இளையர் அறிவியல் களஞ்சியம்/காஸ்மிக் கதிர்கள்
காஸ்மிக் கதிர்கள் : விண் எங்கும் பரவியுள்ள காஸ்மிக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது இன்னும் முழுமையாக அறியப்படாமலே உள்ளது. இது குறித்துப் பன்னெடுங்காலமாகத் தொடர் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இக்கதிர்கள் இப்பூமியின் மீதும் கடல் மீதும் இரவு பகலாக இருந்துகொண்டே இருக்கிறது.
காஸ்மிக் கதிர்கள் அணுத் துகள்களாலானது என்பதே இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படும் செய்தியாகும். அவை பூமியின் காற்று மண்டலத்திற்கு அப்பால் வானில் பயணம் செய்வதாகக் கண்டறிந்துள்ளார்கள். இவைகளின் பயண வேகம் ஒளியின் வேகத்தை ஒத்ததாகும். காஸ்மிக் கதிர்களில் சில நமது காற்று மண்டலத்திற்குள் ஊடுருவி நிலப்பகுதியை வந்தடைவதும் உண்டு.
அணுத் துகள்களாலான காஸ்மிக் கதிர்கள் 'இளம் காஸ்மிக் கதிர்கள்’ (Primary Cosmic rays) என அழைக்கப்படுகிறது. இவை காற்றில் அணுவோடு மோதுகின்றன. இந்த மோதலினால் புதிய அணுத்துகள்கள் உருவாகின்றன. இவையும் மிகு வேகத்தில் இளம் அணுத்துகள் பயணம் செல்லும் அதே திசையில் செல்கின்றன. இந்தப் புதிய அணுத் துகள்கள், இரண்டாந்தர காஸ்மிக் கதிர்கள் (Secandary Cosmic rays) என அழைக்கப்படுகின்றன. இவை மீண்டும் மற்ற அணுக்களோடு மோதுகின்றன. இதன்மூலம் அதிக அளவில் புதிய துகள்களை உருவாக்குகின்றன. இவ்வாறு மாபெரும் ஒளியலை மழையாகப் பூமியை இக்கதிர்கள் தாக்குகின்றன. இவ்வாறு ஒரு புரோட்டான் எனப்படும் அணுவின் மையத்திலுள்ள நேர்மின், விண் வெளியிலிருந்து வெளிப்பட்டு, ஆயிரம் மீட்டர் பரப்பளவை ஒளிக்கதிர்களால் நிரப்புகிறது.
இத்தகைய காஸ்மிக் கதிர்களின் மாபெரும் தாக்குதல்கள் பூமியின்மீது இடையறாமல் நிகழ்ந்து வந்தபோதிலும் நமக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதே தாக்குதல் இன்று நேற்றல்ல, இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தின் மீது ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது. ஆனால், அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தக் காஸ்மிக் கதிர்களின் தோற்றுவாய் எது என்பது இன்னும் விஞ்ஞானிகளுக்குப் புலப்படாத மர்மமாகவே இருந்து வருகிறது. இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் விண் வெளி ஆய்வுகளின் விளைவாக ஒரு வேளை இந்த மர்மம் துலக்கம் பெறலாம்.