இளையர் அறிவியல் களஞ்சியம்/அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் : இன்றையத் தொலைத் தொடர்பு சாதனங்களுள் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருப்பது தொலைபேசியாகும். இந்த அரிய செய்தித் தொடர்புச் சாதனத்தைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆவார். இவர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை செவிடர் பள்ளியின் ஆசிரியராவார். காது கேளா தோருக்குப் பாடம் புகட்டுவதில் வல்லவராக விளங்கினார். திருத்தமாகப் பேசி குரல் உறுப்புப், பயிற்சி தருவதில் தனித்திறமை பெற்றவர். எனவே கிரஹாம் பெல் இளமை தொட்டே
குரல் ஒலிகளை மீண்டும் ஒலிக்கச் செய்வதில் பேரார்வமுடையவராக இருந்தார். இதற்கான
ஆய்வுச் சிந்தனை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது.
இவர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் 1871ஆம் ஆண்டு குடியேறினார். அங்கும் இவர் தன் ஆராய்ச்சியை முனைப்புடன் செய்து வரலானார். பெரும் உழைப்புக்கும் முயற்சிக்கும் பின்னர் 1875ஆம் ஆண்டில் தொலைபேசியை முதன்முதலாகக் கண்டுபிடித்தார். இன்றையத் தொலைபேசிக்கான அடிப்படை வடிவமைப்பை அன்றே உருவாக்கினார்.
அவரது ஆய்வு முயற்சி மேலும் தொடர்ந்தது. அவர் செவிடர்களுக்குக் காதுகேட்க உதவும் கருவியைக் கண்டுபிடிப்பதில் பெரும் முனைப்புக் காட்டினார். இதற்கு வேறொரு சிறப்புக் காரணமும் இருந்தது. அவரது துணவியார் காதுகேளாதவர். எனவே, முயன்று காது கேட்க உதவும் கருவியைக் கண்டுபிடிப்பதில் பெரும் முயற்சி செய்தார். 1922ஆம் ஆண்டில் கிரஹாம் பெல் காலமானார்.