இளையர் அறிவியல் களஞ்சியம்/கணை நோய்
கணை நோய் : இந்நோயை ஆங்கிலத்தில் ‘ரிக்கெட்ஸ்' என்று அழைப்பார்கள். இது ஒரு குழந்தை நோயாகும். ஆறு மாதத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் உள்ள குழந்தைகளையே இந்நோய் பெரிதும் பீடிக்கிறது. தேவையான அளவு உடலில் வைட்டமின் D சத்து இல்லையெனில் இந்நோய் உண்டாகும். இந்நோய் கண்ட குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது. இதனால் குருத்து எலும்பு வலுவான எலும்பாக மாற இயலாமற் போகிறது. எனவே, உடல் எலும்புகள் கோணல் மாணலாக வளைய நேரிடுகிறது. வலுக் குன்றிய குருத்தெலும்பு வளைந்த நிலையிலேயே பருத்து விடுவதால் உடல் அமைப்பு விகாரமாகிவிடுகிறது.
இந்நோய் கண்ட குழந்தையின் தசைகள் தளர்வடைந்திருக்கும். இரவில் தலையில் நிறைய வியர்க்கும், அடிக்கடி பேதியும் இருமலும் இருக்கும். கல்லீரலும் மண்ணிரலும் பெருத்துவிடும். வயிறு ஊதிய நிலையில் பானை போன்றிருக்கும். இதனால் குழந்தை யால் நடக்க இயலாமல் போக நேர்கின்றது.
இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தையின் இரத்தத்தில் கால்சியமும் பாஸ்வரமும் குறைந்து விடுகிறது. இதனால் குருத்தெலும்பு வலுவடைய முடிவதில்லை. எனவே, கணை நோயால் பாதிக்கப்படும் குழந்தைக்கு கால்சியமும் பாஸ்வரமும் நிறைந்த சத்துணவு கொடுக்கப்படவேண்டும். வைட்டமின் 'டீ' உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி அதிக அளவில் குழந்தையின் உடலில் படுமாறு பார்த்துக் கொள்வது நல்லது.