இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆக்சிகரணம்
ஆக்சிகரணம் : இதனை ஆக்சிஜனேற்றம், (Oxidation) என்றும் கூறுவர். மக்னீசியம் காற்றில் எரியும்போது அது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கூடி மக்னீசிய ஆக்சைடைத் தருகிறது. இங்கு மக்னீசியம் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. எனவே ஒரு பொருள் ஆக்சிஜனுடன் கூடுவதை ஆக்சிஜனேற்றம் என்கிறோம். ஆக்சிஜன் எதிர்மின் தன்மையுடைய தனிமமாகும். எனவே, எதிர்மின் தன்மையுடைய தனிமம் ஒரு பொருளுடன் சேருவதும் ஆக்சிஜன் ஏற்றமாகும். ஒரு சேர்மம் அல்லது கூட்டுப் பொருளிலிருந்து ஹைட்ரஜன் விலக்கப்படுவதை ஆக்சிஜனேற்றம் என்கிறோம். ஹைட்ரஜன் நேர் மின் தன்மை கொண்ட தனிமமாகும். எனவே ஒரு கூட்டுப் பொருளிலிருந்து விலக்கப்படுவதையும் ஆக்சிஜனேற்றம் என்கிறோம்.
சுருங்கக் கூறின் ஆக்சிஜன் சேர்ப்பு, எதிர் மின் உறுப்பு அதிகரிப்பு, ஹைட்ரஜன் நீக்கம், எலெக்ட்ரான் இழத்தல் ஆகியவை ஆக்ஸிஜன் ஏற்றமாகும். ஆக்சிஜன் ஏற்றத்திற்கு துணைபுரியும் பொருட்கள் ஆக்சிஜனேற்றிகளாகும்.