இளையர் அறிவியல் களஞ்சியம்/அலெர்ஜி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அலெர்ஜி : இந்த ஆங்கிலச் சொல்லுக்கு ‘ஒவ்வாமை” என்பது பொருளாகும். நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் சிலவற்றை நம் உடம்பு ஏற்றுக் கொள்வதில்லை. அத்தகைய உடல் ஏற்கா உணவுகளை உட்கொண்டால் தலைவலி, உடல் எரிச்சல் போன்ற உடல் தொல்லைகள் ஏற்படும். இதுவே ஒவ்வாமை நோயாகும்.

சில பேருக்குச் சிலவகை காய்கறிகள் ஒவ்வுவது இல்லை. சிலரது உடல் சிலவகை தானிய உணவுகளை ஏற்பதில்லை. இன்னும் சிலருக்கு சிலவகை பூக்களின் மணம் ஒவ்வுவது இல்லை.

நாம் நாள்தோறும் பயன்படுத்தும் கம்பளி போன்ற பொருள்களும் முகப்பூச்சுத் தூள் (பவுடர்)களும் கூட உடலுக்கு ஒவ்வுவது இல்லை. சிலருக்குக் காற்றில் பறந்து வரும் மென்மையான தூசிகள், பஞ்சு, ஒட்டடை ஒவ்வுவதில்லை. இவற்றால் இருமல், உடல் அரிப்பு, திட்டுத்திட்டாகத் தழும்பு ஏற்படுதல், இன்னும் சிலருக்குச் சளித்தொல்லை தரும் ஈழை நோய்கள், ஆஸ்துமா ஏற்படுவதுண்டு. இதற்கான ஒவ்வாமைப் பரிசோதனை மூலம் எந்தெந்தப் பொருள் உடலுக்கு ஒவ்வாதவை என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்தால் ஒவ்வாமை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.