இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆக்சிஜன்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

ஆக்சிஜன் : நாம் அடிக்கடி காற்றை உள்ளே இழுத்து சுவாசிக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்றில் பல வாயுக்கள் அடங்கியுள்ளன. அவற்றில் 21 விழுக்காடு ஆக்சிஜன் வாயு அடங்கியுள்ளது. இது நாம் உயிர்வாழ இன்றியமையாது தேவைப்படும் வாயுவாகும். இது 'பிராணவாயு', 'உயிர்வளி’, ‘உயிரகம்’ என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் அமிலமாக்குதல் என்னும் பொருள்பட ஆக்சிஜன் என்ற பெயர் கையாளப்பட்டது. 1774இல் ஜோசப் பிரிஸ்டிலி என்ற ஆங்கில விஞ்ஞானி இவ்வாயுவைக் கண்டுபிடித்தார்.

மனிதர்கள் மட்டுமல்லாது விலங்கினங்கள் உயிர்வாழவும் ஆக்சிஜன் அவசியமாகிறது. இது நுரையீரலுள் சென்று இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. நாம் சாதாரணமாகச் சுவாசிக்கும்போது ஆக்சிஜனை உள்ளே இழுத்து கார்பன்டை ஆக்சைடு எனும் கரியமில வாயுவை வெளியிடுகிறோம். இவ்வாயு தாவரங்கள் உயிர்வாழ அவசியமாகின்றது. நீரினுள் வாழும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை சுவாசித்து உயிர்வாழ்கின்றன.

ஆக்சிஜன் ஒரு தனிமம் ஆகும். உலகில் மிக அதிகமாகக் கிடைக்கும் தனிமம் இதுவேயாகும். உயிரினங்கள் சுவாசிப்பதற்கு மட்டுமல்லாது பல்வேறு வேதியியல் வினைகள் நிகழ இவ்வாயு காரணமாக அமைகிறது. ஆக்சிஜன் வாயுவைக் காற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கவும்.

ஆக்சிஜனுக்கு மணமோ, நிறமோ, சுவையோ இல்லை. அதிக வெப்பத்தில் ஆக்சிஜன் திரவமாக மாறும். காற்றில் ஆக்சிஜன் அளவு குறைவதே இல்லை. காரணம் தாவரங்கள் நாம் வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிட்டு காற்றில் ஆக்சிஜன் அளவைச் சமனப்படுத்தி வருவதேயாகும். இச்செயல் 'ஒளிச்சேர்க்கை’ என்று அழைக்கப்படுகிறது. காற்று மண்டலத்தில் உள்ள கலவையில் ஐந்தில் ஒரு பங்கு தனிம ஆக்சிஜன் உள்ளது.

ஆக்சிஜன் இரும்பு, கந்தகம் போன்ற பிற தனிமங்களுடன் கூட்டுச் சேரும்போது ஆக்சைடு எனும் புதிய கூட்டுப் பொருளை உருவாக்குகிறது. ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் சேரும்போது நீர் உண்டாகிறது. காற்றிலிருந்தும் ஆக்சிஜன் அதிகமுள்ள கூட்டுப் பொருள்களிலிருந்தும் (சாதாரணமாக பொட்டாசியம் குளோரேட்) ஆக்சிஜனைத் தனியே பிரித்து இரும்புக் குழாய்களில் அடைத்து சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்

ஆக்சிஜனுக்கு எரியும் தன்மை உண்டு. ஆக்சிஜன் கலந்த தீப்பிழம்பைக் கொண்டு இரும்புத் துண்டுகளை இணைக்கவோ அல்லது துண்டிக்கவோ முடியும். ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் அல்லது. ஆக்சிஜன்-அசிட்டிலீன் கலவை கடின உலோகங்களை வெட்டவோ அல்லது இணைக்கவோ பயன்படுகின்றன. மூச்சுவிட முடியாமல் திணரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி மூச்சுத் திணரலைப் போக்கி எளிதாகச் சுவாசிக்கச் செய்யலாம். ஆக்சிஜன் வாயும் குறைவாக உள்ள மலை உச்சிகளுக்குச் செல்வோர் தங்களுடன் ஆக்சிஜன் அடைக்கப்பட்ட சிலிண்டர்களைக் கொண்டு செல்வர். விண்ணிற் செலுத்தப்படும் விண்கோள்களில் ஆக்சிஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. வெடி மருந்துகள் தயாரிக்கவும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.

மூச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் செலுத்துதல்

நீர்மநிலை ஆக்சிஜன் ராக்கெட்டில் பயன்படுத்தும் எரிபொருள்களில் ஒன்றாக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

மிகக்குறைந்த அழுத்தத்தில் மின் ஆற்றல் செலுத்தி மூலக்கூறு நிலை ஆக்சிஜன் அணு நிலை ஆக்சிஜனாக மாற்றப்படுகிறது. அணு நிலை ஆக்சிஜன் மிகவும் வினைமிக்கது. அனு நிலை ஆக்சிஜன் மூலக்கூறு ஆக்ஸிஜனுடன் இணைந்து ஓஸோன் (Ozone) என்னும் மூன்றணு ஆக்சிஜன் மூலக்கூறு உருவாகிறது. இந்த ஓஸோன் படலம்தான் சூரிய ஒளியின் சக்தி வாய்ந்த ஒளிக்கதிரை மட்டுப்படுத்தி பூமியில் வாழும் உயிர்ப் பொருட்களை பாதுகாக்கிறது.