இளையர் அறிவியல் களஞ்சியம்/இழைகள்
இழைகள் : மென்மையான நீண்ட நூல் போன்ற இழைமப் பொருள் 'இழைகள்’ ஆகும். இதை நார் என்றும் கூறுவார்கள். இஃது ஆங்கிலத்தில் ஃபைபர் (Fibre) என அழைக்கப்படும். இழைகளின் முக்கியத் தன்மை அதன் இழு வலிமை, அதன் மென்மைத் தன்மை, நீரை உறிஞ்சும் ஆற்றல், வெப்பத்தைக் கடத்தும் குணம் ஆகியவற்றைக் கொண்டு கணிக்கப்படும். இழைகளின் மிகச் சிறியது பட்டு இழை, மிகப் பெரிய இழை தடித்த சணல் இழையாகும்.
இழைகள் இயற்கை இழை, செயற்கை இழை என இருவகைப்படும். இயற்கை இழைகள் பெரும்பாலும் தாவரப்பொருட்களிலிருந்தும் பிராணிகளிடமிருந்தும் பெறப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது பருத்தி, சணல், ஆளிச்செடி, ராமி எனும் சீனப்புல், கற்றாழை நார் முதலியன தாவரங்களிலிருந்தும் கம்பளியும் பட்டும் ஆடு, பட்டுப்பூச்சிபோன்ற உயிர்வாழ் இனங்களிலிருந்து பெறப்படுகின்றன.
செயற்கை முறையில் இழைகள் தயாரிக்கும் முறை சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. முதலில் தாவரப்பொருட்களிலுள்ள செல்லுலோசைக் கொண்டு செயற்கை இழைகள் தயாரிக்கப்பட்டன. இவை ரயான் (Rayon) என்ற பெயராலும் அழைக்கப்பட்டன. இவ்விழைகள் பட்டை ஒத்தவைகளாகும்.
ஆஸ்பெஸ்டாஸ் எனும் கல்நார்ப் பொருளிலிருந்தும் கண்ணாடியிலிருந்தும் இழைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றால் உருவாக்கப்படும் பொருள் வெப்பத் தடுப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று வேதியியலின் துணையோடு விதவிதமான இழைகள் செயற்கை முறையில் உருவாக்கப்படுகின்றன. இவ்விழைகளைக் கொண்டு லினன், நைலான், டெரிலீன் ஆடைகள் உருவாக்கப்பட்டு மக்களால் விரும்பி அணியப்படுகின்றன.