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி விடுகிறது.

சுமார் 250 ஆண்டுகட்கு முன்பு அம்மை நோய் தடுப்புப்பால் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் அம்மைக் கொப்புளங்களிலிருந்து நேரடியாகச் சீழை எடுத்து மற்றவர்கள் உடலில் ஏற்றினர். இதைவிடச் சிறந்த முறையாக மாட்டம்மைப்பாலை எடுத்து மனிதர்களுக்குப் போடும் முறையை எட்வர்டு ஜென்னர் என்பவர் 1798ஆம் ஆண்டு கண்டறிந்தார். அதுவே இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது. நீர்ம முறைக்குப் பதிலாக அம்மைப் பால் உறை உலர் முறையில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருமுறை குத்தப்பட்ட அம்மைப்பாலில் நோய் எதிர்ப்பாற்றல் நாளடைவில் குறையலாம். எனவே மூன்றாண்டுகட்கு ஒரு முறை அம்மை குத்திக் கொள்வது அவசியமாகும்.

பெரியம்மை நோய் உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்டுவிட்டபடியால், தற்சமயம் இந்த அம்மை குத்தல் முறை நடைமுறையில் இல்லை.