இளையர் அறிவியல் களஞ்சியம்/இன்சுலின்

விக்கிமூலம் இலிருந்து

இன்சுலின் : இது கணையத்திலுள்ள லாங்கர் ஹான்ஸ் எனும் திசுக்களால் சுரக்கப்படுகிறது. இது ஒருவகை ஹார்மோன் ஆகும். இது நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் உணவுப் பொருளின் வளர்சிதைவு மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். சர்க்கரையும், கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்ததுதாம். நம் உடலில் ஓடும் இரத்தத்தில் சாதாரணமாக 5 சதவிகிதம் சர்க்கரைச் சத்துக் கலந்துள்ளது. கல்லீரல் வாயிலாகவே சர்க்கரைச் சத்து இரத்தத்துடன் கலக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கல்லீரல் சர்க்கரையை கிளைக்கோஜனாக மாற்றித் தன்னிடமே சேமித்து வைத்துக் கொள்கிறது, திசுக்கள் தங்களுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற சர்க்கரையை ஆக்சிஜனேற்றம் செய்து கொள்கின்றன. இக்காரியங்களெல்லாம் செவ்வனே நடைபெற உறுதுணை செய்வது இன்சுலின் ஆகும். இன்சுலின் கணைய நீரோடு கலக்காமல் நேராக இரத்தத்தில் கலக்கிறது. நாம் அதிக அளவில் சர்க்கரையை உட்கொண்டால் கணையத்தில் அதிக அளவில் இன்சுலின் சுரக்கத் தொடங்கும். இன்சுலினைச் சுரக்கக் கூடிய சுரப்பிகள் பழுதடைந்தால் இன்சுலின் சுரப்பது குறையும். இவ்வாறு இன்சுலின் சுரப்பது குறைந்தாலோ அல்லது இன்சுலின் சுரக்காமலே போனாலோ இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் திசுக்கள் சர்க்கரையைச் சக்தியாக மாற்றும் ஆற்றலை இழக்கும். இதனால் ஏற்படும் நோயே 'நீரிழிவு நோய்’. இதைச் ‘சர்க்கரை வியாதி” என்றும் கூறுவர்.

இந்நோய் கண்டவரின் இரத்தத்தில் மிகும் சர்க்கரை சக்தியாக மாறாமல் இரத்தத்தில் ஓடி சிறுநீர் மூலம் வெளியேறி விடும். எனவே இரத்தத்தில் மிகும் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த முடியும். இதற்காக இந்நோய் கண்டவரின் சிறுநீரைச் சோதித்துப் பார்த்தும் இரத்தத்தைப் பரிசோதித்தும் சர்க்கரையின் அளவைக் கண்டறிய வேண்டும். அப்படி சர்க்கரை அளவுக்கதிகமாக இருப்பின் ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் கணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட இன்சுலினை ஊசி மூலமோ அல்லது மாத்திரை வாயிலாகவோ உட்கொண்டு இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வேறு சில நோய்களுக்கும் கூட இன்சுலின் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

நீரிழிவு நோய் கண்டவர்கள் அதிக அளவில் சிறுநீர் கழிப்பர். பலவீனமடைவர். அடிக்கடி மயக்கமும் ஏற்படும். சிலருக்குப் பைத்தியக்கோளாறுகள் ஏற்படுவதும் உண்டு.

இன்சுலினைக் கண்டுபிடித்தவர் எஃப்.ஜி. பாண்டிஸ் என்பவரும் சி. ஹெச். பேஸ்ட் என்பவருமாவார். இவர்கள் இருவரும் கனடா நாட்டு அறிவியல் ஆய்வாளர்களாவர்.