இளையர் அறிவியல் களஞ்சியம்/உலக வானிலையியல் நிறுவனம்
Appearance
உலக வானிலையியல் நிறுவனம் (world Meteorological Organisation) : வானிலையியல் துறையில் உலகளாவிய முறையில் பணியாற்றுவதற்கென உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இது 1951இல் நிறுவப்பட்டது. வானிலையியலில் உலகக் கூட்டுறவை உருவாக்குவது, உலகெங்கும் வானிலை நிலையங்களை அமைத்து அவற்றிலிருந்து பெறும் வானிலை விவரங்களை உலகெங்கும் அனுப்பி உதவுதல், வானிலையை வாழ்க்கைக்குப் பயன்படுத்துதல், வானிலையியல் ஆராய்ச்சிக் கூடங்களையும் பயிற்சி நிலையங்களையும் உலகெங்கும் உருவாக்கி உதவுதல் ஆகியன இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்நிறுவனம் உலக வானியல் அவை, செயற்குழு, வட்டார வானிலை நிலையங்கள், நிரந்தரச் செயலகம் எனப் பல்வேறு பிரிவுகளாக அமைந்து, மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது. இதன் தலைமையகம் சுவிட்ஸர்லாந்து நாட்டில் அமைந்துள்ளது.