இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆற்றல்
ஆற்றல் : 'சக்தி’ என்பதன் மறுபெயரே ஆற்றல் என்பது. ஆற்றல் என்பது எத்தனையோ பொருட்களில் எத்தனையோ வடிவங்களில் அமைந்துள்ளன. வெப்பம், ஒளி, ஒலி, காந்தம், மின்சாரம் ஆகியவைகளெல்லாம் ஆற்றல் மூலாதாரங்கள் ஆகும். ஆற்றல் மூலங்களை அறிந்து அவற்றைத் திறம்படப் பயன்படுத்தி, ஆற்றல் பெறுவதைப் பொருத்தே தனி மனித வாழ்க்கை வளரும். நாட்டுப் பொருளாதார முன்னேற்றமும் அமைந்துள்ளது. இதுவே நாகரிக வளர்ச்சியின் அளவு கோலும் ஆகும்.
நமக்கும் பிற உயிரினங்களுக்கும் மிகுதியான ஆற்றலை வழங்கும் அருஞ்சாதனமாக விளங்குவது கதிரவனேயாகும். இச்சக்தி சங்கிலிக் கோர்வைபோல் அமைந்து, மனித வாழ்வை மேம்படுத்தி வருகின்றன. சான்றாக சூரிய ஒளியிலிருந்து தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றலைத் தயாரிக்கின்றன.
அதே தாவரத்தை விறகாக எரிக்கும்போது வெப்பமாக வெளிப்பட்டுப் பயன்படுகிறது. இவ்வாறு ஆற்றலைத் தேக்கி வைத்திருந்த மரங்களும் செடி கொடிகளும் பன்னெடுங்காலத்திற்கு முன் மண்ணுள் புதையுண்டன. அவையே இன்று நிலக்கரியாகவும்பெட்ரோலாகவும் இயற்கை வாயுவாகவும் மனிதகுலத்துக்கு வெப்பச்சக்தியாகப் பயன்பட்டு வருகின்றன. நிலத்தடியில் கிடைக்கும் வெப்பாற்றல், கடல் அலைகளிலிருந்து திரட்டப்படும் மின் சக்தி, காற்றால் பெறும் ஆற்றல் ஆகிய அனைத்துக்கும் கதிரவனே காரணமாகும். சூரிய ஆற்றலுக்கு அடுத்தபடியாக அனல்மின் ஆற்றலும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் மேலான பேராற்றலை ‘அணு’ மூலம் இன்று பெறுகின்றோம்.
ஆற்றல்களிலேயே மிக அதிகமாக மனித வாழ்க்கைக்குப் பயன்படும் பேராற்றலாக மின்சார ஆற்றல் விளங்குகிறது, கம்பி மூலம் வேண்டிய இடங்களுக்குக் கொண்டு சென்று மாபெரும் இயந்திரங்கள் முதல் மின் அடுப்பு வரைப் பயன்படுத்தி வாழ்வில் வளங் காண்கிறோம். மருத்துவத் துறையும் மின்னாற்றலைப் பயன்படுத்தி அளப்பரிய பயன்களை அளித்து வருகிறது. மின்னணு ஆற்றல் இன்றைய வாழ்வியலின் அடித்தளமாக அமைந்து வருகிறதெனலாம்.