இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆஸ்பால்ட்

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்பால்ட் : நாம் 'தார்’ என்று அழைக்கும் பொருள் 'ஆஸ்பால்ட்' என்று கூறப்படுகிறது. இது இயற்கையாகக் கிடைக்கும் ஒருவகை தாது ஆகும். இது கறுப்பாகவோ அல்லது கரும்பழுப்பு நிறமாகவோ கிடைக்கிறது. உலகிலேயே மிக அதிகமாக ஆஸ்பால்ட் கிடைக்குமிடம் மேற்கு இந்தியத் தீவிலுள்ள டிரினிடாட் ஆகும். இங்கு 285அடி ஆழத்தில் 100 ஏக்கர் பரப்பில் கிடைக்கிறது,

செயற்கை முறையிலும் ஆஸ்பால்டைப் பெறமுடியும், பெட்ரோலிய கச்சாப்பொருளை காய்ச்சி வடிக்கும்போது அடியில் படியும் பொருளாக ஆஸ்பால்ட் கிடைக்கிறது. இது பெட்ரோலிய உப பொருளாகும்.

பெரும்பாலும் சாலைச் சீரமைப்பிற்கு ஆஸ்பால்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிறு சரளைக்கற்களுடன் 12:1 என்ற விகிதத்தில் 2000 வெப்பத்தில் கலந்து சாலையில் நிரவி கனமான உருளைகளால் அழுத்தி சாலைகளை வழவழப்பாக்குவர்.

ஆஸ்பால்ட் நீரை விலக்கும் தன்மையுடையது. எனவே கூடாரங்களின் மீதும் வண்டிகளின் மீதும் போர்த்தும் தார்ப்பாலின் போர்வைகள் ஆஸ்பால்டைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நீர் ஒழுக்கு இல்லாமலிருங்க கூரைகளின் மீது ஆஸ்பால்டை பூசுவதும் உண்டு.