இளையர் அறிவியல் களஞ்சியம்/கந்தகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கந்தகம் : 'சல்ஃபா' (Sulphur) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது ஓர் அலோகத் தனிமம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆரியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களால் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டது.

சல்பர் (அல்லது) கந்தகம் சல்வர்ட் (Sulverd) என்னும் சம்ஸ்கிருத சொல்லிலிருந்தும் சல்புயூரியம் (Sulphurium) என்னும் லத்தீன் சொல்லிலிருந்தும் பெறப்பட்டது என்பர்.

இது பூமியில் தனியாகவும் மற்ற உலோகங்களுடன் கலந்தும் கிடைக்கிறது. இது அமெரிக்கா, சிசிலி, ஜப்பான், ஸ்பெயின், அயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளில் பெருமளவில் கிடைக்கிறது. எரிமலைப் பகுதிகளில் கந்தகப் படிவுகள் ஏராளமாக உண்டு. கந்தகம் 1908ஆம் ஆண்டில்தான் கண்டறியப்பட்டது.

நிலத்தினுள் உள்ள கந்தகத்தை வெளிக் கொண்டுவர பூமிக்குள் மூன்று குழாய்களைச் செலுத்துவார்கள். ஒன்றின்மூலம் 1800 வெப்பமுள்ள வெந்நீரைப் பாய்ச்சுவார்கள். இது பூமியினுள் உள்ள கந்தகத்தை விரைந்து உருகச் செய்கிறது. மற்றொரு குழாய் மூலம் அழுத்திய காற்று உட்செலுத்தப்படுகிறது. இதனால் நன்கு உருகிய கந்தகம் காற்றோடு சேர்ந்து இடைக்குழாய் வழியாக வெளியேறுகிறது. இவ்வாறு காற்றோடு வெளிவரும் உருகிய கந்தகத்தை தட்டுகளில் பாய்ச்சித் தேக்கிக் குளிரச் செய்வார்கள். குளிர்ந்தபின் கட்டிகளாக இருக்கும் கந்தகத்தை பொடித்து எடுப்பார்கள். இவ்வாறு எடுக்கப்படும் கந்தகம் சுத்தமான கந்தகமாகும்.

கந்தகம் இன்றைய நவீன வாழ்வில் இன்றியமையாத் தேவைப் பொருளாக அமைந்துள்ளது, இரசாயனத் தொழில்கள் பலவற்றுக்கும் கந்தகமே மூலப் பொருளாக அமைந்துள்ளது. தீக்குச்சியிலிருந்து வெடி மருந்துவரை அனைத்துக்குமே கந்தகம் அடிப்படைப் பொருளாக அமைந்துள்ளது. இரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கந்தகமே மூலப்பொருள். நோய் போக்கும் மருந்துகள் பலவற்றிலும் கூட கந்தகம் இடம் பெறுகிறது.

கந்தகத்திலிருந்து தயாரிக்கப்படும் கந்தக அமிலம் இரசாயனப் பொருட்கள் பலவும், சாயங்கள், வெடிப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ரேயான் நூலிழைகள், செயற்கை ரப்பர் போன்றவற்றை உருவாக்க கந்தக அமிலமே தேவைப்படுகிறது.

நம் உடல் நலத்திற்கும் கந்தகம் தேவைப்படுகிறது. வெங்காயம் போன்ற காய்கறிகளிலும் முட்டையிலும் கந்தகம் இயற்கையாகக் கிடைக்கிறது.