இளையர் அறிவியல் களஞ்சியம்/அயோடின்
அயோடின் : இது ஓர் அலோகத் தனிமம். 'அயோடின்’ என்பது கிரேக்கச் சொல்லாகும். அதற்கு ஊதா நிறம் என்பது பொருளாகும்.
மிகச் சிறிய அளவு அயோடின் காட்லிவர் எண்ணெயிலும், மனித உடம்பிலும் உள்ளது. பெருமளவு அயோடின் சோடியம் அயோடேட் என்னும் சேர்மத்திலிருந்து பெறப்படுகிறது. அயோடினின் அணு எண் 53.
நமக்கு எப்போதாவது கடுமையான சிராய்ப்போ காயமோ ஏற்பட்டால் கருநீல நிறமுள்ள 'அயோடின் டிங்க்ச்சர்’ என்ற மருந்தை உடனடியாக அதன் மேல் தடவுகிறோம். எரிச்சல் அதிகரித்தாலும் சிறிது நேரத்தில் மறைந்து குளிர்ச்சி உணர்வு உண்டாகும். இம் மருந்தைத் தடவினால் சீழ்பிடிக்காதது மட்டுமல்ல விரைந்து காயமும் ஆறிவிடும். இதற்குக் காரணம் இம்மருந்தில் அயோடின் கலந்திருப்பதேயாகும்.
அயோடினை முதன்முதலில் கண்டறிந்தவர் ஃபிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி பெர்னார்டு கோர்ட்டாய்ஸ் என்பவராவார். ஆயினும் அதனை ஒரு தனிமம் எனக் கண்டுபிடித்தவர் லூ சர்ச் என்பவராவார்.
அயோடின் இயற்கைத் தனிமமாகக் கிடைப்பதில்லை. கடற்பாசியில் அயோடின் கலந்துள்ளது. கடற்பாசிகளைச் சேகரித்து அவற்றை எரித்து அச்சாம்பலிலிருந்து அயோடினைப் பிரித்தெடுக்கிறார்கள். காலிச் என்னும் வெடியுப்புத் தாதுவிலிருந்தும் அயோடின் பிரித்தெடுக்கப்படுகிறது. அயோடின் தண்ணீரில் அதிகம் கரைவதில்லை. ஆல்கஹால் எனும் எரிசாராயத்தில் நன்கு கரையும். ஆல்கஹாலில் கரைந்த அயோடினைக் கொண்டே ‘டிங்க்ச்சர் ஆஃப் அயோடின்’ எனும் காயங்களுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு வகையான மருந்துப்பொருட்கள் தயாரிக்க அயோடின் அதிகம் பயன்படுகிறது. நமது உடலுக்கு அயோடின் ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறது. அது உடம்பில் கூடினாலோ குறைந்தாலோ உடல் நலம் கெடும். இது உடலில் குறைந்தால் கழுத்தின் முன்பகுதி வீங்கிவிடும். அயோடின் உடலில் அதிகமானால் உடல் மெலியத் தொடங்கும். படபடப்பு அதிகமாகும். எனவே அயோடின் உடலில் சீரான அளவில் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். அயோடினை நேரடியாக நாம் உட்கொள்ள முடியாது. அதனால் சமையல் உப்போடு சிறிதளவு சோடியம் அயோடைடு எனும் உப்பைச் சேர்த்து உண்ண வேண்டும். ஒளிப்படத் தொழிலுக்கும் அயோடின் அதிகம் பயன்பட்டு வருகிறது.