இளையர் அறிவியல் களஞ்சியம்/அமீபா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அமீபா : உயிரினங்களிலேயே மிக நுண்ணிய உயிர் அமீபா ஆகும். இது ஓரணு உயிரினத் தொகுதியைச் சார்ந்ததாகும். இதன் முழு உடலும் ஒரே உயிரணுவால் ஆகியதாகும்.

அமீபா சாதாரணமாகக் குளம் குட்டைகளில் நீருக்கடியில் கிடக்கும் கற்கள், அழுகிப்

உருப்பெருக்கி காட்டும் அமீபா

போன இலைகள் ஆகியவற்றின் அடியில் ஊர்ந்து வாழும். அமீபாவை வெறுங்கண்ணால் காண முடியாது. நுண்பெருக்காடியின் துணைக்கொண்டே காண முடியும். இதற்கு நிறமும் கிடையாது; நிலையான உருவமும் கிடையாது. இதன் வடிவம் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும். இது அதிகமாக நன்னீரிலும் கடற்கரையின் ஈரப்பகுதிகளிலுள்ள மண்ணிலுமே வாழும். சில வகை அமீபாக்கள் மனித உடலிலும் பிராணிகளின் உடலிலும் வாழும். இன்னும் சில வகை அமீபாக்கள் செடிகொடிகளிலும் உயிர் வாழும்.

அமீபா தன் உடம்பின் எப்பகுதியையும் பயன்படுத்தி இடம் பெயர்ந்து செல்லும்.

அமீபா

நகரும் போது புறப்பிளாசப் பகுதியில் ஒரு பிதுக்கம் ஏற்படும். இதனுள் அகப்பிளாசம் பாயும். அப்போது ஏற்படும் உடல் நீட்சி போலிக்கால் எனப்படும். இப்போலிக்காலினுள் உடற்பிளாசம் முழுமையும் பாயும். அப்போது அமீபா இடம் விட்டு இடம் பெயரும்.

அமீபாவின் நடுவில் ஒரு கரும்புள்ளி இருக்கும். இதை உட்கரு என்று கூறுவர். இவ்வுட்கரு இல்லாமல் அமீபாவினால் இயங்கவோ உயிர்வாழவோ முடியாது.

அமீபா நுண்ணுயிர்கட்குப் பிற உயிரினங்களைப் போன்று கை, கால், தலை, வயிறு என எதுவுமே கிடையாது. எனவே ஒழுங்கான உருவம் ஏதும் இல்லாத இதன் வடிவம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இதனால் இது "மாறுதல்’ எனும் பொருளுடைய 'அமீபா' என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.

ஓரளவு வளர்ச்சியடைந்த அமீபாவின் உட்கரு இரண்டாகப் பிரியும். பிரியும் கருவுடன் அதன் உடலும் இரண்டாகப் பிளவுபடும்.

அமீபா பெருக்கமடைதல்

இவ்வாறு அமீபா இரண்டு இரண்டாகப் பிளவுபட புதிய அமீபாக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.

அமீபா ஒரு ஒட்டுண்ணியுமாகும். இவை மனிதரின் உடலில் புகுந்து குடலில் தங்குகின்றன. அவை பெருங்குடலில் தங்கி குடற்சுவர்களில் குழி செய்து தங்கியும் துளை செய்து உட்சென்று பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவற்றால் சீதபேதி எனும் வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்குடன் வேறு சில நோய்களையும் உடல் உபாதைகளையும் அமீபாக்கள் ஏற்படுத்துகின்றன.

திறந்த வெளிகளில் மலங்கழிப்பதாலும் நீர் நிலைகளில் மலங்கழித்தபின் மலவாயைக் கழுவுவதாலும், சுத்தமில்லாத நீரைக் குடிப்பதாலும் அமீபாக்கள் உடலுள் புக ஏதுவாகின்றன.

மலத்தின் மூலம் இந்நோய் அதிகம் பரவுவதால் திறந்த வெளியில் மலங்கழிக்கக்கூடாது. ஈ, கரப்பான் பூச்சிகள் மொய்த்த பண்டங்களை உண்ணக்கூடாது. அமீபா பேதி வந்தவர்களோடு மற்றவர்கள் நெருங்கியிருக்கக் கூடாது. சுத்தத்தைக் கண்ணும் கருத்துமாகப் பாவித்தால் இந்நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.