உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/கடல்

விக்கிமூலம் இலிருந்து

கடல் : பூமியின் மொத்தப் பரப்பில் 70.8% பரப்பு நீர் சூழ்ந்த கடற்பகுதிகளாகும். இவை ஆறுகள், ஏரிகள், கடல்கள், பெருங்கடல்கள் (சமுத்திரங்கள்) எனப் பல்வேறு வடிவினவாக அமைந்துள்ளன. பெருங்கடல்களில் பசிபிக் பெருங்கடல். அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியன குறிப்பிடத்தக்கவைகளாகும். இன்று இப்பெருங்கடல்கள் தனித்தனிப் பெயரால் அழைக்கப்பட்டபோதிலும் ஒரு காலத்தில் இவை அனைத்தும் தனியொரு நீர் நிலையின் பகுதிகளேயாகும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.

இக்கடல்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆதியில் அடர்ந்த மேகங்கள் பூமியை மூடிக்கொண்டிருந்தன. பின்னர் பூமி குளிர்ச்சியடைந்தபோது, பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக இந்த மேகங்களிலிருந்து பூமியில் மழை பெய்ததால் இந்நீர்ப் பரப்பு ஏற்பட்டிருக்கும் எனக் கண்டறிந்துள்ளார்கள்.

இன்றையக் கடல்கள் 187 கோடி கன கிலோ மீட்டர் கன அளவுடையதாகும். அதன் மேற்பரப்பின் பரப்பளவு 88.1 கோடி சதுர கிலோ மீட்டர். நீர் மண்டலத்தில் 98.8% கடற்பரப்பு. மீதமுள்ள 1.2% பகுதி பனிக்கட்டிப் பரப்பாகும். ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள நீரின் அளவு 0.002% வாயு மண்டலத்தில் உள்ள நீரின் அளவு 0.000.8% ஆகும்.

பெருங்கடலின் சராசரி ஆழம் 3,790 மீட்டர். ஆழ்கடலின் மிக அதிகமான ஆழமுள்ள பகுதி குவாம் தீவுக்கும் யாப் தீவுக்குமிடையிலுள்ள மரியானா கடற்பகுதியாகும். இங்கு கடலின் ஆழம் 11,000 மீட்டராகும். எவரெஸ்ட் சிகர மலைப் பகுதியைக் கொண்டு வந்து இந்த ஆழ்கடலில் வைத்தால், அதன் சிகரம் மேற்பரப்பிலிருந்து 2 கி.மீ. ஆழத்தில் மூழ்கியிருக்கும்.

விரிந்த கடற்பரப்பிலுள்ள நீரில் பல வகையான உப்புக்களும் கனிமங்களும் கரைசலாக உள்ளடங்கியுள்ளன. பூமியின் மேற் புறணியில் உள்ள கனிமங்களில் அடங்கியுள்ள தனிமங்கள் அனைத்தும் கடலிலும் உள்ளன எனக் கண்டறிந்துள்ளார்கள். கடல் நீரின் உப்பில் 57 தனிமங்கள் உள்ளன.

பூமியில் தொடக்கத்தில் உயிர்கள் தோன்றுவதற்கு இந்த மாபெரும் நீர் நிலைகள் மூலாதாரமாக அமைந்தன. இன்றும் இந்த உலகிலுள்ள உயிரினங்கள் வாழ இக்கடல்களே காரணமாக உள்ளன. கடல்நீர் வெப்பத்தைச் சேகரித்து வைக்கும் மாபெரும் சேமிப்புக் கிடங்காக உள்ளது. அதனால், பூமியில் அளவுக்கு மீறி வெப்பம் ஏற்படாமலும் அளவுக்கு மீறி குளிர்ச்சி ஏற்படாமலும் சமனப்படுத்துகிறது. இந்நிலவுலகம் பாலைவனமாகவோ அல்லது பனிக்காடாகவோ மாறிவிடாமல் இக் கடல்கள் தான் பாதுகாத்து வருகின்றன. கடலில் வாழும் மீன்கள் மனிதரின் உணவுக்கு முக்கிய ஆதாரமாகவும் அமைந்துள்ளன. கடல்களிலிருந்து விலைமதிப்பு மிக்கக் கனிமங்களும், பெட்ரோல், இயற்கை வாயு போன்ற எரியூட்டிகளும் அதிக அளவில் கிடைக்கின்றன. இன்னும் பூமியின் கழிவுப் பொருட்களை ஏற்கும் கொள்கலமாகவும் உள்ளது. மனிதர்களின் போக்குவரத்துக்கான எளிமையான வழியாகவும் கடல்கள் பயன்பட்டு வருகின்றன. அதன் கடற்பகுதிகள் மனிதர்களுக்கு மகிழ்வூட்டும் விளையாட்டுத் திடல் போல் அமைந்துள்ளன. அழகான கடற்காட்சி கவிஞர்களின் கற்பனைக்கு வளமூட்டிடும் பாடற் பொருளாகவும் விளங்கி வருகின்றது.