இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் : எதிர்பாராத விதமாக எத்தனையோ பெரிய விபத்துக்கள் ஏற்படுகின்றன. சில சமயம் திடீரெனக் கடுமையான நோய்க்கு ஆட்படுவதும் உண்டு. அந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசிய அவசரம் ஏற்படும். இதற்கான அவசர கால வாகனமே ஆம்பு லன்ஸ்.
இந்த வாகனத்தின் இருபுறமும் சிவப்புநிறத்தில் சிலுவைக்குறி வரையப்பட்டிருக்கும். வண்டியின் கூரையில் சுழலும் சிவப்பு விளக்குப் பொருத்தப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்லும்போது இவ்வாகனம் ஒருவித ஓசையை எழுப்பிக்கொண்டே செல்லும். இவ்வோசையைக் கேட்கும் பிற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை ஓரமாகச் செலுத்தியோ அல்லது நிறுத்தியோ ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவர். இதனால் ஆம்புலன்ஸ் வண்டி இடையூறோ தடையோ இல்லாது விரைந்து சென்று மருத்துவமனையை அடையும்.
ஆம்புலன்ஸ் வண்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர கால முதலுதவிப் பொருட்கள் பலவும் வைக்கப்பட்டிருக்கும். நவீனமாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டியில், மிக மோசமாக இருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற, பிராண வாயு மற்றும் அவசர ஆபரேசன் கருவிகள் முதற்கொண்டு மருத்துவ துணைக் கருவிகள் தயார் நிலையில் இருக்கும்.
ஆம்புலன்ஸ் வண்டிகள் மருத்துவமனைகளிலும் தீ அணைப்பு நிலையங்களிலும் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். உதவி தேவைப்படுவோர் தகவல் தந்தால் உடனடியாக இவ்வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும்,
ஆம்புலன்ஸ் வண்டியை முதன்முதலாக 1792இல் உருவாக்கிப் பயன்படுத்தியவர் பாரன் ஜீன் லாரி எனும் ஃபிரெஞ்சுப் போர் வீரராவார். போரில் காயம்பட்டவர்களைக் காப்பாற்றவே இவ்வேற்பாடு. போரின்போது இவ்வண்டிகளை எத்தரப்பினரும் எக்காரணம் கொண்டும் தாக்கக் கூடாது என்பது சர்வ தேசக் கட்டுப்பாடாகும். 1864ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனீவா உடன்பாட்டின்படி ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டுநரும் அதில் பணியாற்றுவோரும் எத்தரப்பையும் சாராத நடு நிலையாளர்களாகக் கருதப்படுவர்.