இளையர் அறிவியல் களஞ்சியம்/இரைப்பை
இரைப்பை : உணவு செரிமான உறுப்புகளுள் மிக முக்கியமானது இரைப்பை (Stomach) ஆகும். உணவுக்குழலுக்கு கீழாகவுள்ள பருத்த பகுதியாகும். இதன் மேல் பகுதியோடு உணவுக்குழல் முடிகிறது. இதன் கீழ்பகுதியிலிருந்து குடற்பகுதி தொடங்குகிறது. வயிற்றின் மேற்பகுதியில் இடப்புறமாக அமைந்து உள்ளது. இரைப்பையின் அளவு சிறுவர்களுக்கு 1 லிட்டர், பெரியவர்களுக்கு 2 லிட்டரிலிருந்து 8 லிட்டர்வரை இருக்கும்.
இரைப்பையினின்றும் சிறுகுடலை நோக்கிச் செல்லும் பகுதி ‘குடல் வாய்’ என அழைக்கப்படுகிறது. இரைப்பையின் மேற்புறம் வயிற்றுறையால் ஆகியது. உட்புறம் சளி போன்ற கோழைப்படலத்தால் ஆகியுள்ளது. இரைப்பையில் உணவு எதுவும் இல்லாதபோது சுருங்கி ஒரு குழாய் போல் தோற்றமளிக்கும். வேண்டிய அளவுக்கு உணவு சென்றடைந்ததும் உணவின் அளவுக்கேற்ப விரிந்து பருத்
துக் காணப்படும். இரைப்பைக்கு உணவு வந்து சேர்ந்தவுடன் உட்புறக் கோழைப்படலத்திலிருந்து இரைப்பை நீரைச் சுரக்கும். இந்நீரில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சின் என்ற சீரண நீரும் இருக்கின்றன. இரைப்பைக்குள் வரும் திட உணவை திரவ உணவாக ஹைட்ரோ குளோரிக் அமிலம் மாற்றுகிறது. அவ்வாறே பெப்சின், உணவை நன்கு சீரணமடையச் செய்கிறது. புரதச் சத்துக்களை சீரணிக்க பெப்சின் உதவுகிறது.
ரெனின் என்ற என்ஸைம் பாலை நன்கு உறையச்செய்து அதன் சத்துக்களைப் பிரித் தெடுத்து இரத்தத்திற்கு தருகிறது.லைப்பேஸ் என்ற என்ஸைம் கொழுப்புச் சத்தை சீரணிக்க உதவுகிறது. இரைப்பைக்கு மூளையிலிருந்து வேகஸ் (Vagus) என்ற நரம்பு வருகிறது. இது இரைப்பை சீரண நீரை சுரக்க உதவுகிறது.
இரைப்பையினுள் இருக்கும் உணவை அங்கு சுரக்கும் சீரண நீர் கரையச் செய்கிறது. இதற்கேற்ப இரைப்பைச் சுவர்கள் அடிக்கடி
சுருங்கி விரிவதால் உணவு சீரன நீரால் நன்குகுழைக்கப்பட்டு கூழாகக் கடையப்படுகிறது. கஞ்சிபோன்று திரவநிலைக்கு மாறிய உணவு குடல்வாய் வழியாக சிறிது சிறிதாகத் திறக்க குடற் பகுதிக்கு கூழாக்கப்பட்ட உணவு செல்லுகிறது. பெருங்குடல், சிறுகுடல் பகுதி வழியே செல்லும் உணவிலுள்ள சத்துப் பொருட்கள் குடற் பகுதிகளில் உள்ள சத்துருஞ்சிகளால் உறிஞ்சப்படுகின்றன. சத்தற்ற சக்கை மலக்குடல் வழியே வெளியேற்றப்படுகிறது.
கார உணவுகளாலும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிக அளவில் தங்க நேரிட்டாலும் இரப்பையில் புண் ஏற்படும். இப்புண் ஆறுவது சற்றுக் கடினமாகும். இந்நோய்க்கு அளவுக்கதிகமான மனக் கவலையும் காரணமாகும்.