இளையர் அறிவியல் களஞ்சியம்/கானல் நீர்
கானல் நீர் : பாலைவனத்தில் நல்ல வெயில் நேரத்தில் நிற்கும் ஒருவர் தூரப் பகுதிகளைப் பார்க்கும்போது அங்கே தெளிந்த நீரோடு கூடிய ஏரி இருப்பதுபோல் தோன்றும். அங்கே விரைந்து சென்று பார்த்தால் நீர்ப் பகுதிபோல் காட்சியளித்த பகுதியும் விலகிச் சென்று கொண்டே இருக்கும். நெருங்கிப் போகும்போது அப்படி ஒரு தடாகம் அங்கு இல்லாமலே போகும். அதேபோன்று நல்ல வெயில் நேரத்தில் தார்ச் சாலையைப் பார்த்தால் தூரத்தில் சாலையில் தெளிந்த நீர் தேங்கியிருப்பதுபோல் தோற்றமளிக்கும். சாலையில் வரும் வண்டிகள் எதிரே இருக்கும் கட்டிடங்கள் ஆகியவற்றின் பிம்பங்கள் கூட அதில் நன்கு பிரதிபலித்துத் தெரியும். ஆனால், அந்த இடத்தை நெருங்கிச் சென்று பார்த்தால் அப்படி நீர் ஏதும் அச்சாலையில் இருக்காது. ஆனால், அதுபோன்றே நீர், பிம்பத் தோற்றங்கள் தொலைவில் மீண்டும் தோற்றமளிக்கும். இவ்வாறு மாயத் தோற்றம் தருவதையே கானல் நீர் (Mirage) என அழைக்கிறோம்.
சாதாரணமாக ஒளி பிரதிபலிப்பின் மூலமே பிம்பங்கள் உண்டாக முடியும். இத்தகைய பிரதிபலிப்பு நீரில் உண்டாகும். ஆடியில் ஏற்படும். ஆனால் கடுமையான வெயிலின்போது தார்ச்சாலையிலும், பாலைவன மணலிலும் இத்தகைய பிரதிபலிப்புப் பிம்பங்கள் ஏற்படக் காரணம், அப்பகுதியிலுள்ள காற்று ஆகும். காற்றில் ஒளி ஊடுருவிச் செல்லும் இயல்புடையது. ஆனால், அதற்கு மேலேயுள்ள காற்றில் அவ்வளவு வெப்பமிருக்காது. இவ்வாறு வெப்பக் காற்றும் வெப்பமிலாக் காற்றும் அருகருகாக இருக்கும்போது, வெவ்வேறான வெப்ப நிலை காரணமாக அவற்றின் அடர்த்தியும் வேறுபடும். அப்போது அவற்றின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளிக்கதிர்கள் பிரதிபலிக்கவே பிம்பம் தெரிகிறது. இதுவே கானல் நீராகவும் அதில் பிம்பங்கள் தெரிவதாகவும் நமக்குத் தோன்றுகிறது.