இளையர் அறிவியல் களஞ்சியம்/உணவுப் பாதை

விக்கிமூலம் இலிருந்து

உணவுப் பாதை : மனித உடலின் உணவுப் பாதை வாய்தொடங்கி மலம் வெளியேறும் ஆசனவாய் வரை அமைந்துள்ளது. உணவுப் பொருள்களை பற்களால் மென்று அரைக்கவும் அதற்கேற்ப அவற்றைப் பற்களுக்குத் தள்ளியுதவ நாக்கும் அமைந்துள்ளன. வாயில் இடப்பட்ட உணவை பற்கள் அரைக்கும் போது அதனை கூழாக்கும் வகையில் மூன்று இணை சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரந்து வெளிப்படுகிறது. அவை உணவுடன் நன்கு கலந்து உணவு கரைக்கப்படுகிறது. உமிழ்நீர் சேர்க்கையின் மூலம் இங்கு ஓரளவு உணவு (ஸ்டார்ச்சு) சர்க்கரையாக மாற்றமுடிகிறது.

நன்கு மென்று விழுங்கும் உணவு தொண்டை வழியாக இறங்கி இரைப்பையை அடைகிறது. இரைப்பைச் சுரப்பிகளிலிருந்து சுரந்து வெளிவரும் செரிமான சுரப்புநீர் உணவுடன் நன்கு கலக்கிறது. அதன் மூலம் புரோட்டீன்கள் பெப்டோன்களாக மாறுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்ட உணவுக்குழம்பு அங்கிருந்து குடல்வாய் வழியாக சிறு குடலைச் சென்றடைகிறது. அவ்வுணவுடன் கல்லீரல் சுரக்கும் பித்தநீரும் கணையத்தில் சுரக்கும் கணைய நீரும் சிறு குடலிலேயே சுரக்கும் சிறு

உணவுப் பாதை

குடல் நீரும் கலக்கின்றன. இதனால் சிறு குடலில் உள்ள உணவுப் பொருள் நன்கு செரிமானம் ஆகின்றது. கடின செரிமானப் பொருட்களாகிய புரோட்டின், கார்போஹைட்டிரேட், கொழுப்பு ஆகிய அனைத்துமே சிறு குடலில் செரிமானமடைகின்றன.

செரிமானம் என்பது கூழாக்கப்பட்ட உணவிலிருந்து சத்து உறிஞ்சப்படுவதாகும். உணவு இரைப்பையில் இருக்கும்போது மிகச் சிறு அளவே உறிஞ்சப்படுகிறது. உணவுக் குழம்பு சிறுகுடலில் இருக்கும்போது மிகப்பெரும் அளவு சிறு குடற்சுவரால் உறிஞ்சப்படுகிறது. சிறுகுடலோடு இவ்வாறு சத்துறிஞ்சி செரிமானம் செய்யும் செயல் முழுமையாக முடிவடைந்து விடுகிறதென்று கூறலாம். செரிமானமாகாத உறிஞ்சப்படாத கழிவுப்பொருள் சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்குச் செல்கிறது. அங்கு கழிவான உணவுப்பொருளிலுள்ள நீர் பெருமளவுக்கு உறிஞ்சப்படுகிறது. பெருமளவு நீரை இழந்து ஓரளவு கெட்டியான கழிவுப்பொருள் மலக்குடலில் அடைந்து ஆசனவாய் வழியாக மலமாக வெளியேற்றப்படுகிறது.

உணவு செல்லும் பாதை முழுவதும் உணவுப் பொருள் சிறிது சிறிதாகவும் மெதுவாகவும் செல்லும் வகையில் குடல் அமைப்புகள் உள்ளன. குடல் முழுவதும் நிறைந்துள்ள தசை நார்கள் நீளவாட்டிலும் வட்டவடிவிலும் அமைந்து, விட்டுவிட்டுச் சுருங்கி விரிகின்றன. இது ஒரு விதத்தில் அலை போன்ற தசையியக்கமாகும். உணவானது வழவழப்பான குழாயில் ஓடும் நீர் போன்றில்லாமல் தசையியக்கத்தால் அழுத்தி அழுத்தி மெதுவாகச் சிறிது சிறிதாக உந்தித் தள்ளப்படுகிறது. மேலும் குடற்பகுதிகள் மடிப்புகளாக அமைந்துள்ளன. மேலும் சிறுகுடல் முழுமையும் விரல் நுனி போன்று உறிஞ்சிகள் அமைந்துள்ளன. இவைகளே செரிமானப் பொருட்களை கவர்ந்திழுக்கின்றன.

மனிதர்களைப் போன்ற பிற உயிர்ப் பிராணிகளுக்கும் உணவுப்பாதை ஒரே மாதிரியாக அமைந்திருக்கவில்லை. அவற்றின் அமைப்பில் வேறுபாடுகள் பல உள்ளன.