உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/உள்ளெரி எஞ்சின்கள்

விக்கிமூலம் இலிருந்து

உள்ளெரி எஞ்சின்கள் : ஒர் அடைபட்ட அறைக்குள் அல்லது சிலிண்டர் எனப்படும் நீள் உருளைக்குள் எரி பொருள் எரிவதால் உண்டாகும் வெப்பச் சக்தியை எரி சக்தியாக மாற்றும் எஞ்சின் 'உள்ளெரி எஞ்சின்' (Internal combustion engine) என அழைக்கப்படுகிறது.

நீங்கள் நீராவியால் இயங்கும் இரயில் எஞ்சினைக் கவனித்திருக்கலாம். அங்கு நிலக்கரியை எரித்து நீரிலிருந்து நீராவி உருவாக்கப்படுகிறது. வாயுவாகிய வெப்பக்காற்று சிலிண்டரினுள் சென்று பிஸ்டனை இயக்க, அதன் மூலம் எஞ்சின் இயங்குகிறது. இவ்வாறு வெப்பக் காற்றானது எஞ்சினை இயக்கும் இயந்திர சக்தியாக அமைகிறது. இதே போன்று டீசலால் இயங்கும் இரயில் எஞ்சின்களிலும் பஸ், லாரி மற்றும் பெட்ரோலால் ஓடும் கார் போன்றவற்றிலும் உள்ள சிலிண்டரில் அவை எரிக்கப்பட்டு வெப்பக் காற்று உருவாக்கப்படுகிறது. இவ்வெப்பச் சக்தி இயந்திர சக்தியாக மாற்றப்பட்டு, அவை எஞ்சின்களை இயக்க, அவ்வாகனங்கள் இயங்குகின்றன. நீராவி எஞ்சினைவிட உள்ளெரி எஞ்சின் ஆற்றல் வாய்ந்ததாகும்.

உள்ளெரி என்ஜின்கள்

உள்ளெரி எஞ்சின் இயக்கத்திற்கு 'கார்புரேட்டர்' அமைப்பு உயிர் நாடி போன்றதாகும். இதுவே பெட்ரோலையும் காற்றையும் குறிப்பிட்ட அளவில் கலந்து சிலிண்டருக்குள் அனுப்புகிறது. சிலிண்டரினுள் பிஸ்டன் எனும் தண்டு உண்டு. இது கீழ் நோக்கியும் மேல் நோக்கியும் செல்லக்கூடியதாகும். கார்புரேட்டரிலிருந்து பெட்ரோலும் காற்றும் ஒரு குறிப்பிட்ட அளவில் கலந்து ஒரு வால்வு வழியாக சிலிண்டரினுள் வந்து நிறையும். இவ்வாறு நிறையும் எரிபொருளை பிஸ்டன் மேல் நோக்கிச் சென்று அழுத்தும். அவ்வாறு அழுத்தும்போது அங்குள்ள வால்வு மூடிக் கொள்ளும். இதனால் அங்குள்ள எரிபொருள் மேலும் நன்கு அழுத்தம் பெறுகிறது. அப்போது ஏற்படும் மிகு அழுத்தத்தின் விளைவாக அங்கு ஒரு மின்பொறி ஏற்படும், அப்பொறியின் விளைவாக அங்குள்ள எரிபொருள் எரிக்கப்படுகிறது. அப்போது உண்டாகும் வெப்பக்காற்று பிஸ்டனைக் கீழ்நோக்கித் தள்ளும். அவ்வாறு தள்ளப்படும் பிஸ்டன் சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால் சக்கரம் சுழலும். அடுத்து பிஸ்டன் மேல் நோக்கி வந்து அழுத்தும்போது அங்குள்ள வெப்பக்காற்று வேறொரு வால்வு வழியாக வெளியேறிவிடும். இவ்வாறு பிஸ்டன் கீழே செல்ல எரிபொருள் உள்ளே வர, அவ்வெரி பொருளைப் பிஸ்டன் அழுத்த, மின்பொறி ஏற்பட்டு எரிபொருளை எரித்து பிஸ்டனை கீழே தள்ள, அதனோடு இணைந்த சக்கரம் சுழலும். இந்நிகழ்ச்சி தொடர்வினையாக நிகழும்போது நாம் பயணம் செய்யும் காரும் தொடர்ந்து ஓடுகிறது.

உள்ளெரி எஞ்சின்கள் சாதாரணமாக இரு வகையினவாக உள்ளன. ஒன்று இரண்டடி எஞ்சின், மற்றொன்று நான்கடி எஞ்சின் (Four Stroke Engine) என்பனவாகும்.

உள்ளெரி எஞ்சின்களில் மூன்று வகையானவை உண்டு 1, பெட்ரோலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் கார், மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர், மொபெட் மற்றும் சிலவகை விமானங்கள். மற்றொரு வகை உள்ளெரி எஞ்சின்கள் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயங்குகின்றன. அவற்றிற்கு உதாரணமாக பஸ், லாரி, கப்பல் மற்றும் பல கனரக இயந்திங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின்களைக் கூறலாம்.

உள்ளெரி எஞ்சின் இயங்கும் போது பிஸ்டன் மேலும் கீழும் இயங்கும் இயக்கத்தைச் சுழல் இயக்கமாக மாற்றக்கூடிய எஞ்சின் அவசியமாகிறது. இவ்வாறு நேரடியாகச் சுழல் இயக்கத்தை உருவாக்குவது எரிவாயு டர்பைன்களாகும். பெரிய விமானங்களிலும் விரைந்து செல்லும் விமானங்களிலும் எரிவாயு டர்பைன்களே அமைக்கப்பட்டுள்ளன.