இளையர் அறிவியல் களஞ்சியம்/கார்போஹைட்ரேட்

விக்கிமூலம் இலிருந்து

கார்போஹைட்ரேட் : உடலுக்கு ஊட்டம் தரும் மாச்சத்து 'கார்போஹைட்ரேட்’ என அழைக்கப்படுகிறது. நம் உடலுக்கு வேண்டிய இன்றியமையாச் சத்துப் பொருட்களில் இதுவும் ஒன்றாகும் . இதில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்கள் அடங்கியுள்ளன. இச்சத்து அதிக அளவில் தாவரப்பொருட்களிலிருந்தும் குறைந்த அளவு மிருகங்களிடமிருந்தும் பெறுகிறோம்.

கார்போஹைட்ரேட்டாகிய மாச்சத்துப் பொருட்கள் சர்க்கரையுள்ளவை, சர்க்கரையற்றவை என இரு பகுதிகளைக் கொண்டதாகும். சர்க்கரை, குளுகோஸ் போன்றவை சர்க்கரை வகையினவாகும். அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு இவற்றில் உள்ள ஸ்டார்ச்சுகள் சர்க்கரையற்றவைகளாகும்.

மரம், சணல் முதலியவற்றிலிருந்து செல்லுலோசைப் பெறுகிறோம். இது சர்க்கரை இல்லாத கார்போஹைட்ரேட் ஆகும். இச்செல்லுலோசிலிருந்து செயற்கைப்பட்டு துணி, காகிதம், ஆல்கஹால், பிளாஸ்டிக், திரைப்படத் தகடுகள் ஆகியன உருவாக்கப்படுகின்றன. செல்லுலோசுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வெடி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. செல்லுலாய்டு என்ற குழைமப்பொருள் செல்லுலோசிலிருந்தே உருவாக்கப்படுகிறது.

குளுகோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை (Blood sugar) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இச்சர்க்கரைச் சத்துதான் இரத்தத்தில் கலந்து உடலுக்கு வேண்டிய ஆற்றலை தருகிறது. இரத்தத்தில் உள்ள குளுகோஸின் செறிவு சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. எட்டு மணியிலிருந்து 12 மணிவரை ஆகாரம் ஏதும் இல்லாமல் இருக்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான மனிதரின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 100 மி.லி.யில் 70இல் இருந்து 100 மி. கிராம் இருக்கும். பெரும்பாலான மனிதர்களுக்குச்சாப்பிடும் முன் இந்த அளவு சர்க்கரை இருக்கும், இந்தத் திட்ட அளவிற்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்கும். இந்தத் திட்டஅளவிற்கும் குறைவான அளவு சர்க்கரை இருந்தால், இது ஹைபோகிளைசிமியா (Hypoglycemia) என அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக மூளைக்குச் செல்லும் குளுகோஸ் அளவு குறைவுபடுமாதலால் மயக்கம் அடைய வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று திட்ட அளவிற்கு அதிக அளவு சர்க்கரை இருந்தால் அதுவே ஹைபர்கிளைசிமியா (Hyperglwcemia) என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சிறு நீரகம் அதிக அளவு சர்க்கரையை சிறுநீரின் மூலம் வெளியேற்றுகிறது. இதுவே 'நீரிழிவு’ என்ற நோய்க்குக்காரணமாகிறது. 'இன்சுலின்’ என்னும் என்ஸைம் இரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை குறைக்கிறது.