இளையர் அறிவியல் களஞ்சியம்/இரும்பு
இரும்பு : இது ஓர் உலோகத் தனிமம் ஆகும். பண்டுதொட்டே மனிதனால் பயன்படுத்தப்பட்டு வரும் தனிமங்களில் இரும்பு மிகவும் முக்கியமானதொன்றாகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே எகிப்தியர்கள் இரும்பாலான நகைகளை அணிந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மனித நாகரிகத்தின் முதிர்ச்சிக் காலத்தை 'இரும்புக்காலம்’ என மானிடவியலறிஞர் குறிப்பர். பண்டையக்காலம் முதலே இந்தியரும் சீனரும் அன்றாட வாழ்வில் இரும்பாலான பல பொருட்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பால் செய்யப்பட்ட பல பொருட்கள் எகிப்தியர்களாலும், சிரியர்களாலும் பயன்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் இரும்பைப் பிரித்தெடுக்கும் முறையிலும், எஃகு தயாரிப்பிலும் சிறந்து விளங்கினர். டெல்லியில் காணும் அசோகர் இரும்புத்தூண் மற்றும் பூரி கோயில்களில் காணப்படும் இரும்பு இணைப்புகள் துரு எனும் கறை ஏற்றம் இல்லா இரும்புகள் இதற்குரிய சான்றுகளாகும்.
பூமியின் மேற்பரப்பில் அதிக அளவில் கிடைக்கும் உலோகத் தனிமங்களில் இரும்பு நான்காவதாகும். இஃது தரையில் மட்டுமல்லாது நீரிலும் இரத்தத்திலும்கூட இரும்புச் சேர்மங்களாக அமைந்துள்ளன.
எல்லா வகைகளிலும் சிறிதளவு இரும்புத் தனிமம் இருக்கவே செய்யும். முக்கியமான இரும்புத் தாதுக்கள் ஆக்சைடுகளும் கார்பனேட்டுகளும் ஆகும். சாதாரணமாக இரும்பு ஆக்சைடுகள் கரியுடன் கலந்து உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் இரும்பில் ஓரளவு கரியும் கலந்தே இருக்கும். கரி கலந்துள்ள விகிதத்தையும் அளவையும் கொண்டே இரும்பின் தன்மை கணிக்கப்படுகிறது. இத்தன்மைக் கொப்ப இரும்பு 1. வார்ப்பிரும்பு (Cast Iron) 2.தேனிரும்பு (Wrought iron)8. எஃகு (Steel) என மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வார்ப்பிரும்பே இரும்பு வகைகளில் முக்கியமானதாகும். மற்ற இருவகை இரும்புகளிலும் உள்ளதைவிட இதில் கரியின் அளவு அதிகமாக இருக்கும். இரும்பு 90 சதவிகிதமும் கரி 4 சதவிகிதமும் இருக்கும். கரியோடு சிலிக்கான், பாஸ்ஃபரஸ், கந்தகம், மாங்கனிஸ் போன்ற தனிமங்களும் கலந்திருக்கும். இது பளபளப்பாகவும் பழுப்பு நிறமுடையதாகவும் இருக்கும். இது உடையும் தன்மையுடையது.
தேனிரும்பில் வார்ப்பிரும்பில் உள்ளதை விட கரியின் அளவு குறைவாகவே இருக்கும். இது வார்ப்பிரும்பைவிடத் தூய்மையானதாகும் இது சற்று வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாகும். இதைக் கம்பியாகவும் தகடாகவும் அடிக்கலாம். இது வளையுமே தவிர உடையாது.
எஃகானது மற்றைய இரு இரும்பு வகைகளில் உள்ள கரியுடன் ஒப்பிடும்போது இதில் கரி இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையிலேயே அமைந்திருக்கும். கரி சுமார் 0.2இல் இருந்து 2 சதவிகிதம் இருக்கும். இரண்டையும் விட இது கடினமானதாகும். எஃகு துருப்பிடிப்பதில்லை. எஃகில் சேர்க்கப்படும் தனிமங்களின் அளவைப் பொருத்து அதன் தன்மையும் பயன்களும் மாறுபடும்.
இரும்புத் தொழிற்சாலைகள் கோவா, மத்தியப்பிரதேசம், பீகார், ஒரிசா, கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. இந்தியாவில் மொத்தம் 1757.8 கோடி டன் இரும்பு இருப்பு இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடாற்காடு, தென்னாற்காடு, சேலம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இரும்புப் படிவுகள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். சேலம் மாவட்டக் கஞ்சமலைப் பகுதிகளில் உயர்தர இரும்புத்தாது கிடைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஜாம்ஷெட்பூர், துர்க்காபூர், பிலாய், ரூர்கலா, பத்ராவதி, பொக்காரோ, சேலம் முதலிய இடங்களில் பெரும் இரும்புத் தொழிற் சாலைகள் அமைந்துள்ளன.