இளையர் அறிவியல் களஞ்சியம்/காது

விக்கிமூலம் இலிருந்து

காது : உடலில் உள்ள ஐம்புலன்களில் காது ஒன்றாகும். காது கேட்க உதவும் கருவியாக அமைந்துள்ளது.

ஒலி அலைவடிவில் பரவுகிறது என்பது நீங்கள் அறிந்ததே. ஒலி அலைகளை வாங்கி உணரச் செய்யும் காது மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டு இயங்குகிறது. அவை முறையே புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும்.

புறச்செவியில் செவிமடலும் செவிப் பறையை நோக்கிச் செல்லும் செவிக் குழாயும் அமைந்துள்ளன. செவிமடலால் காதுக்கு அழகும் பாதுகாப்பும் தருவதைத் தவிர வேறு பெரும் பயன் ஏதும் இல்லை. ஆடு மாடு போன்ற பிற உயிரினங்கள் தங்கள் காது மடலை திருப்பியும் வளைத்தும் வரும் ஒலியை சேகரித்து உள்ளே அனுப்ப இயலும், ஆனால் மனிதனின் காதுகளை வளைக்கவோ திருப்பவோ முடியாது. இதனால் ஒலி வரும் திக்கை நோக்கிக் காதைத் திருப்பி ஒலியைப் பெற நேர்கிறது. காது மடலிலிருந்து உள் நோக்கிச் செல்லும் செவிக்குழாய் சுமார் இரண்டு செ.மீ. நீளமுள்ளது. இதுவே ஒலியை செவிப்பறை நோக்கிக் கொண்டு செல்கிறது.

நடுச்செவி என்பது ஒரு குறுகிய அறை போன்றது. இது செவிப்பறைக்கும் உட்செவிக்கும் இடையே அமைந்துள்ளது. இஃது செவிக்குழல் எனும் மெல்லிய குழாயால் தொண்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியப் பணி நடுக்காதில் உள்ள காற்றழுத்தத்தை வெளியிலுள்ள காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப சமநிலையில் வைத்திருப்பதாகும்.

நடுக்காதுக்கு அப்பால் உள்ள பகுதி உட்செவி ஆகும். இது ஒரு சங்கு போன்ற அமைப்பைக் கொண்டது. காது கேட்பதற்கு இதுவே அடிப்படையாகும். இப்பகுதி மூளை நரம்போடு இணைக்கப்பட்டுள்ளது.

செவிக்குழல் வழியே வரும் ஒலியானது மிகமென்மையான செவிப்பறையை அடைந்து அதிர்வேற்படுத்துகிறது. செவிப்பறையின் அதிர்வுஅடுத்து அமைந்துள்ள மூன்று சிற்றெலும்புகளையும் அதிர்வடையச் செய்கிறது. இதன் விளைவாக காது திரவத்தில் அசைவு உண்டாகிறது. இந்த அசைவே நரம்புகள் மூலம் ஒலியை மூளைக்கு அனுப்பி உணரச் செய்கிறது. இவ்வாறு தான் நாம் ஒலியுணர்வைப் பெறுகிறோம்.

காதினுள் உள்ள இம்மென்மையான உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பழுது பட்டால்கூட நம்மால் ஒலியுணர்வை முழுமையாகப் பெறமுடியாமல் போகிறது. எனவே, காதைப் பாதுகாத்தல் என்பது மிகமிக அவசியமாகும்.

எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாக நேரிடுகிறது. உரக்கப் பேசினால் மட்டும் கேட்கும். சிலருக்கு மிக உரக்கக் கத்தி பேசினால் மட்டுமே காது கேட்கும்.

இத்தகையவர்கள் ஒலியைப் பெருக்கித் தரவல்ல காதொலிக் கருவியைக் காதில் பொருத்திக்கொண்டால் காது நன்கு கேட்கும். முழுச் செவிடுகட்கு இத்தகைய கருவிகளால் பயனேதும் இல்லை.

எனவே, காதில் அழுக்கு அடையாமல் கவனித்துக் கொள்ளவேண்டும். அழுக்கை அகற்ற 'காது குடைதல்’ என்ற பெயரால் குச்சியை கொண்டு காது குடையாமல் அதற்கென்று உள்ள பஞ்சுக் குச்சிகளையே பயன் படுத்த வேண்டும். மருத்துவரிடமே முறையாகக் காட்டி அழுக்கை அகற்ற வேண்டும்.

பலத்த சத்தம், அதிக இரைச்சல் உள்ள இடங்களில் வேலை செய்வோர் காதுகளில் ஒலி தடுப்பி (Muff) களைப் கொண்டு பணி செய்தால் காது கேளாமையைத் தவிர்க்கலாம்!

காதின் உட்புற அமைப்பு