இளையர் அறிவியல் களஞ்சியம்/அலெக்சாண்டர் ஃபிளெமிங்

விக்கிமூலம் இலிருந்து

அலெக்சாண்டர் ஃபிளெமிங் : பெனிசிலின் எனும் அரிய மருந்தைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் ஆவார். இது சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடை செய்யும் மருந்தாகும்.

இவர் ஸ்காட்லாந்திலுள்ள லாக் ஃபீல்டு எனுமிடத்தில் 1881ஆம் ஆண்டு பிறந்தார். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவப்பள்ளியில் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் இவர் தொற்று நோய்த் தடைகாப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் இராணுவமருத்துவராகப்பணியாற்றினார். போரின்போது காயம்படும் போர் வீரர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் பற்றி ஆராய முற்பட்டார். நோய் நுண்மத் தடை மருந்துகளில் (Antiseptics) பல நோய் நுண்மங்களுக்குத் (Microbes) தீங்கு செய்வதைவிட அதிகமாக உடலின் உயிரணுக்களுக்குத் (Bodycells) தீங்கு விளைவிக்கின்றன என்பதைக் கண்டறிந்தார். நோய் நுண்மங்களுக்கு தீங்கு உண்டாக்குகிற, அதேசமயம் உயிரணுக்களுக்கு தீங்கு ஏற்படுத்தாத ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசர அவசியத் தேவையை உணர்ந்தார். அத்தகைய பொருளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தையும் உழைப்பையும் சிந்தனையையும் செலவிட்டார்.

அலெக்சாண்டர் ஃபிளெமிங்

இவருடைய ஆராய்ச்சி நிலையத்தில் நன்றாக வளர்க்கப்பட்ட நோய் நுண்ணுயிர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின்மீது காற்றுப்பட்டு அவை மாசு அடைந்தன. அப்போது உருவான பூஞ்சக்காளானைச் சுற்றியிருந்த வளர்ச்சிப்பகுதியிலிருந்த நோய் நுண்ணுயிர்கள் கரைந்து போயிருந்தன. இதைக் கண்ட ஃபிளெமிங் நோய் நுண்ணுயிர்களுக்கு நஞ்சாக இருக்கக் கூடிய ஏதோ ஒரு புதியபொருள் பூஞ்சக்காளானால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை ஊகித்துணர்ந்தார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் விளைவாக அதே பொருள் தீங்கிழைக்கும் வேறுவகை நோய் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடை செய்வதையும் கண்டறிந்தார். இதை ஆய்வுப்பூர்வமாக மெய்பித்துக் காட்டினார். அந்தப் பொருளுக்கு பூஞ்சக்காளானின் (Pencilium notatum) பெயரைக் கொண்டே 'பென்சிலின்' (Pencilin) என்றே பெயரமைத்தார். இப்புதிய பொருள் மனிதர்களுக்கோ பிற பிராணிகளுக்கோ தீங்கிழைப்பதில்லை. இப்பொருள் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. இன்றும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

இத்தகு சிறப்புமிகு பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு 1945ஆம் ஆண்டில் உலகப்பெரும் பரிசான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. ஃபிளெமிங் அதன் பின் பத்தாண்டுகள் வாழ்ந்து 1955ஆம் ஆண்டில் மறைந்தார்.