இளையர் அறிவியல் களஞ்சியம்/காந்த சக்தி

விக்கிமூலம் இலிருந்து

காந்த சக்தி : இரும்பு, எஃகு போன்ற பொருட்களை ஈர்த்திழுக்கும் ஆற்றல் உள்ள கனிமம் காந்தம் என அழைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகட்டு முன்பே இந்தியர்களும் சீனர்களும் எகிப்தியர்களும் காந்தம் பற்றி அறிந்திருந்தனர். அதன் தன்மைகளைத் தெரிந்துகொண்டு கடற்பயணம் போன்ற சமயங்களில் திசையறியப் பயன்படுத்தி வந்தனர். ஏனெனில் காந்த ஊசியின் ஒரு முனை வடக்கு நோக்கியே திரும்பி நிற்கும். மற்றொரு முனை தெற்கு நோக்கி இருப்பதால் எளிதில் திசை அறிய முடிந்தது.

காந்தம் இயற்கையாகவும் கிடைக்கிறது. 'மாக்னடைட்’ எனும் அயக்காந்தக்கல் கனிமமாக இயற்கையாகவே மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது. இதுவே இயற்கைக் காந்தமாகும். மற்றொரு வகைக் காந்தம் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. காந்தத் தூண்டுதலால் காந்தமாகக் கூடிய பொருளை காந்தமாக்குவது செயற்கைக் காந்த முறையாகும். இதுவே 'செயற்கைக் காந்தம்’ என்று அழைக்கப்படுவது. இயற்கைக் காந்தத்தைவிட வலிமையானது செயற்கைக் காந்தமாகும். செயற்கைக் காந்தமே உலகில் மிக அதிக அளவு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

சாதாரணமாகக் காந்தத்தை இரு வகையினவாகப் பிரிப்பர். அவை நிலைக்காந்தம், தற்காலிகக் காந்தம் என்பனவாகும்.

காந்தத் தூண்டலால் காந்தமேற்றப்பட்ட தேனிரும்பு காந்தத் தன்மை பெறுகிறது. இதிலேற்றப்பட்ட காந்த சக்தி குறைந்த கால அளவே நீடிப்பதால் இது தற்காலிக காந்த முறையாகிறது. நிலைத்த காந்த சக்தியை உண்டாக்க எஃகு சிறந்த தனிமமாக உள்ளது. காந்த ஆற்றல் காந்தத்தின் இருமுனைகளிலேயே மிக அதிக அளவில் அமைந்துள்ளது. நிக்கலும் கோபால்ட்டும் முக்கியமான காந்தப் பொருட்களாக உள்ளன.

அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாக 'மின் காந்தம்’ அமைந்துள்ளது. காப்பிட்ட மின் கம்பிகளை இரும்புக்கோலில் சுற்றி அதன் வழியே மின்சாரத்தைப் பாய்ச்சினால் அக்கம்பு காந்தத் தன்மையைப் பெறுகிறது. மின்னோட்டத்தை நிறுத்தினால் அக்கம்பியும் கோலும் காந்தத்தன்மையை இழந்துவிடுகின்றன. இம் முறையில்தான் மின்காந்தம் உருவாக்கப்படுகிறது.

இன்றைய நம் வாழ்வில் நீங்கா இடம் பெற்றுள்ள மின்விசிறி, வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி எல்லாமே மின்காந்த சக்தியைக் கொண்டு இயங்குவனதாம்.