இளையர் அறிவியல் களஞ்சியம்/கடற்பாசி
கடற்பாசி : நம் வீடுகளில் மீன் தொட்டி இருந்தால் அதன் அடிப்பகுதியில் சிறு மணற் பரப்பில் சின்னஞ்சிறு செடிகள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். இவை பாசிச் செடிகள் எனப்படும். இப்பாசிச் செடிகள் குளங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்களின் அடிப்பகுதியில் முளைத்துச் செழிப்பாக வளர்ந்திருக்கும். இவை நீருக்கடியில் தரையில் முளைத்திருப்பதால் சாதாரணமாக நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.
உலகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான நீர்ப்பாசி வகைகள் உள்ளன. இவை பஞ்சு போல் மென்மையானவைகளிலிருந்து கரடு முரடானவை வரை பலவகைகள் உண்டு. இவற்றில் கடலினடியில் முளைக்கும் கடற் பாசியின் மயிலிறகு போன்ற அதன் இலையின் நீளம் 100 அடிகளுக்கும் மேல் இருக்கும்.
உலகில் தாவரங்கள் உருவான காலத்தில் இருந்த வடிவிலேயே இன்றும் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவற்றில் சில தனியானவைகளாகவும் ஒற்றை உயிரணுக்களை (Cell) உடையனவாகவும் உள்ளன. மற்றவை பல உயிரணுக்களுடையவையாகவும் ஒன்றிலிருந்து மற்றொன்று கிளைப்பதாகவும் உள்ளன. இவற்றின் ஒருபகுதி அப்புறப்படுத்தப்பட்டாலும் உடனே மாற்றாக மற்றொரு தொகுதி உருவாகிவிடும்.
எல்லா பாசி வகைகளும் 'குளோராஃபில்' என்றழைக்கப்படும் பச்சையம் உடையதாகும். இது சூரியக்கதிர்களை ஈர்த்து, அவற்றைக் கொண்டு தங்களுக்கு வேண்டிய உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. இந்தச் செயற்பாட்டைப் பொருத்தவரை இவை காளான்களிலிருந்த வேறுபடுவதாக உள்ளன. காளான்கள் மற்ற தாவர வகைகளைச் சார்ந்ததாக உள்ள்து. நீர் நிலைகளின் ஓரங்களில் உள்ள கரைகளில் பச்சை நிறப் பாசி படர்ந்திருப்பதைக் காணலாம்.
பேருருக் கொண்ட கடற்பாசிகள் பச்சையத்தோடு மஞ்சள் நிறங் கலந்த மாநிறமுடையதாக இருக்கும். மாநிற கடற்பாசிகளில் சிலவற்றின் தண்டு சற்று பருத்தும் தடித்தும் இருக்கும். இவை கயிறுகளாகப் பயன்படுவதும் உண்டு. சில 'ஐயோடின்’ எனும் கறையத்தைத் தருகின்றன.
கடல் தாவரங்களிலேயே ஒருவகை சிவப்பு நிறக் கடற்பாசி கண்ணைக் கவர்பவைகளாகும். சிவப்பு வண்ணஞ் சார்ந்த பலவகை கடற் பாசிகள் உண்டு. இச்சிவப்பு வண்ண கடற் பாசிகள் பெருமளவில் கடலடியில் இருப்பதால் நீரின் நிறமே மாறுவதும் உண்டு. செங்கடற் பகுதி செந்நிறமாகத் தோற்றமளிப்பதற்குக் காரணம் அக்கடலடியில் எண்ணற்ற முறையில் வளர்ந்து பரவியுள்ள செந்நிறக் கடற்பாசிகளே யாகும்.
கடற்பாசிகள் ஈரணுக்களுள்ள நுண் உறைகளைக் கொண்டதாகும். கடற்பாசி அழியும் போது இந் நுண் உறைகள் கடலடியில் தங்கி விடும். இவ்வாறு காலங்காலமாகத் தங்கிச் சேர்ந்து வரும் இந் நுண்ணுறைகள் பல மீட்டர் பருமனுடையதாகச் சேர்ந்துள்ளது.