உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/கம்போஸ்ட்

விக்கிமூலம் இலிருந்து

கம்போஸ்ட் : மனிதர்கட்கும் மற்ற உயிரினங்கட்கும் உணவு தேவைப்படுவது போலவே பயிரினங்கட்கும் உணவு தேவைப்படுகிறது. பயிரினங்கட்குத் தேவைப்படும் சத்துணவே 'உரம்' ஆகும். நாம் எப்படி பல்வேறு உணவுப் பொருட்களை கலந்து கூட்டுணவாக உட்கொள்கிறோமோ அதே போன்று பயிர்கட்கும் 'கம்போஸ்ட்' எனும் கூட்டுரத்தைத் தயாரித்து அளித்தால் அவை செழிப்பாக வளர்ந்து வளம் தரும். இக்கூட்டு உரத்தைத் தயாரிக்க மக்கும் தன்மை குறைந்த மரம், சணல், பருத்தி, காகிதம் போன்றவை பயன்படா. எளிதில் மக்கிக் கூழ் தன்மை பெறவல்ல புல்பூண்டுகள், இலைதழைகள், பறவை மற்றும் கால்நடைகளின் கழிவுப்பொருட்கள் ஆகியவைகளே அதிகம் தேவைப்படும். இவற்றோடு சாம்பலையும் மண்ணோடு கலந்து அடுக்குகளாக அமைத்து கூட்டு உரம் தயாரிப்பார்கள். இத்தகைய அடுக்குகளின் பக்கம் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வுரக்குழி மழையில் நனையாமலிருக்கவும் வெயிலில் காய்ந்து போகாமல் இருக்கவும் கொட்டகை அமைப்பதும் உண்டு. இத்தகைய பாதுகாப்புடன் அமைக்கப்படும் கம்போஸ்ட் உரக்குழிகளில் பாக்டீரிய சிதைவு அதிக அளவில் ஏற்படும். அப்போது மிகு வெப்பம் உண்டாகும். இவ்வெப்பம் கம்போஸ்ட் உரத்தயாரிப்புக்கு மிக அவசியமாகும். இதனால் தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அழிய நேரிடுகிறது. இதற்காக உண்டாகும் வெப்பம் வெளியேறிவிடாமல் தடுக்க மண்ணால் உரக்குழியை நன்கு பூசுவதும் உண்டு.

இவ்வாறு பல நாட்கள் வைத்திருந்தால் குழியில் உள்ள உரம் நன்கு மக்கி கருநிறக்குழைவாக ஆகிவிடும். உரக்குழியை உருவாக்கும்போதே உண்டாகும் அமிலத்தன்மையைக் குறைக்க சுண்ணாம்பையும் சேர்ப்பர்.

பொதுவாக கம்போஸ்ட் உரம் பல நுண்ணுயிர்களை தருவதின் மூலம் பெரிய மூலக்கூறுகள் சிதைவுபட்டு தாவரங்களால் உறிஞ்சத்தக்க உரங்களைத் தருகின்றன.