இளையர் அறிவியல் களஞ்சியம்/உப்பு

விக்கிமூலம் இலிருந்து

உப்பு : மனித உணவின் இன்றியமையாப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். அளவுடன் கலக்கும்போது உண்ணும் உணவு சுவை பெறுகிறது. உப்புக் குறைந்தாலோ அல்லது கூடினாலோ உண்ணும் உணவு சுவையிழந்துவிடுகிறது. அதனாலேயே 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்னும் பழமொழியே வழங்கலாயிற்று.

சாதாரணமாக உப்பு என்பது நாம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப் படுகிறது. இதன் வாய்பாடு 'NaCl’ என வேதியியலில் குறிக்கப்படுகிறது. வேறுசில வேதியியற் பொருட்களும் உப்பு என்ற பெயரோடு அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். வேதியியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உப்பு சாதாரணமாக நிலத்திலும் கடல் நீரிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். நீர் வெயிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இவ்வுப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் 'உப்பளம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இத்தகைய உப்பளங்கள் கடற்கரையை ஒட்டிய கடற் கழிகளை அடுத்து அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் தூத்துக்குடிப் பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்களில் தரமான உப்பு மிகுதியாகத் தயாரிக்கப்படுகிறது. வடஇந்தியாவில் பல பகுதிகளிலும் உலகின் வேறுபல இடங்களிலும் தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியைடுத்துச் சேகரிக்கிறார்கள். அமெரிக்காவிலும், ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற வேறு சில இடங்களிலும் உப்பு நீர்க் கிணறுகளைத் தோண்டி உப்பு தயாரிக்கிறார்கள். சில உப்பு நீர் ஏரிகளிலிருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள சாம்பர் ஏரியும் பாலஸ்தீனத்திலுள்ள சாக்கடல் ஏரியும் உப்பு நீர் ஏரிகளாகும். சாக்கடல் ஏரியிலிருந்து மட்டும் 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளார்கள். சூரிய வெப்பம் அதிகம் இல்லாத நாடுகளில் உப்பு நீரைக் காய்ச்சி உப்புத் தயாரிக்கிறார்கள். கடல் நீரைக் கொண்டு தயாரிக்கும் உப்பை மேலும் சுத்தப்படுத்தி 'மேசை உப்பு' (Table Salt) ஆக பொடித்துப் பயன்படுத்துகிறார்கள்.

உப்பு உணவுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இறந்த மீன்களை கருவாடாகப் பதப்படுத்த, பிராணிகளின் தோல்கள் கெடாமல் பதனிட உப்புப் பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் மேலும் பனிக்கட்டி குளிர்ச்சி அடையும். எனவே குளிர் எந்திரங்களில் உப்புப் பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க உப்பு உபயோகப்படுத்தப்படுகிறது. வேதியியற் பொருள்கள் தயாரிக்கவும் மருந்துகள் செய்யவும் உப்பு தேவைப்படுகிறது. நமக்குச் சாதாரணமாக உண்டாகும் பல்வலி, தொண்டை வலி நீங்க உப்பு நீரால் வாய்க்கொப்பளித்தால் போதும், வலி நீங்கும். வயல்களில் வளரும் பயிர்கட்குத் தேவையான இரசாயன உரத் தயாரிப்பிற்கும் உப்பு தேவைப்படுகிறது.

உப்புக்கள் பொதுவாக அமிலமும் காரமும் ஒன்றுக்கொன்று நடுநிலையாக்கல் வினைக்கு உட்பட்டு பெறப்படுகிறது. இந்த வினையின் நிகழ்வுத் தன்மையைப் பொறுத்து அமில உப்பு, கார உப்பு, இரட்டை உப்பு, மற்றும் அணைவு உப்பு ஆகியவைகள் கிடைக்கப் பெறுகின்றன.