இளையர் அறிவியல் களஞ்சியம்/கான்கிரீட்
கான்கிரீட் : இது ஒருவகை கெட்டிக் காரையாகும். கட்டிடங்களுக்கான கடைகால், தூண் அணைக்கட்டு, அலை தாங்கிச் சுவர் போன்றவைகட்கு கான்கிரீட் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இக்காலத்தில் நவீனக் கட்டிடக் கலையில் கான்கிரீட் முக்கிய பங்கு வகிக்கிறது.
கான்கிரீட் கலவையை உகுவாக்கக் குறிப்பிட்ட விகிதங்களில்சிமெண்ட், உடைத்த கல், ஜல்லி, மணல் ஆகியவற்றைக் கலந்து, நீர் விட்டுக் கலக்கி உருவாக்கப்படுகிறது. இஃது செங்கல் முதலானவற்றைவிட உறுதியும் வலுவும் நிறைந்ததாகும்.
பெரும் உத்திரங்கள் கான்கிரீட் கலவையும் இரும்பும் கொண்டு உருவாக்கப்படுகிறது. எஃகுக் கம்பிகளை வேண்டிய வடிவில் வளைத்துப் பின்னி அதனிடையேயும் வெளிப் புறத்திலும் கான்கிரீட் கலவையைக் கொட்டி இறுக்கமடையச் செய்கிறார்கள். இதுவே வலுவேற்றிய கான்கிரீட் ஆகும். கான்கிரீட் கலவை மேலும் மேலும் இறுக்கமடைந்து வலுவடைய சில நாட்கள் நீரில் ஊற வேண்டும். எனவே, சில வாரங்கள் கான்கிரீட் பகுதிகளில் நீரைத் தேக்கியோ அல்லது தொடர்ந்து நனைக்கப்பட்ட கோணி அல்லது வைக்கோல் பிரிகளைக் கொண்டு சுற்றப்படுகிறது. இக்காலத்தில் பல மாடிக் கட்டிடங்கள் கான்கிரீட் கொண்டே கட்டப்படுகின்றன.
மற்றும், பெரிய பாலங்களும், அணைக்கட்டுகளும் கடல் அரிப்பைத் தடுக்கும் அலை வாங்கித் தடுப்புச் சுவர்களும் கான்கிரீட் கொண்டே கட்டப்படுகின்றன. கான்கிரீட் மிக உறுதியானது மட்டுமல்ல; சிக்கனமானதும்கூட. இதனால் அரிப்பு, தீ விபத்து போன்றவைகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை.