இளையர் அறிவியல் களஞ்சியம்/கரியமில வாயு

விக்கிமூலம் இலிருந்து

கரியமில வாயு : 'கார்பன் டை யாக்சைடு' என அழைக்கப்படும் கரியமில வாயு பிராண வாயுவாகிய ஆக்சிஜனோடுஇணைந்த கூட்டுக் கலவை வாயுவாகும். கரியமில வாயுவுக்கு நிறம் இல்லை. நாம் எப்போதும் கரியமிலவாயுவை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம். நம்மைப் போன்றே பிற உயிரினங்களும் கரியமில வாயுவை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. எனினும் தாவர இனங்கள் அனைத்தும் கரியமில வாயுவை சுவாசித்து ஆக்சிஜனாகிய பிராணவாயுவை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால் இவ்விரண்டு வாயுக்களும் காற்று மண்டலத்தில் சமச்சீர்நிலையைப் பெறமுடிகிறது.

தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை காற்றிலுள்ள கரியமிலவாயுவையும் நீரையும் கொண்டு சூரியக் கதிரின் துணையோடு உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. கார்பன் டையாக்சைடாகிய கரியமிலவாயுவில் கார்பன், ஆக்சிஜன் ஆகிய இரு வெவ்வேறு தனிமங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொருகார்பன் அணுவுடனும் இரு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்திருக்கும்.

எண்ணெய், மரம் போன்றவை எரியும் போது கரியமிலவாயு வெளிப்படும். கரியமில வாயு காற்றைவிட கனமானது. கரியமில வாயுவை நன்கு குளிரவைத்தால் திரவ நிலை அடையும், இதைத் திடப்பொருளாகவும் உருமாற்றம் செய்ய இயலும்.

நெருப்பை அணைக்கக் கரியமிலவாயுவையே பயன்படுத்துவர்.

தற்காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவைகளை எரி பொருளாக எரிப்பதாலும், தொழிற்சாலைகள் வெளிவிடும் கரியமிலவாயு ஆகியவைகள் காற்றில் காணும் கார்பன்டையாக்சைடின் அளவினை அதிகரிக்கச் செய்கின்றன. மற்றும் காடுகளை அழித்ததின் மூலம் ஒளிச்சேர்க்கை குறைந்து காற்று மண்டலத்தில் மாசுகள் அதிகம் சேருகின்றன. இக்காரணத்தால் பூமியின் புறப்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கவும் காரணமாகின்றது. இதுவே பசுமை இல்ல விளைவு (Green house effect) என அழைக்கப்படுகிறது.