இளையர் அறிவியல் களஞ்சியம்/இயற்பியல்
இயற்பியல் : அண்மைக்காலம்வரை 'பௌதிகம்' (Physics) என்று அழைக்கப்பட்ட அறிவியல் துறையே இன்று இயற்பியல் எனத் தமிழில் வழங்கப்படுகிறது. இது அறிவியலின் மிக முக்கியப் பிரிவாகும். இயற்பியலானது எளிய விதிமுறைகளைக் கொண்டு இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளை விளக்குகிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் விளைவால் புதுப்புது பிரிவுகள் இயற்பியலிருந்து கிளைத்துள்ளன. இவை அனைத்துமே இயற்கையின் செயல்பாட்டை வெவ்வேறு கோணங்களில் தக்க விதிமுறைகளின் அடிப்படையில் விளக்குவனவாகும்.
இயற்பியலின் அடிப்படைத் தன்மைகளை இரு பெரும் பிரிவாகப் பகுத்துக் காணலாம். ஒன்று இயக்கவியல் (Mechanics) மற்றது புலக்கோட்பாடு (Field Theory) ஆகும். ஒரு விசைத்தூண்டலில் ஏற்படும் இயக்கம் பற்றி ஆய்வது இயக்கவியல். ஈர்ப்பு, அணுக்கரு விசை போன்றவற்றால் விசைப் புலத்தில் ஏற்படும் பல்வேறு விசைத் தன்மைகள், இயற்கைப் பண்புகளை ஆய்வது புலக்கோட்பாடாகும்.
அன்று முதல் இன்றுவரை ஏற்பட்டு வந்துள்ள தொடர் ஆய்வின் விளைவாக பழைய இயற்பியல் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளும் பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆயினும் இவையனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவே உள்ளன.