இளையர் அறிவியல் களஞ்சியம்/இயற்கை வாயு

விக்கிமூலம் இலிருந்து

இயற்கை வாயு : நமக்குத் தேவையான எண்ணற்ற பொருட்களை இயற்கை பூமிக்குள் மறைத்து வைத்துள்ளது. மனிதன் தன் மதி நுட்பத்தால் அவற்றைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்துகிறான். அவ்வாறு மண்ணுள் புதைந்துள்ளவற்றுள் மிக முக்கியமானவைகள் நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியனவாகும்.

பூமியைக் குடைந்து நிலக்கரி, பெட்ரோல் எடுக்கும்போது ஒருவகை எரிவாயு வெளிப்

படும். இதுவே 'இயற்கை எரிவாயு' எனப்படுகிறது. சில சமயங்களில் பூமிப் பிளவினூடே இவ்வாயு தானாக வெளிப்படுவதும் உண்டு. இவ்வாயு பல்வேறு வகையான வாயுக்கள் கலந்துள்ள கூட்டுக் கலவையாகும்.

நீண்டகாலமாக இவ்வாயு எவ்விதப் பயனுமின்றி காற்றோடு கலந்து கொண்டிருந்தது. பெட்ரோல் எடுக்கும்போது வெளிப்படும் வாயுவை வானில் செலுத்தி வீணே எரியச் செய்தும் வந்தார்கள். இதனால் பயனேதும் இல்லாமல் இருந்தது. அண்மைக்காலமாக இவ்வியற்கை வாயுவை மிகச்சிறந்த எரிபொருளாகப் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.

பூமிக்குள்ளிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவைக் குழாய்கள் மூலம் தொழிற் சாலைகளுக்குக் கொண்டு சென்று எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வெரி வாயுவைக் கொண்டு கொதிகலன்கள் வெப்பமூட்டப்படுகின்றன. இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் எரிவாயுவாகப் பயன்படுவது போன்றே வீடுகளிலும் சமையல் அடுப்புகளுக்கான எரிவாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

எரிசக்தியாக மட்டுமின்றி பல்வேறு வேதியியற் பொருட்களை உருவாக்கவும் இயற்கை வாயு பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் எரிவாயுவால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இயற்கை எரிவாயு உலகின் பல பகுதிகளிலும் கிடைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், சீனா, ரஷ்யா, இந்தியா, ருமேனியா ஆகிய நாடுகள் அவற்றுள் முக்கியமானவையாகும்.

இயற்கை எரிவாயு எளிதான, சிக்கனமான எரிபொருள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.