இளையர் அறிவியல் களஞ்சியம்/உலக சுகாதார நிறுவனம்

விக்கிமூலம் இலிருந்து

உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) : உலகளாவிய முறையில் மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கென 1946ஆம் ஆண்டு ஜூலையில் நியூயார்க் நகரில் உலக மாநாடு நடைபெற்றது. 1948 ஏப்ரல் 7இல் உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்டது. இஃது பின்னர் 1951ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புடன் இணைக்கப்பட்டது. இன்று இதன் கிளைகள் எல்லா நாடுகளிலும் அமைந்து உலக மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காத்து வருகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாட்டின்படி உலக மக்களின் நோயைத் தீர்ப்பதும் சுகாதாரத்தைக் கற்பிப்பதும் மட்டும் நோக்கம் அன்று. உடல், உள்ளம், சமூகம் ஆகிய மூன்றின் நலன்களையும் பேணுவதாகும்.

இந்நோக்கத்தை இனிது நிறைவேற்றுவதற்கென சுகாதார அவை, செயற்குழு, செயலகம் என்ற முப்பெரும் பிரிவுகளைக் கொண்டு திறம்படச் செயலாற்றி வருகிறது. இதன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.

உலக நாடுகளின் ஒத்துழைப்போடு கொடிய நோய்களான அம்மை நோயையும் மலேரியாக் காய்ச்சலையும் உலகிலிருந்தே முற்றாக ஒழித்துக் கட்டியிருப்பது உலக சுகாதார நிறுவனத்தின் சாதனையாகும்.