இளையர் அறிவியல் களஞ்சியம்/இயற்கணிதம்

விக்கிமூலம் இலிருந்து

இயற்கணிதம் : இயற்கணிதம் (Algebra) என்பது கணிதத்தின் ஒரு முக்கிய பிரிவாகும். எண் கணிதம் (Arithmetic) தொடர்பான சிக்கல்களைச் சுருக்கமாக எழுதவும் தீர்க்கவும் இயற்கணிதம் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கணிதமானது அடிப்படை இயற்கணிதம், கருத்தியல் இயற்கணிதம் என இரு பெரும்பிரிவுகளாகக் கொள்ளப்படுகின்றன. அடிப்படை இயற்கணிதம் என்பது எண் கணிதத்தின் பொதுமைப்பாடாகும். இயற்கணிதத்தில் பொதிந்து கிடக்கும் தத்துவங்களை வெளிப்படுத்துவது கருத்தியல் இயற்கணிதமாகும். கருத்தியல் தன்மையே இயற் கணிதத்தின் பெரும் சிறப்பாகும்.

எண் கணிதத்தில் மெய்யெண்கள், கலப்பு எண்கள் ஆகியவற்றின் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் ஆகியவற்றின் செயற் பண்புகள் விவரிக்கப்படுகின்றன. அடிப் படைக் கணிதத்தில் எண்கள் X Y Z என்ற எழுத்துக் குறிகளால் குறிக்கப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் மாறிகள் எனவும் கூறப்படுவதுண்டு.

அடிப்படை இயற்கணிதத்தின் குறிக்கோள் எண்களுக்கிடையேயான அடிப்படைச் செயல்கள், தொடர்பு, சமன்பாடுகளின் தீர்வு காண்பது போன்றவைகளாகும். இதில் மாறிகளும் குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதால் மிகுந்த பயன் விளைகிறது.

இயற்கணிதத்தை அடிப்படையில் பொதுமைப்படுத்தவும் தருக்க முறையில் அமைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக உருவானதே கருத்தியல் இயற்கணிதம். இது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் உருவானது. அடிப்படை இயற்கணித வழிமுறைகளிலிருந்து கருத்தியல் இயற் கணிதம் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளது.