உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆர்க்கிமிடீஸ்

விக்கிமூலம் இலிருந்து

ஆர்க்கிமிடீஸ் : சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த மாபெரும் கணித மேதையும் நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமானக் கோட்பாட்டையும் வகுத்தளித்த விஞ்ஞானியும் ஆவார்.

கணிதமேதையாக விளங்கிய ஆர்க்கிமிடீசிடம் மன்னர் புதிதாகச் செய்யப்பட்ட தன் கிரீடத்தைத் தந்து இது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிந்து

ஆர்க்கிமிடீஸ்

கூறுமாறு பணித்தார். எவ்வாறு கணக்கிட்டு அறிவது எனத் தெரியாமல் தவித்தார். இந் நிலையில் குளிக்க நீர்த் தொட்டியில் இறங்கினார்:நீர்நிறைந்த தொட்டியிலிருந்து குறிப்பிட்ட அளவு நீர் உயர்ந்து வழிந்து கீழே கொட்டியது. இது அவருக்குப் புதிய சிந்தனையைக் கொடுத்தது.நீர்நிறைந்த தொட்டியினுள் கிரீடத்தை விட்டார். அப்போது வெளியேறிய நீரின் எடையை அளந்து குறித்துக் கொண்டார். அதன்பிறகு கிரீடத்தின் எடை அளவுக்குச் சமமான சுத்தத் தங்கத்தை நீர் நிறைந்த தொட்டியில் இட்டார். வெளியேறிய நீரின் எடையை அளந்துகொண்டார். கிரீடம் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் இரண்டு எடை அளவும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லை. இதிலிருந்து கிரீடம் சுத்தத் தங்கத்தில் செய்யப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்த ஆய்வின் மூலம் ஆர்க்கிமிடீஸ் அறிவியல் உண்மையை உலகுக்கு வெளியிட்டார். இது 'ஆர்க்கிமிடீசின் தத்துவம்’ என அழைக்கப்படுகிறது.

இதை அவர் குளிக்கும்போது கண்டுபிடித்தார். தான் ஆடையின்றிக் குளிப்பதையும் மறந்து, மகிழ்ச்சிப் பெருக்கில் 'யுரேக்கா யுரேக்கா' (கண்டுபிடித்து விட்டேன்! கண்டு பிடித்து விட்டேன்) எனக் கத்திக் கொண்டு தெருவில் ஓடியதாகக் கூறப்படுவதுண்டு.

“ஒரு திடப்பொருள் காற்றிலிருக்கும்போது உள்ள எடையைவிட திரவத்தில் இருக்கும் போது எடை குறைவாக இருக்கும். இந்த இருவித எடைகளுக்கிடையேயான வேறுபாடு திடப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத் திற்குச் சமமாகும்“ என்பதே தத்துவம்.

ஆர்க்கிமிடீஸ் மாபெரும் கணித வல்லுநராகவும் விளங்கியவர். இருபதாம் நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த கணித உண்மைகளின் அடிப்படைகளை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டறிந்து கூறியவர். கணிதத் தொடர்பான உருளை, கோளம், வட்டம், சுருள் ஆகியவைபற்றிய கணிதக் கோட்பாடுகளையும் வகுத்தளித்துள்ளார்.

ரைட் சகோதரர்கள் செய்த விமானம்

நெம்புகோலைப் பயன்படுத்துவது இவரது காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவந்துள்ளது. எகிப்தியர்கள் நெம்புகோலின்பயன்பாட்டை நன்றாக அறிந்திருந்தனர். எனினும், நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துக் கூறியவர் ஆர்க்கிமிடிசே ஆவார்.