உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/அம்மோனியா

விக்கிமூலம் இலிருந்து

அம்மோனியா : இதை 'நலச்சார ஆவி’ என்றும் அழைப்பார்கள். இது நிறமற்ற, நெடி மிகுந்த மூச்சைத் திணறடிக்கும் ஒரு வகை வாயுவாகும். இவ்வாயுவைச் சுவாசித்தால் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். இது காற்றைவிட 15 மடங்கு அடர்த்தி குறைந்ததாகும். இவ்வாயு நீரில் எளிதாகக் கரையும்.

நிலக்கரி போன்ற நைட்ரஜன் மிகுந்த பொருட்களை உலர்வாலை வடித்தல் மூலம் அம்மோனியா வாயு பெறப்படுகிறது. ஒரு நைட்ரஜன் அணுவும் மூன்று ஹைட்ரஜன் அணுவும் கலப்பதன்மூலம் அம்மோனியா மூலக்கூறு உண்டாகிறது.

நைட்ரஜனையும் ஹைட்ரஜனையும் இரும்புடன் சேர்த்து உயர் அழுத்தத்திலும் வெப்ப நிலையிலும் இணைப்பதன் மூலம் பெரும்பாலும் அம்மோனியா தயாரிக்கப்படுகிறது.

அம்மோனியாவின் துணைகொண்டு அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்ஃபேட், அம்மோனியம் தயாசய்னேட் போன்ற பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

239.6K வெப்ப நிலையில், அதிக அழுத்தத்தில் அம்மோனியா ஒரு நிறமற்ற நீர்மமாக மாறுகிறது. நீருடன் நைட்ரஜன் பிணைப்பு கொண்டிருக்கும் தன்மையால் நீரில் அதிகம் கரையும் தன்மை உடையது. யூரியா உரம் தயாரிக்கவும், செயற்கை பட்டு தயாரிக்கவும், பனிக்கட்டி தயாரிக்கும் எந்திரத்திலும் அம்மோனியா பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.