உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/இடி, மின்னல்

விக்கிமூலம் இலிருந்து

இடி, மின்னல் : மழைபெய்யும் சமயத்தில் மழை மேகங்களிலிருந்து இடியும் மின்னலும் திடீரெனத் தோன்றும் ஓரிரு விநாடிகளே நீடிக்கும் இடியும் மின்னலும் பலமுறை விட்டு விட்டுத் தோன்றி மறையும். அப்போது எழும் பெரும் சத்தமே இடியாகும். இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும்.

வானில் மின்னல் தோற்றம்

மழை சமயத்தில் வானில் மிதக்கும் மேகங்களில் மின்சக்தி அதிகமாக இருக்கும். மழையின்போது கருமேகங்கள் ஒன்றையொன்று நெருங்கும். அப்போது ஒன்றின் மின்சக்தி மற்றொன்றை நோக்கிப் பரவும். அப்போது கண்ணைக் கூசச் செய்யும் போரொளி உண்டாகும். அதுவே மின்னல்.

மின்னல் ஏற்படும்போது அங்கு பரவியுள்ள காற்று சூடாகிறது. வெப்பக்காற்று திடீரென பெரும் ஓசையுடன் விரிவடைகிறது. அவ்வோசையே இடியாகும். பின்னர் மீண்டும் காற்று குளிர்ந்து சுருங்குகிறது. மீண்டும் மேகங்களுக்கிடையே மின்பாயும்போது காற்று வெப்பமடைந்து பேரொலியுடன் விரிவடைகிறது. இச்செயல் அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழும்போது மழையுடன் இடியும் மின்னலும் ஏற்படுகிறது.

இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் நிகழ்வதாகக் கூறினோமல்லவா? அப்போது மின்னல் ஒளியை முதலில் பார்க்கிறோம். பின்னரே இடியோசையைக் கேட்கிறோம். இதற்குக் காரணம் ஒளி அலைகள் ஒலி அலைகளைவிட விரைவாக நம்மை அடைவதேயாகும்.

சில சமயம் பூமிக்கு அருகாக மின்னல் ஏற்படும். அப்போது உண்டாகும் மின்சாரம் அருகாக உள்ள கட்டிடங்கள் மரங்கள் மூலம் மின்சாரம் பூமியை நோக்கிப் பாயும். அப்போது ஏற்படும் அபரிமிதமான வெப்பத்தால் மரங்கள் கருகிவிடும். கட்டிடங்கள் மீது பொருத்தப்பட்டிருக்கும் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து பூமிக்குள் சென்றுவிடும்.

மின்னல் தாக்கும்போது மரங்கள் மட்டுமல்ல மனிதர்கள், ஆடு, மாடு போன்ற மிருகங்கள் கருகிச் சாக நேரிடும். இடி தாங்கி இல்லாத கட்டிடங்கள் எரிகின்றன. சுவர்களில் பிளவு ஏற்படுகிறது. இதைத்தான் 'இடிவிழுதல்' என அழைக்கிறோம். இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் மரங்களின் அடியில் இருக்கக் கூடாது. அது உயிருக்கு ஆபத்தாகும். இரும்புப்பிடி கொண்ட குடையை மழைக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. மழையில் நனைந்து செல்லும்போது உலோகப் பொருள்களை உடலுடன் ஒட்டி எடுத்துச்செல்லக் கூடாது.

பெரும் கட்டிடங்கள் இடியாமல் பெரும் சேதம் அடையாமல் இருக்கும் பொருட்டு அவற்றின் இடி, மின்னலால் உண்டாகும் மின்சாரத்தை உட்கொண்டு பூமிக்குள் செலுத்தும் தன்மையுடைய இடிதாங்கிக் கம்பியைப் பொருத்துவார்கள். அக்கம்பிகளின் ஒரு முனையை பூமிக்குள் இருக்குமாறு வைப்பார்கள். மற்றொரு முனையை கட்டிடத்திற்கு மேலாக மேல் நோக்கி இருக்குமாறு கூர்மையான முனையுடன் அமைப்பார்கள். இதற்குத் தடித்த பட்டையான செப்புக்கம்பியைப் பயன்படுத்துகிறார்கள். இடிதாங்கிக் கம்பி பொருத்தப்பட்ட கட்டிடத்திற்கு அருகே மின்னல் உண்டாகும்போது வெளிப்பாயும் மின்சாரம் கம்பி வழியே தரையை எளிதாக அடைகிறது. இதனால் கட்டிடம் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்ப வழியேற்படுகிறது. இடிதாங்கிச் செப்புக் கம்பி 2.6 செ.மீ. அகலமும் 2 செ.மீ. தடிப்பும் உடையதாக இருக்கும்.

மின்னலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் தகடு மின்னல், நாடாமின்னல், பாசி மின்னல், வெப்ப மின்னல், பந்து மின்னல், அலை மின்னல் ஆகியன முக்கியமானவை களாகும்.

மின்னல் ஏற்படுவதால் பலவித நன்மைகளும் காற்று வழியே பாயும்போது அயனியாக்கப்பட்ட காற்றினால் நைட்ரஜன் ஆக்சைடும் ஓஸோன் எனும் ஒருவகை ஆக்சிஜனும் உற்பத்தியாகின்றன. தாவரங்கள் நன்கு செழித்து வளர நைட்ரஜன் ஆக்சைடு உரமாகப் பயன்படுகின்றது.

இடிதாங்கியைக் கண்டு பிடித்து முதன்முதல் பயன்படுத்தி வெற்றி கண்டவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஆவார்.