இளையர் அறிவியல் களஞ்சியம்/உருளைக்கிழங்கு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உருளைக்கிழங்கு : நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் முக்கியமானதாக அமைந்திருப்பது உருளைக்கிழங்காகும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வாழும் மக்களுக்கு உருளைக்கிழங்கு அன்றாடம் உண்ணும் முக்கிய உணவுப் பொருளாக அமைந்துள்ளது.

உருளைக்கிழங்குப் பயிரின் தண்டு மண்ணுள் புதைந்து கிழங்காகிறது. எனவே இது தண்டுக்கிழங்கே தவிர வேர்க்கிழங்கு அன்று.

இளஞ்செடியாக இருக்கும்போது இதன் தண்டு மெல்லியதாக இருக்கும். இது மண்ணுள் சென்று மேலும் பல தண்டுகளாகப் பிரியும். அவ்வாறு பிரிந்து பரவும் தண்டுகளின் நுனியில் கிழங்குகள் தோன்றும். இந்தக் கிழங்குகளில் குழிவானபகுதிகளில்வேர்போன்ற மயிரிழையோடு கூடிய பல கண்கள் இருக்கும். கண்ணுள்ள துண்டுகளாகக் கிழங்கை நறுக்கி மண்ணில் நடுவார்கள். அவை செடியாக முளைத்து செழித்துப் படர்ந்து தண்டுகளை மண்ணுள் பரப்பும். இவ்வாறு உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது.

உருளைக் கிழங்குப் பயிரின் இலைகள் இறகைப் போன்று தோற்றமளிக்கும். மலர்கள் வெண்மை கலந்த ஊதா நிறமுள்ளது. பூக்கள் கொத்தாகப் பூக்கும். இதிலிருந்து காயும் பழமும் தோன்றும். அவை திராட்சை போன்று இருக்கும். இப்பழங்களில் 209, 800 விதைகள் வரை இருக்கும். ஆயினும் விதையிலிருந்து உருளைக்கிழங்குப் பயிர் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கையே துண்டாக்கி நட்டே பயிர் செய்கிறார்கள்.

உருளைக்கிழங்கு இன்று உலகெங்கும் பயிரிடப்பட்டபோதிலும் இதன் தாயகம் அமெரிக்காவில் உள்ள சிலி, பெரு, மெக்சிகோ நாடுகளில் உள்ள மேட்டுப் பகுதிகளேயாகும். இங்குதான் தொடக்கக் காலத்தில் காட்டுப் பயிராக உருளைக்கிழங்கு விளைந்து வந்தது. 1570இல் அமெரிக்கா வந்து திரும்பிய ஸ்பானியர் அதனைத் தங்கள் நாட்டில் பயிரிடலாயினர். பின்னர், ஐரோப்பாவெங்கும் பரவியது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் போர்ச்சுகீசியர் மூலம் உருளைக்கிழங்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலை நாடுகளில் உருளைக்கிழங்கு உணவுக்காக மட்டுமின்றி மாட்டுத் தீவனப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கிலிருந்து மாவுப் பொருட்கள் தயாரிக்கிறார்கள். ஆல்கஹால் எனப்படும் மதுபானங்கள் தயாரிக்கவும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகிறார்கள். செயற்கை ரப்பர் உரு

உருளைக் கிழங்குச் செடி

வாக்கத்திற்கும் ஒருவித ஒட்டுப்பசை, ஒரு வகைப் பால் பொருள் தயாரிக்கவும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது,

உருளைக்கிழங்கை உணவாகக் கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய வெப்பத்தை எளிதாகப் பெற முடிகிறது. இதில் புரோட்டினும் உலோகச் சத்துக்களும் வேண்டிய அளவில் உள்ளன. இதில் பி,சி. வைட்டமின்களாகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன. உருளைக்கிழங்கிலுள்ள சத்துப்பொருட்களின் அளவானது உருளைக்கிழங்கின் இனத்தையும் வகையையும் பொருத்து வேறுபடும்.

வடஇந்தியாவில் வங்காளம், பீகார், அஸ்ஸாம் மாநிலங்களிலும் தென்னகத்தில் பெங்களுரிலும் நீலகிரி மாவட்டத்திலும் மிகுதியாக விளைகிறது.