இளையர் அறிவியல் களஞ்சியம்/ஓஸோன் வாயு
ஓஸோன் வாயு : ஆக்சிஜன் மூலக் கூறுடன் ஓர் ஆக்சிஜன அணுவைச் சேர்ப்பதன் மூலம் ஓஸோன் வாயு உருவாகிறது.
ஆக்சிஜனைப்போல ஒன்றரை மடங்கு அடர்த்தியுள்ள வேற்றுருவே ஓஸோன் வாயு ஆகும். இது நீல நிறமும் குளோரினுக்குள்ள மணமும் உடைய வாயுவாகும். மின்னேற்றம் செய்வதன் மூலம் ஆக்சிஜன் புதிய பண்புகளையுடைய ஒஸோனாக மாறுகிறது. ஓஸோன் வாயு பாதரசத்தின் நிறத்தை மங்கச் செய்கிறது; புதிய மணத்துடன் விளங்குவதால் இதற்கு 'ஒலோன்’ (மணமிக்கது) எனப் பெயரிடப்பட்டது.
ஓஸோன் வாயு பல்வேறு பணிகட்குப் பயன்படுகிறது. இதைக்கொண்டு கிருமிகளைக் கொல்லலாம். உணவுப் பொருட்களைக் கெடாமல் பாதுகாக்கலாம். இரண மருத்துவத்திற்கும் ஓஸோன் வாயு பயன்படுகிறது. கொழுப்புப் பொருட்கள், எண்ணெய்கள், மெருகெண்ணெய் போன்றவற்றின் நிறத்தைப் போக்கவும் ஓஸோன் வாயு பயன்படுத்தப்படுகிறது. வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் ஓஸோன் வாயு பயன்படுத்தப்படுகிறது.